அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேனீக்கள் வளர்ப்பு…. “கொட்டும்” சுவாரஸ்யங்கள்…

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனீக்கள் வளர்த்தால் தேன் சேமிக்க முடியும். தேனினைச்  சேமித்தால் தான் நல்ல வருமானம் ஈட்டவும் முடியும்.  வெளியில் விற்பனைக்கு நாம் அனுப்பி வைக்கும் தேன், தூய்மையான மேலும் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதே நமக்கான மன திருப்தியாகும். பத்தாண்டுகளாக தேனீக்கள் வளர்ப்பு, தேன் சேமிப்பு, தேன் விற்பனை என தேனீக்களை விட மிக சுறுசுறுப்பாக இயங்கி வருகிறோம்.” எனச் சொல்கின்றனர் பழனி ஆயக்குடியில் வசிக்கின்ற ஜூவைரிய்யா பாத்திமா – ஈசாக் தம்பதியினர்.

நாம் தொடுத்த சந்தேகங்களுக்கு, இருவரும் மாறி மாறிக் “கொட்டிய” சுவாரஸ்யங்கள் இனி…

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தேனீக்கள் வளர்ப்பு...முதலில் தேனீக்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

தேனீக்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அதன் பிரிவுகள் அலாதியானது. ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. மலைத் தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ ஆகும். இருட்டில் வாழ்வன இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ, கொசுத் தேனீ. வெளிச்சத்தில் பகலில் வாழ்வது மலைத் தேனீ, கொம்புத் தேனீ. பொதுவாக தேனீ வளர்ப்புப் பண்ணைகளில் இருட்டில் வாழுகின்ற  தேனீக்கள் தான் அதிகளவில் வளர்க்கப்படும். இருட்டில் வாழும் இத்தாலியத் தேனீ ஆனது, மற்ற தேனீக்களைக் காட்டிலும் அதிக அளவு தேனினைச் சுமந்து வரும் ஆற்றல் கொண்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தேனீக்கள் வளர்ப்பு, தேன் சேகரிப்பு பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு இத்தாலியத் தேனீக்கள் வளர்ப்பு தான் அதிக லாபம் தரும்.

பெட்டிகளில் வைத்து தேனீக்கள் வளர்க்கிறோம். அவைகள் நம்மைக் “கொட்டி” விடாதா?

தேனீக்கள் என்றாலே ‘கொட்ட”த் தான் செய்யும். அவைகளை நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே கொட்டும். பயம் தேவை இல்லை. மலைத் தேனீ தவிர மற்ற தேனீக்கள் கொட்டினால் நமக்குத் தீமை ஏதுமில்லை. கொட்டிய இடத்தில் கொஞ்சம் வீங்கும். பின்னர் அதுவே சரியாகி விடும். இது மட்டுமல்ல.

ராணித் தேனீ, ஆண் தேனீக்களுக்குக் கொடுக்குகள் இல்லை. அவைகள் நம்மைக் கொட்டாது. பணித் தேனீக்கள் எனப்படும் வேலைக்காரத் தேனீக்களுக்கு மட்டும் கொடுக்குகள் உண்டு. அந்த வேலைக்காரத் தேனீயும் ஒருவரைக் கொட்டி விட்டால் அது இறந்து விடும். (அவ்ளோ மானஸ்தன்). இதன் பின்னர் தான் இருக்கு “கலவரம்”.

வேலைக்காரத் தேனீயின் கொடுக்கு தான் அதன் உயிர் நாடி. நம்மைக் கொட்டிய இடத்தில் அதன் கொடுக்கு அங்கேயேப் பதிந்திருக்கும். அந்த இடத்தில் தேனீக்கள் மட்டுமே நுகரக் கூடிய நறுமணம் காற்றில் பரவும். அதனை நுகரும் இதர தேனீக்கள் “நம்ம ஆளு யாருக்கோ” ஆபத்து என்றெண்ணி, அந்தத் தேனீ கொட்டிய இடத்தில் மற்ற தேனீக்கள் சூழ்ந்து நம்மைக் கொட்டத் தொடங்கி விடும். இதற்கும் பயப்படத் தேவையில்லை. அங்கு கொஞ்சம் வீங்கும். பின்னர் சரியாகி விடும். இதனால் கெடுதல் ஏதுமில்லை.

தேனீ வளர்ப்புப் பெட்டி ஒன்றின் உள்ளே எத்தனை தேனீ இருக்கும்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை தேனீக்கள் இருக்கும். அவைகளில் ராணித் தேனீ என்பது ஒன்றே ஒன்று தான் இருக்கும். (அவுங்க தான் ராணி மகாராணி). சில நூறு ஆண் தேனீ, ஆயிரக்கணக்கில் வேலைக்காரத் தேனீ உள்ளடக்கியது தான் தேனீ வளர்ப்புப் பெட்டி.

இதில் அதிக ஆயுள் பலம் ராணித் தேனீக்கு மட்டும் தான். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். ஆண் தேனீக்களும், வேலைக்காரத் தேனீக்களும் அறுபது நாட்களுக்குள் “அவுட்”. இறந்து விடும்.

சரிங்க. தேனீக்கள் பெருக்கம் பின்னர் எப்படி?

அந்தப் பெட்டியில் இருந்து ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுவாக இருக்கும் ஒரு ராணித் தேனீயினை, சில நூறு ஆண் தேனீக்கள் வரவேற்று வெளியே வானினை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த ஒரு ராணித் தேனீயுடன் ஒரு ஆண் தேனீ இனச்சேர்க்கை ஆகும். அந்த ஆண் தேனீ உடன் இறந்து விடும். இது போல அடுத்தடுத்து தொடர்ந்து ஐந்து ஆண் தேனீக்கள், ராணித் தேனீயுடன் இனச்சேர்க்கை ஆகும். சுபயோக சுப நேரத்தில் ராணித் தேனீ கர்ப்பம் ஆகி விடும்.

ஆண் தேனீக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, கர்ப்பமான ராணித் தேனீயினை (வளைகாப்பு நடத்துவது போல) மிகவும் கௌரவமாக அழைத்து வந்து பாதுகாப்பாக பெட்டிக்குள் விட்டு விடும். ராணித் தேனீ ஒரு நாளைக்கு இரண்டாயிரம் முட்டைகள் இடும். அவைகளில் இருந்து ஆண் தேனீக்கள் மிக மிகக் குறைவாகவும், வேலைக்காரத் தேனீக்கள் மிக  மிக அதிகமான எண்ணிக்கையிலும் உருவாகும்.

அந்த வேலைக்காரத் தேனீக்களின் “வேலைகள்” என்ன?

பூமிப் பரப்பில் அயல் மகரந்தச் சேர்க்கை வாயிலாக நமது வேளாண் மண்டலத்தை உயிர்ப்பித்து வைத்துள்ளன அந்த வேலைக்காரத் தேனீக்கள். காடுகளில், தோப்புகளில், விளை நிலங்களில், தோட்டங்களில் பரந்து சென்று பூக்களில் உள்ள தேனினை உறிஞ்சிச் சுமந்து வருபவைகளே வேலைக்காரத் தேனீக்கள்.

வாசனைப் பூக்கள் தவிர இதர பூக்கள் தான் அவைகள் தேன் உறிஞ்சும் மையங்கள். சூரியகாந்தி, எள்ளுப்பூ, முருங்கைப்பூ, பாகற்பூ, புளியம்பூ, வேப்பம்பூ, கொய்யாப்பூ, மாம்பூ, தென்னை, சப்போட்டா போன்றவைகளில் தேன் அதிகம். மாம்பூக்களைத் தேனீக்கள் அதிகம் விரும்பிப் போகும்.

தேனீக்கள் வளர்ப்பு...தேனீக்கள் வளர்ப்புப் பெட்டிகள் எங்கே வைப்பது நல்லது?

பொதுவாகக் குடியிருப்புப் பகுதிகள் உள்ள இடங்களில் சரி வராது. தென்னை மரத் தோப்பு, மாந்தோப்பு, விவசாயப் பயிர்கள் வளரும் இடங்களில் தேனீக்கள் வளர்ப்புப் பெட்டி வைப்பது, தேன் சேமிப்புக்கு மிகவும் சிறந்தது. ஓரிடத்தில் தள்ளித் தள்ளி பதினைந்து இருபது பெட்டிகள் வைக்கலாம். நாங்கள் DR  இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகள் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகள் என நாற்பது இடங்களில் வைத்துள்ளோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் கேரளா மன்னார்க்காடு பகுதியில் பதினைந்து இடங்களில் எங்களின் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகள் இயங்கி வருகின்றன.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தேன் என்பதனை எவ்விதமாகத் தயார் செய்கிறீர்கள்?

தேன் அடையினைக் கைகளால் பிழிந்து பெரும்பாலோர் உற்பத்தி செய்கிறார்கள். நாங்கள் அவ்வாறு செய்வது இல்லை. தேன் பிரித்தெடுக்கும் கருவி என்று தனியாகவே உள்ளது. அதனுள்ளே தேன் அடைகளை போட்டு விடுவோம். அதன் இயக்கத்தில் தேன் அடைகள் பிழியப்பட்டு தனியாகத் தேனும், தனியாகத் தேன் அடைகளும் வெளியேறும். அந்தத் தேன் அடைகளை மீண்டும் பெட்டிக்குள்ளே வைத்துப் பயன் படுத்தலாம். அந்தப் பிரித்தெடுக்கும் கருவியில் பிழிந்து வெளியேறும் தேனினைச் சுத்தப்படுத்துவதிலும் முறைகள் வந்துள்ளன.

இந்திய உணவுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி நாங்கள் தயாரிக்கும் தேனினைத் தூய்மைப்படுத்தி விற்பனைக்கு அனுப்புகிறோம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அந்தப் பாத்திரத்தின் உள்ளே அதனைத் தொட்டு விடாமல் ஒரு பாத்திரத்தில் தேனினை ஊற்றி, தண்ணீர்ச் சூட்டினில் தேனீனை இளஞ்சூடாக வேக வைத்து இயற்கை முறையில்  தூய்மையானத் தேனினைத் தயாரிக்கிறோம்.

உங்களது தேன் விற்பனை எப்படி? தேனீக்கள் வளர்ப்பில் வேறேதும் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்வது உண்டா?

மதிப்புக் கூட்டுப் பொருள் என்பது எங்களின் இயற்கையான தேன் மெழுகு தயாரிப்பு தான். பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில், இந்தத் தேன் மெழுகின் பங்கானது மிக அவசியம் ஆனது. ஒரு கிலோ தேன் மெழுகு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு எங்களிடம் நேரிடையாக வந்து வாங்கிச் செல்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு எப்படியும் முந்நூரில் இருந்து ஐநூறு கிலோ தேன் மெழுகு நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எங்களது DR  இயற்கை தேன் ஆனது, ஆண்டு ஒன்றுக்கு ஆறு டன் (ஆறாயிரம் கிலோ) அளவுக்குத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதுவே அடுத்த ஆண்டில் பத்து டன் அளவுக்கு தேன் உற்பத்தி செய்திட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.” என்கின்றனர் பழனி ஆயக்குடி பகுதியில் வசித்து வரும் ஜூவைரிய்யா பாத்திமா – ஈசாக் தம்பதியினர்.

தேனீக்கள் வளர்ப்புக்கு முன் என்ன தொழில் செய்தீர்கள்?

தேனீக்கள் வளர்ப்புக்கு நாங்கள் (கணவன், மனைவி, மகன், மகள்) வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன்பாக பழனியிலும் தாராபுரத்திலும் துரித உணவு நிலையங்கள் நடத்தி வந்தோம். வேலைக்கு ஆட்கள் வைத்து இரண்டு ஊர்களிலும் நன்றாகவும் லாபகரமாகவும் போய்க் கொண்டு இருந்தது. மனதளவில் துரித உணவுகள் தயாரித்து விற்பதில் என் மனதுக்கு சமாதானம் ஆகவில்லை. அதன் பின்னரே இயற்கையாகவே தேனீக்கள் வளர்ப்பு, தேன் சேகரிப்புத் தொழிலுக்கு முழுமையாக மாறி வந்தேன். இப்போது என் மனது நிறைவாக உள்ளது.

தேன்மெழுகு எவ்விதம் தயாரிக்கப்படுகிறது?

தேனீக்கள் வளர்ப்புப் பண்ணைகளில் இருந்து தயாரிப்பது தான், இயற்கையான தேன்மெழுகு ஆகும். மிகவும் நாளான தேன் அடைகளை தண்ணீருக்குள் வைத்து குறிப்பிட்ட அளவு சூடாக்கும் போது, அதன் சக்கைகள் தனியாகவும் மெழுகுக் கரைசல் தனியாகவும் வெளியேறும். மெழுகுக் கரைசலை வார்ப்படங்கள் எனப்படும் மோல்டுகளில் நிரப்பி பதப்படுத்தி தான் இயற்கையான தேன்மெழுகு தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைக்காரகள் எங்களிடம் வந்து வாங்கிக் கொள்வார்கள். இந்த இயற்கையானத் தேன்மெழுகு ஆனது பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கும் முக்கியமாகத் தேவைப்படுவதால், அந்த நிறுவனங்கள் அதன் முகவர்கள் மூலமாக வந்து வாங்கிக் கொள்வார்கள்.

அது என்ன தேன்மெழுகு மெழுகுவர்த்தி?

பெரும்பாலும் கடைகளில் விற்பனைக்கு இருப்பது வெள்ளை மற்றும் பல்வேறு நிறப்பூச்சு கொண்டு சற்றே இரசாயன திரவம் கலந்து தயாரிக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஆகும். அதன் வெளிச்சத்தில் புகை கருமையாகும். ஒரிஜினல் தேன்மெழுகு மெழுகுவர்த்தியானது எரிந்து ஒளி பரவும் போது கரும்புகை படராது. அதுமட்டுமல்ல. சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. இதில் என்னவென்றால், சாதாரண மெழுகுவர்த்தியைக் காட்டிலும் ஒரிஜினல் தேன்மெழுகு மெழுகுவர்த்தி மூன்று மடங்கு விலை அதிகம்.

தேனீக்கள் வளர்ப்பு மற்றும் தேன் சேகரிப்புக்கு பயிற்சிகள் ஏதேனும் உண்டா?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகங்களில் விரும்புகின்ற நபர்களுக்குப் பயிற்சிகள் அவ்வப்போது தரப்படுகின்றன. நான் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளேன். நேரிடையாக எங்களின் இயற்கை தேனீ வளர்ப்புப் பண்ணைகளில் வந்து பயிற்சி பெறுபவர்கள் உண்டு. பல நூறுக்கும் மேற்பட்டோருக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன்.

சுத்தமான தேன் என்று எவ்விதம் தெரிந்து கொள்வது.?

சுத்தமான தேன் என்பது இந்திய உணவுக் கழகத்தின் வழிகாட்டுதல் வாயிலாகத் தயாரித்து அதில் fssai  முத்திரை பெற்றவைகளே சுத்தமான தேன். எங்களது DR  இயற்கை தேன் உற்பத்தியானது இந்திய உணவுக் கழகத்தின் முத்திரை பெற்றதாகும்.

சுத்தமான தேன் என்பதைத் தெரிந்து கொள்ள, இரண்டு துளி தேன் சொட்டுகளை தண்ணீரில் விடுவது, காகிதத்தில் விடுவது, மணலில் விடுவது, ஒரு தீக்குச்சியைத் தேனில் முக்கி எடுத்து அதனை உரசிப் பார்ப்பது எல்லாமே நமது கற்பிதங்கள் தான். அவைகள் நூற்றுக்கு நூறு சான்றாகாது.

தேனீக்கள் வளர்ப்பு...தேன் அடைகளில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட இயற்கை வழி தேனினை, இந்திய உணவுக் கழகத்தின் வழிகாட்டுதல் வாயிலாக இரட்டை அடுக்கு வேக வைத்தல் முறைப்படி உற்பத்தி செய்யப்படும் தேன் தான் சுத்தமான தேன். மேலும் தேன் வாங்கி வைத்துப் பயன்படுத்தாமல் இருந்தாலோ சில மாதங்கள் ஆனாலோ தேனிருக்கும் கீழ்ப்பகுதியில் உறைதல் படிமம் காணப்படும். இது வேறொன்றுமில்லை. நம் வீட்டில் தேங்காய் எண்ணெய் பனிக் காலங்களில் உறைந்து விடுவது போலத்தான். கீழே படிமமாக உறைந்து காணப்படுவதால்  தேன் ஆனது கெட்டுப் போய்விட்டது, காலாவதியாகி விட்டது என்று எண்ணத் தேவையில்லை.

ஈசாக் தொடர்பு எண். 99940 87710 

—   ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.