சீனாவிலிருந்து சிகர் லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை ! மகிழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சிவகாசி, உள்ளிட்ட பகுதிகளிலும்,அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதனைச் சுற்றியும், ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 ஆண்டுகளை தாண்டி செயல்பட்டு வருகிறது.
ஒரு தீப்பெட்டி உற்பத்தி செய்ய 40-க்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், இந்த தொழில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா சிகர் லைட்டரால் முற்றிலும் பாதிக்கப்பட்டு, இரவு பகலுமாய் இரண்டு ஷிப்ட் முறையில் நடைபெற்று வந்த இந்த தொழில் சீனா சிகர் லைட்டர் விற்பனையால், தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உரிமையாளர்கள் நிறுவனங்களை நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தீப்பெட்டி தொழில் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து மத்திய அரசிடம் நேரடியாக சென்று முறையிட்டனர். அதன் பலனாக கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 20-க்கும் கீழ் விற்பனை செய்யப்படும், சீனா சிகர் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நடவடிக்கை சற்று ஆறுதலாக இருந்தாலும், அதனால் தீப்பெட்டி விற்பனையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தீப்பெட்டி தொழில் சங்க நிர்வாகிகள் வட மாநிலங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டதில், சீனா சிகர் லைட்டரின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்து அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தீப்பெட்டி தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து இது தொடர்பான முழு ஆவணங்களையும், சமர்ப்பித்து, சீனா சிகர் லைட்டரின் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி கள ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்து, சீனா சிகர் லைட்டரின் அனைத்து விதமான உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு தீப்பெட்டி தொழில் சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
— மாரீஸ்வரன்.