வங்கதேசம் – புரட்சிகள் அடிக்கடி வெடிக்கும் பூமி புரட்சிகளின் சுருக்கமான வரலாறு !
வங்கதேசம் – புரட்சிகள் அடிக்கடி வெடிக்கும் பூமி – புரட்சிகளின் சுருக்கமான வரலாறு !
1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வங்கதேசம் தனது முதல் ராணுவப் புரட்சியைச் சந்தித்தது. ராணுவப் புரட்சியில் நாட்டின் தலைவரான முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டார். இந்தப் புரட்சிக்குக் காரணம் ராணுவ அதிகாரிகளான மேஜர் எஸ்.எப். ரஹ்மான் மற்றும் ரஷீத் ஆகியோர் ஆவர்.
அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் முஜிபுர் ரஹ்மானைப் புரட்சி மூலம் கவிழ்த்த அவர்கள், ரஹ்மானைக் குடும்பத்தோடு கொடூரமாகக் கொலை செய்தனர். அப்போது வெளிநாட்டுக்குப் போயிருந்ததால் ரஹ்மானின் மகள்களான ஷேக் ஹசீனா மற்றும் ஷேக் ரஹேனா ஆகியோர் மட்டும் உயிர் பிழைத்தனர். குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
1975ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி மீண்டு் ஒரு புதுப் புரட்சி வெடித்தது. ரஹ்மான், ரஷீத் ஆகியோர் அமைத்த அரசை, பிரிகேடியர் கலீத் மொஷாரப் தலைமையிலான ராணுவத்தினர் கவிழ்த்தனர். ராணுவத் தளபதியாக இருந்த ஜியாவுர் ரஹ்மான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி படை வீரர்கள் திரண்டு வந்து ஜியாவுர் ரஹ்மானை விடுவித்தனர்.
மொஷாரப்பை படுகொலை செய்தனர். மொஷாரப் இந்தியாவுக்குச் சாதகமானவர், இந்தியாவுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பரவிய தகவலே மொஷாரப்புக்கு எதிராக ராணுவத்தினர் புரட்சி நடத்தக் காரணம். பின்னர் ஜியாவுர் ரஹ்மான் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது.
ஜியாவுர் ரஹ்மான் ஆட்சிக் காலத்தில் 21 முறை புரட்சிகள் வெடித்தன. ஆனால் அத்தனையும் முறியடிக்கப்பட்டன. 1981ம் ஆண்டு மே 30ஆம் தேதி ஜியாவுர் ரஹ்மான் சிட்டகாங்கில் ராணுவ வீரர்கள் நடத்திய கலகத்தின்போது கொல்லப்பட்டார். இதையடுத்து ராணுவத் தளபதியாக இருந்து வந்த ஜெனரல் எர்ஷாத் கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரை அடக்கினார். கலகத்தில் ஈடுபட்ட ராணுவ மேஜர் ஜெனரல் அபுல் மன்ஸூமை கொலை செய்தார். ஜெனரல் எர்ஷாத் ஆட்சியையும் கைப்பற்றினார். பின்னர்த் தன்னை நாட்டின் சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்டார்.
1996ம் ஆண்டு பிரதமராக இருந்த கலீதா ஜியாவின் உத்தரவை ஏற்க மறுத்து ராணுவத் தளபதி அபு சலே முகம்மது நசீம் புரட்சி செய்ய முயன்றார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டுப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
இதேபோலத் தற்போதைய பிரதமர் ஹசீனாவும்கூட பலமுறை குறி வைக்கப்பட்டுள்ளார். 1975ல் நடந்த புரட்சியின்போது சகோதரியுடன் சேர்ந்து உயிர் தப்பிய அவர் பின்னர் எதிர்க்கட்சித் தலைவியாக இருந்தபோது 2004ம் ஆண்டு கிரனேட் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கலீதா ஜியாவின் மகன்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
2009ல் ஹசீனாவின் பிரதமர் பதவியை ஏற்ற 2 மாதத்தில் பங்களாதேஷ் ரைபிள் படையினர் பெரும் கலகத்தில் குதித்தனர். இதை அடக்க முயன்ற ராணுவ வீரர்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். பெரும் சிரமத்திற்குப் பின்னர்க் கலகத்தை அடக்கியது ராணுவம். இந்த நிலையில் தற்போது பெரும் புரட்சி ஏற்பட்டு ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பதவி ஏற்குமாறு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுபெற்ற முகமது யூனுஸுக்கு மாணவர் சங்கங்களின் தலைவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று 0808.2024ஆம் நாள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
– ஆதவன்