செண்டை மேளமெல்லாம் இல்லை … வனம் எங்கும் பறவைகளின் இசை வழிந்தோடியது !
சிறுகாஞ்சொறிகள் , சேராங்கொட்டை மரங்களும் வழிநெடுக சித்த மருத்துவமாய்க் கண்சிமிட்டின! ;- பறவை நோக்கலில் (watching Bird )கிடைத்த சுவாரஸ்ய அனுபவங்கள்!
”விழாவில் செண்டை மேளமெல்லாம் வைத்து தொடங்கவில்லை! அதற்குப் பதிலாக வெண்கன்னக் குக்குறுவான்களும், செம்மார்பு குக்குறுவான்களும், செம்மீசை சின்னான்களும் குக்…குக்…குக்…. என தொடக்க இசை அமைக்க குக்குறுவானுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ‘குட்று…குட்று…குட்று’ என வெண்கன்னக் குக்குறுவானுடைய (வொயிட் சீக்டு பார்பெட்) தங்கள் குரல் நாண்களை வாத்தியங்களாக உருமாற்றி மேளத்தைக் கொட்ட அதிரும் இசை அரங்கேறியது! “நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த செம்மீசை சின்னான் ஒன்று அதன் குரல் நாணளால் கூப்பாடு போட்டு வரவேற்றதைக் கண்டு வியந்துபோனேன்.” …
பகலிலும் இரவிலும் கானகங்களிலும் நீர்நிலைகளிலும் இடையறாது உணவு தேடிச் செல்லும் பறவைகளை பார்த்த நிகழ்வுகளை சுவாரசியத்தோடு பகிர்ந்து கொள்கிறார், அரசு சித்த மருத்துவரும் பறவைகள் ஆர்வலருமான மரு.வி.விக்ரம்குமார்.,MD(S) .
பறவைகளை முறையாகப் பார்த்து பதிவு செய்வதை ஆண்டு முழுவதும் செய்யலாம். இதன் மூலம் வலசை வரும் பறவைகளின் நடவடிக்கைகளையும் உள்ளூர் பறவைகளின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்யும்போது அவற்றின் இருப்பு உறுதிசெய்யப்பட்டு அதன்மூலம் சூழல் சீர்கேடுகள் மதிப்பிடப்படுகிறது. பறவைகளைப் பார்த்து முறையாகப் பதிவு செய்வதால் நாமும் இவ்வுலகின் சூழலுக்கு நம்மாலான உதவியைச் செய்ய முடிகிறது எனப் பெருமை கொண்டு மனம் மகிழலாம்.
“பறவைகள் நோக்குதல்” நிகழ்வு தமிழ்நாடு வனத்துறை உதவியோடு “காக்கைக் கூடு” குழுவினர்கள் ஏற்பாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கடந்த பிப்ரவரி 7-முதல் 9-ந்தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது.
மாமர, பலா மரங்களின் நிழலிலே ஈப்பிடிப்பான்கள் சிறப்பு அழைப்பளர்களாய்க் கலந்துகொள்ள உற்சாகமாகத் தொடக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆனது.
தேற்றான் மரங்களோ துவர்ப்பாய் வரவேற்க… கடுக்காய் மரங்களோ கம்பீரமாய் வீற்றிருந்தன! கழற்சிக் காய்களை எடுத்து கிலுகிலுப்பைப் போல குலுகுலுக்கி சிறுவர்களாய் உருமாறினார்கள் பலர்!
சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசை நோக்கி, பறவைகளை ரசிப்பதற்கு நடைப்பயணத்தைத் தொடங்கினோம். பறவைகள் வந்து செல்வதற்காக அனைத்துத் திசைகளிலும் மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன.
அதில் , யானைக் “சிறுக்காஞ்சொறிகள்” வழிநெடுக பரவி இருந்தது! “சேராங்கொட்டை மரங்களும்” சித்த மருத்துவமாய்க் கண்சிமிட்டின! இந்த மூலிகைகள் சார்ந்த மலையேற்றம் செய்து மனதை பலப்படுத்திக்கொண்டோம் வெள்ளிக்கிழமை பொழுது !
ஏலகிரிப் பறவைகளின் பாடல்களும் அழைப்புகளும், இரண்டாம் நாள் சனிக்கிழமை அதிகாலையிலேயே எழுப்பிவிட்டன. அங்கு இதமான குளிர் நிலவியது. குளிருக்குச் சுகமளிக்கும் நெருப்புபோல, பறவைகளின் சத்தங்கள் அமைந்தன.
காலை தொடங்கிய அவற்றின் இசைக் கச்சேரி நாள் முழுவதும் தொடர்ந்தது. வால் காக்கைகள் கொண்டு கரிச்சான்கள் “செம்மீசைச் சின்னான்” கொண்டைக்குருவி வெள்ளைக்கண்ணி போன்ற பறவைகள் “கூப்பாடு போட்டு ” வரவேற்றதைக் கண்டு வியந்துபோனேன். , அவற்றின் குரல்கள் செவிக்கு விருந்து படைத்தன.
காடுகளில் இருந்த காய்ந்த முள்வேலிகளில் கீச்சான் குருவிகள் ஓய்வெடுப்பதைப் பார்க்க முடிந்தது. கரிச்சான் குருவியில், ‘வெள்ளை வயிற்றுக் கரிச்சான்’ எனும் வகையைப் பார்த்தவுடன், அதை விட்டு நகர எனது விழிகள் மறுத்தன. உடல் முழுவதும் கருப்பு நிறம், வயிற்றுப் பகுதியில் வெள்ளை நிறம் எனக் கொள்ளை அழகு.
சற்றுப் பருத்தும் உயர்ந்தும் இருந்தால், பென்குயின்கள்போல மாயத்தோற்றத்துடன் ‘வெண்வயிற்றுக் கரிச்சான்கள்’ தோன்றுகின்றனவோ என்கிற எண்ணம் என் மனதில் ஓடியது.
பறவைகளைப் பார்த்துக்கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட எங்கள் “காக்கைக் கூடு குழு” , அருகிலிருந்த சிறு மலையைப் பார்த்ததும், ஞாயிற்றுக்கிழமை காலை “சுவாமிமலை” நடைப்பயணத்தை ( tracking) மலையேற்றமாக மாற்றினால் என்ன’ என்கிற எண்ணத்தோடு மலையில் ஏறத் தொடங்கினோம்.
பறவைகளோடு மரங்களையும் ரசித்துக்கொண்டு, மலையின் உச்சியில் ஓய்வெடுத்தோம். கழுகுகள் வட்டமிட்டு மேலே பறந்து வந்ததும் எழுந்திருந்தோம். அருகிலிருந்த கடுக்காய் மரத்தின் உச்சியில் ஆரஞ்சு மின்சிட்டு அமர்ந்திருந்தது. பசுமையான இலைகளில் அசையும் செம்மஞ்சள் நிறப் புள்ளியைப் போல அந்த மின்சிட்டு இலைகளின் பின்னணியில் இடம் மாறிக்கொண்டே இருந்தது.
அரை மணி நேரத்துக்குப் பிறகு கீழே இறங்கத் தொடங்கினோம். எண்ணிலடங்கா தட்டான்கள் எங்களோடு கீழிறங்கின. ‘நகரத்தில் கொசுக்களுக்கு பயந்து வாழும் வாழ்க்கையை புறந்தள்ளிவிட்டுப் பேசாமல் இந்தக் காட்டில் கொசுத் தொல்லையில்லாமல் வாழ்ந்தால் என்ன’ என்று மனதுக்குள் தோன்றியது.
தட்டான்கள் இருக்கும்போது, கொசுக்களைப் பற்றி என்ன கவலை? மலையேற்றத்துடன் கூடிய பறவை பார்த்தல் நிகழ்வு புத்துணர்ச்சி தரும் செவ்விளநீர் பானம் போல அமைந்தது.
அழிந்துவரும் பாறுக் கழுகுகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், தூக்கணாங்குருவிகளின் வாழ்க்கை, ஆந்தைகளின் இரவு, கண்ணகிப் பாதையில் பறவைகள், பறவைகளின் ஒலியியல், ‘ஈ பேர்டு’ வலைத்தளம், பள்ளி மாணவர்களின் பறவைகள் என நிறைய செய்திகள் செவிக்கும் கண்களுக்கும் இதமளித்தன.
ஒளிப்படக்கருவி, தொலைநோக்கியின் நுணுக்கங்கள், பறவைகளின் நுணுக்கங்கள் என இரண்டு நாள் பறவை உலாவில் நான் பார்த்த பறவைகளின் எண்ணிக்கை தந்த மகிழ்ச்சியை மேம்படுத்தின. பறவை பார்த்தல், வெளியுலகத் தொடர்பில்லா இயற்கை நெருக்கம் என மூன்று நாட்களும் இயற்கையோடு வாழ்க்கையை வாழ முடிந்தது.
கொடுத்த அனுபவம் எப்போதும் போல புத்துணர்ச்சியானது! பல முறை அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தாலும் இம்முறை வெவ்வேறு பருவ காலங்களில் விரவியிருந்த மரங்கள் குறித்து ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது மிகப்பெரும் மகிழ்ச்சியக் கொடுத்தது!
அக்ரி சக்தி செல்வமுரளி, விவசாயம் சார்ந்த நுணுக்கங்களைத் அவ்வபோது தனது பயணத்தோடு இணைத்து ஊக்க உரையாகப் பிரமாதப்படுத்தினார்! ‘
மூங்கில்கள் குறித்து விளக்கமாகப் பேசிய தினேஷ் அவர்களின் உரை புதுமையானது! ஆந்தைகளைப் பற்றியும், இந்திய கொம்பன் ஆந்தைகளைப் பற்றியும் ஆழமாகப் பதிவு செய்தார் !திரு.சிவா , காடுகள்… பாம்புகள்… யானைகள் குறித்த முகிலனின் உரை மறக்கவே முடியாதது! காக்கைக்கூடு திரு.செழியன் அவர்களின் உழைப்பு அபரிமிதமானது!
பறவை நோக்கல் சிறந்த அறிவியல் அறிவுத்தளம். இந்த நுழைவாயிலில் நாம் நம்மை நுழைத்துவிட்டால் நம்மையறியாமலேயே எளிமையான வாழ்க்கை முறைக்கு மாறி அழகான மகிழ்ச்சியான புது வாழ்க்கை முறையில் புதிய உலகை வலம் வரலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பெரும் பொருள்செலவுகள் எதுவுமில்லாத மனதிற்கினிய எளிய கானகப் பயணங்களும் அறிவியல் நுட்பத்தை அறிந்துகொண்ட அமைதியான வாழ்க்கை முறையையும் பறவைநோக்கல் நமக்கு கற்றுக் கொடுப்பதோடு அறிவுத்தளத்தில் நம்மை படைப்பாளிகளாகவும் மாற்றிவிடும் என்பதே இதன் சிறப்பு.
பறவைகள்… மலையேற்றம்… நிலாச்சோறு… இரவாடிகளைத் தேடிய இரவு… நட்பு… என மகிழ்ச்சியான மூன்று நாட்களைக் கொடுத்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்!
மரு.வி.விக்ரம்குமார்.,MD(S),
அரசு சித்த மருத்துவர், பறவைகள் ஆர்வலர்.