வங்கதேசம் : கலவரங்களும் புரட்சிகளும் ஏன் ?
வங்கதேசம் : கலவரங்களும் புரட்சிகளும் ஏன் ? 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 14ஆம் நாள் பாகிஸ்தான் இங்கிலாந்தின் பிடியிலிருந்து விடுதலை அடைந்தது. அந் நாடு தன்னை ஓர் இஸ்லாமியக் குடியரசு நாடாக அறிவித்துக்கொண்டது. பாகிஸ்தான் நிலவியலுக்குத் தொடர்பில்லாத மாநிலமாக இருந்த கிழக்கு வங்கம் விடுதலைக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் என்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவாகக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா விடுதலை பெற்ற பிறகு கராச்சியில் மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர்,“விடுதலைப் பெற்ற பாகிஸ்தானில் இனி உருது ஆட்சிமொழியாக இருக்கும்” என்று அறிவித்தார்.
பலத்த கைத்தட்டலுக்கிடையில், கூட்டத்திலிருந்த ஒரு 27 வயது இளைஞன் உரத்த குரலில்,“மிஸ்டர் ஜின்னா, பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக இருக்கும் உருது மொழியோடு என் மொழியான வங்கமொழியும் இருக்கவேண்டும்” என்று பேசினார். ஜின்னாவை எதிர்த்துப் பேசிய அந்த இளைஞன் அடித்து நொறுக்கப்பட்டான்.
தொடர்ந்து பேசிய ஜின்னா,“உருது மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும்” என்பதைக் கேட்ட, நொறுக்கப்பட்ட இளைஞன் தன் உடலில் சக்தியை வரவழைத்துக்கொண்டு மீண்டும்.“மிஸ்டர் ஜின்னா என் வங்கமொழி ஆட்சிமொழி இல்லை என்றால், என் தாய்மொழியான வங்கமொழிக்காகப் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை உருவாக்குவேன்” என்று கூறிமுடித்தவுடன், மீண்டும் அந்த இளைஞன் அடித்து நொறுக்கப்பட்டான்.
21 பிப்ரவரி 1952ஆம் ஆண்டு வங்கமொழியை அதிகாரப்பூர்வமாக மொழியாகத் தங்கள் தாய் மொழியாகப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரத்தின்போது நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்த மாணவர்களின் மரணம் உலகின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஐ.நா. பிப்.21ஆம் நாளை “உலகத் தாய்மொழி நாளாக அறிவித்தது.” இதற்கு அடிப்படையாக இருந்தவர் நொறுக்கப்பட்ட அந்த இளைஞன்தான்.
தொடர்ந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் அடிக்கடி போராட்டங்களும், கலவரங்களும் வெடிக்கும். இராணுவம் போராட்டங்களையும் கலவரங்களையும் ஒடுக்கும். மீண்டும் கலவரங்கள் வெடிக்கும், இராணுவம் ஒடுக்கும் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது.
பின்னர் வங்கதேசம் உருவாக நொறுக்கப்பட்ட அந்த இளைஞன் ‘முக்திவாகினி’ என்ற பெயரில் ஒரு புரட்சிப் படையைக் கட்டமைத்தான். 1971இல் இந்தியாவின் உதவியோடு வங்கதேசம் என்ற ஒரு நாடு உருவானது. ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து மொழிக்காக ஒரு தேசத்தை உருவாக்கிய அந்த இளைஞன் தன் 50 வயதில் வங்கதேசத்தின் முதல் குடியரசுத் தலைவரானார். அவன் இளைஞனின் பெயர்தான் ஷேக் முஜிப்புர் ரஹ்மான்.
1975ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த ஷேக் முஜிப்புர் ரஹ்மான் கொல்லப்பட்டார். தொடர்ந்து வங்கதேசத்தில் போராட்டங்களும், கலவரங்களும், புரட்சிகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக அமைந்தது.
இப்போது ஏன் வங்கதேசத்தில் கலவரம் என்றால், ஷேக் முஜிப்புர் ரஹ்மான் மகள் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்துகொண்டு கடந்த 30 ஆண்டுகள் வங்கதேசத்தை ஆண்டு வருகிறார். வங்கதேச விடுதலைப்போரில் ஈடுபட்ட குடும்பங்களின் வாரிசுகளுக்கு 30% அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட 2018ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பவே அதை ஹசீனா கிடப்பில் போட்டுவிட்டார். தற்போது அதை நடைமுறைப்படுத்த முனைந்தார்.
இதற்கிடையில் 30% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதி மன்றம் 30% இடஒதுக்கீட்டை இரத்து செய்து, 5% வேண்டுமானால் இடைக்காலமாக வைத்துக்கொள்ளலாம் என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, வழக்கை ஆகஸ்ட்டு 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றம் இடைக்காலமாக வழங்கிய 5% இடஒதுக்கீட்டை எதிர்த்தே இப்போதைய போராட்டங்கள், புரட்சிகள் வங்கதேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பிரதமர் ஹசீனா பொறுப்பிலிருந்து விலகி, இந்தியாவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தின் விடுதலைக்காக இளமைக்காலம் முதல் போராடிய முதல் குடியரசுத் தலைவர் ஷேக் முஜிப்புர் ரஹ்மான் சிலைகள் உடைக்கப்படுவது என்பதைக் கண்டு நெஞ்சம் கொதிக்கிறது. நாட்டின் விடுதலைக்கான தன் இளமைக் காலங்களைப் பலிகொடுத்த ஷேக் முஜிப்புர் ரஹ்மான் பற்றிய வரலாறு அறியாமல், கோபம் கொண்டு போராடும் வங்கதேச மாணவர்கள் எந்த வரலாற்றைப் படைக்கப்போகிறார்கள் என்பதற்கான இலக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
போராட்டங்கள் குறித்து ஹசீனாவின் மகன் செய்தியாளர்களிடம் பேசும்போது,“வங்கதேசத்திற்குப் புரட்சிகளும் ஆட்சிக் கவிழ்ப்புகளும், இராணுவ ஆட்சியும் ஒன்றும் புதிது அல்ல. வங்கதேசத்தில் அமைதி திரும்பும்போது என் அம்மா ஹசீனா நாடு திரும்புவார். அப்போது அவர் அரசியலிலிருந்து விலகி இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆசியக் கண்டத்தில் இலங்கையை அடுத்து வங்கதேசத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. அடுத்து எந்த நாடாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
–ஆதவன்