வீட்டுப்பத்திரத்தை திருப்பித்தராத வங்கி ! நீதிமன்றம் போட்ட வட்டிக் கணக்கு !
வீட்டுப்பத்திரத்தை திருப்பித்தராத வங்கி ! நீதிமன்றம் போட்ட வட்டிக் கணக்கு ! அங்குசம் !
வாங்கிய வீட்டுக்கடனை வட்டியோடு கட்டியும் ஆறு மாத காலத்திற்கும் மேலாக வீட்டின் அடமானப் பத்திரங்களை திருப்பித்தராமல் அடாவடி செய்த தனியார் நிதி நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், பத்திரத்தை திருப்பித் தரும் வரையில் நாளொன்றுக்கு ஐயாயிரம் அபராதம் கட்டச் சொல்லியும் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், சாத்தனூரை சேர்ந்த ஜெ.வள்ளி – ஜெய்சங்கர் தம்பதியினர், வீட்டு அடமானக்கடனுக்காக, தானே-யை தலைமையிடமாகக் கொண்டு கும்பகோணத்தில் கிளை அமைத்திருக்கும் IIFL HOME FINANCE LTD நிறுவனத்தை நாடுகிறார்கள். வழக்கமான வங்கி நடைமுறைகளை தொடர்ந்து கடந்த 22.06.2022 இல் ரூ4,12,583.00 கடனாகவும் பெறுகிறார்கள். கடன் வாங்கியதிலிருந்து சுமார் இரண்டாண்டு காலம் எந்த சிக்கலும் இல்லாமல் செல்கிறது. விவசாயத்தில் ஏற்பட்ட எதிர்பாராத நட்டம் காரணமாக, ஏப்ரல் 2024 முதலாக முறையாக மாத தவணையை கட்ட முடியாத சிக்கலை எதிர்கொள்கிறார்கள் வள்ளி- ஜெய்சங்கர் தம்பதியினர்.
கடன் வசூல் பிரிவினர் என்பதாகக்கூறி, நான்கு ஐந்து குண்டர்கள் கும்பலாக வந்து தங்களை அவமானப்படுத்தியதாக குறிப்பிடுகிறார், ஜெய்சங்கர். வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் ஆபாசமாக பேசுவது, தெருவில் நாலு பேரு பார்க்கும் விதமாக சத்தமாகவும் அசிங்கமாகவும் பேசுவது, பலரும் பார்க்கும்படி வீட்டில் நோட்டீஸ் ஒட்டி போட்டோ எடுப்பது என பல்வேறு வகைகளில் தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக வேதனைப்படுகிறார் ஜெய்சங்கர்.
இந்நிலையில்தான், வேறு எங்கேனும் கடன்பட்டாவது இவர்களது சிக்கலை தீர்த்துவிட வேண்டுமென்று மெனக்கெட்டு பணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். IIFL நிறுவனத் தரப்பிலும் பேசி, ஒன் டைம் செட்டில்மெண்டுக்கு ஏற்பாடு செய்கிறார். அதன்படி, 06.12.2024 இல் ஒரே தவணையாக ரூ.2,10,000.00 கட்டிவிடுகிறார். கட்டியதற்கான ரசீதையும் வாங்கிக் கொள்கிறார். ஆனாலும், வங்கியில் கொடுத்த வீட்டின் அசல் பத்திரத்தையும், பதிவுத்துறையில் பதிவான எம்.ஓ.டியையும் ரத்து செய்யாமல் அலைக்கழிக்கிறார்கள்.
ஏதோ, ஒருநாள் இருநாட்கள் அல்ல. சுமார் 70 நாட்கள் ஆகியும் எம்.ஓ.டி. கேன்சல் செய்யவில்லை. வீட்டுப்பத்திரத்தையும் தரவில்லை. தினமும் 36 கிமீ தூரம் அலைய முடியவில்லை. வேறு வழியின்றி, வக்கீல் ஒருவரை பிடித்து நோட்டீஸ் அனுப்புகிறார். அதற்கு பதிலளித்த IIFL வங்கி நிர்வாகம், “அடமானமாக எழுதிக் கொடுத்த ஆவணம் தொலைந்துவிட்டது. தேடிக் கண்டுபிடித்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்பதாக குறிப்பிடவே அதிர்ச்சியில் உறைந்த வள்ளி-ஜெய்சங்கர் தம்பதியினர் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள். அதன் தலைவர் டி.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி ஆகியோர் வழக்கை விசாரித்து, IIFL வங்கி தரப்பில்தான் தவறு நிகழ்ந்துள்ளது என்பதை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்கிறார்கள். வங்கி தரப்பில் ஒரே நாள் ஆஜரானதோடு சரி. அதன்பிறகு, நீதிமன்றம் பக்கம் செல்லவே இல்லை. பாதிக்கப்பட்ட வள்ளி-ஜெய்சங்கர் தரப்பில் வழக்கறிஞர் பி.சந்திரபோஸ் வாதாடி அவர்களுக்கான நீதியை பெற்றுத்தந்திருக்கிறார்.
விசாரணையின் முடிவில், ஆர்.பி.ஐ.யின் 13.09.2023 தேதியிட்டு வெளியான சுற்றறிக்கையின் அடிப்படையில், அசல் ஆவணங்களை திருப்பித்தராத தனியார் வங்கி நிர்வாகம் நாளொன்றுக்கு ஐந்தாயிரம் வீதம் அபராதத்தொகையுடன் பத்திரங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும்; கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ஒரு இலட்சம்ரூபாய் அபராதமும்; வழக்கு செலவுக்காக ரூபாய் பத்தாயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 45 நாட்களுக்குள் கட்டத் தவறினால், 12% வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, கரூர் வைஸ்யா வங்கி ராஜபாளையம் கிளையிலும் இதே போல கடனை திருப்பிச் செலுத்திய பின்பும் பத்திரங்களை திருப்பித்தரவில்லை என்ற குற்றச்சாட்டில், தென்காசி சிவகிரியை சேர்ந்த மாரித்துறை என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ஏழு நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று அசல் பத்திரங்களை திருப்பித் தர வேண்டுமென்றும்; வாடிக்கையாளரை அலைக்கழித்த வங்கியின் கிளை மேலாளர் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ25,000.00 வழங்க வேண்டுமென்றும் அதிரடியாக உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இதுபோன்ற அவமானங்களும் அலைக்கழிப்புகளும் தொடரத்தான் செய்கின்றன என்பதையே இந்த விவகாரம் எடுத்துரைக்கிறது.
— வே.தினகரன்