பவுத்தப் பண்பாடும் பண்டிகையும் !
பிறருக்கு ஈகை புரிவதற்காகவே மக்கள் பண்டிகைகளைக் கொண்டாடியுள்ளனர். பண்டிகை என்ற சொல்லுக்கு, பிறருக்கு ஈகை புரிதல் என்றே பொருளாகும். பண்டு + ஈகை = பண்டிகை. பண்டு என்றால் பழைய காலத்தில் என்பது பொருளாகும். பழைய காலத்தில் மக்கள் பிறருக்கு ஈகை புரிவதற்காக குறிக்கப்பட்ட நாட்களே பண்டிகை ஆகும். ஈகை பிறருக்குக் கொடுத்து உதவுதல்தானமளித்தல் ஆகும். அதாவது, ஏழை – எளிய மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைக் கொடுத்து உதவவேண்டும் என்பதற்காகவே பண்டைக்காலத்தில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டுள்ளது. படையல் படைப்பதோ. வழிபடுவதோ, சடங்குகள், பூசைகள் செய்வதோ பண்டிகைகளின் நோக்கமல்ல.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பசியோடும், பட்டினியோடும், நோயோடும் வாழ்ந்துள்ளனர். அதனைப் போக்குவது சிறந்த அறச்செயலாகும் என்று பவுத்த காப்பியம் மணிமேகலை விவரிக்கின்றது.அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் வாயிலாக மக்களின் பசித் துன்பத்தைப் போக்கியதாக மணிமேகலை கூறுகிறது.பசிக்கு உணவளிப்பவர் உயிர் கொடுத்தவர்களேயாவர் என்றும் கூறுகிறது.பிறருக்கு உணவளித்து உதவுதல் என்பது பொதுவான ஒன்றுதான். இருப்பினும் நலிந்தோர்க்கு ஈகை புரிதல் வேண்டும் என்ற நோக்கத்தோடு பவுத்த சங்கப் பெரியோர்கள் சில முக்கிய நாட்களை ஈகையுடன் கூடி தொழுகை நாட்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த நாட்களே பண்டிகையாக மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
போதிப் பண்டிகை
புத்தர் பரிநிர்வாணமுற்ற (இறந்த) நாள்தான் போகிப் பண்டிகை நாளாகும். ஆதி காலத்தில் போதிப் பண்டிகை என வழங்கப்பட்டு வந்தது. புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து பல நாள்கள் தியானத்தில் இருந்து வந்தார். தம்முடைய ஆழ்ந்த தியானத்தால் தருமநெறிகளைக் கண்டறிந்தார். தத்துவார்த்தமாக அவற்றைப் போதித்து வந்ததால் பகவான் புத்தரை ‘போதி நாதன்’ என்றும் ‘போதியடியான்’ என்றும் மகா போதியான்’ என்றும் வழங்கி வந்தார்கள். அதன் காரணமாக போதிநாதன் பரிநிர்வாணமடைந்த நாளைப் போதிப் பண்டிகையென்று வழங்கிவந்தார்கள். நாளடைவில் ‘போதிப் பண்டிகை’ என்பதைப் போகிப் பண்டிகை என்று மாற்றிவிட்டார்கள்.போதியென்றால் ஞானம் என்று அர்த்தம். அரசமரத்தின் கீழ் அமர்ந்து தூய்மையான மனதுடன் தியானித்த புத்தர் போதியை (ஞானத்தை) அடைந்தார். எனவே அம்மரம் போதி மரமென்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் புத்தரின் அடையாளமாக போதி எனும் சொல் ஆனது. போதியர், போதி மாதவன், போதி தருமன், போதி ராஜன் என்றெல்லாம் புத்தர் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் புத்தரின் பரி நிர்வாண நாளான மார்கழி கடைசி நாள் போதிநாளாக, போதிப் பண்டிகையாக குறிப்பிடப்படுகிறது.
போகிப் பண்டிகை என்பது புத்தரையே குறிப்பதாகும். போகி என்ற சொல்லுக்கு இந்திரன் என்பது பொருளாகும். பகவான்புத்தருக்கு ஆயிரம் பெயர்கள் இருந்திருக்கின்றது. ‘ஆயிர நாமத் தாழியான் திருவடி’ என்று மணிமேகலை காப்பியம் கூறுகிறது. ஆயிரம் பெயர்களைக் கொண்ட தரும சக்கரத்தான் திருப்பாதங்கள் என்பது அத்தொடரின் பொருளாகும்.’சகஸ்திரநாம பகவான்’ என்ற கமல சூத்திரம் கூறுகிறது. ஆயிரம் பெயர்களைக் கொண்ட பகவான் புத்தர் என்பதாகும். எனவே ஆயிரம் பெயர்களில் ‘இந்திரனே’என்ற பெயரும் புத்தருக்கு உரியதாகும்.
இந்திரன் என்ற சொல்லை அய்ந்து + இந்திரன் என்று பிரித்துப் பொருள் அறியவேண்டும். அய்ந்து இந்திரியங்களை அய்ம் பொறிகளை அடக்கி வென்றவன் அய்ந்திரன்.புத்தர் தன் அய்ந்து புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை வென்றவராதலால், அவரை இந்திரியங்களையும் வென்றவர் என்ற பொருளில் அய்ந்திந்திரன்-இந்திரன் என்று வழங்கி வந்தார்கள்.
”ஐந்தவித்தான் ஆற்றல் அகம்விசும்புளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி”
என்று திருக்குறளில் ‘இந்திரனே’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அய்ந்து புலன்களையும் அடக்கி வெற்றி கொண்டவனது ஆற்றலுக்குப் பகவான் புத்தராகிய இந்திரனே சான்று ஆவான் என்பது அந்தக் குறளின் பொருளாகும்.
”இந்திர கோமான விழாவணி விரும்பி
வந்து காண்குருஉ மணிமேகலா தெய்வம்
இந்திரரெனுக்கு மிறைவ நம்மிறைவன்
தந்த நூற் பிடகம்”
என்ற மணிமேகலை செய்யுளில்’இந்திரனே’ என்ற பெயர் பகவான் புத்தரையே குறிப்பதாகும். ஐந்து புலன்களையும் அடக்கி வெற்றி கொண்டவனது ஆற்றலுக்குப் பகவான் புத்தராகிய இந்திரனே சான்று ஆவான் என்பது அந்தக் குறளின் பொருளாகும்.
அக்காலத்தில் பகவான் புத்தருடைய கோயில்களை இந்திர வியாரமென்றே கூறுவர்.எனவே போகி என்ற பெயரும் இந்திரன் என்ற பெயரும் புத்தரையே குறிப்பதாகும். உண்மையில் ஆதியில் புத்தரை ‘இந்திரன்’ என்றும் அவரது மனைவி யசோதரையை இந்திராணி என்றும் அழைத்தனர். இந்திர விழாவொன்றும் இந்திர விழாக் கோலம் என்றும் இந்திர திருவென்றும் புத்தரை கொண்டாடினார்கள். எனவே ‘போகி’ என்ற சொல் இந்திரனாகிய புத்தரையே குறிப்பதாகும். போகிப் பண்டிகை புத்தர் பரிநிர்வாண (இறந்த) நாளேயாகும்.
போகிப்பண்டிகை சங்கராந்தி நாள் என்றும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மும்மணிகளாக இருப்பவைகள் ‘புத்தம், தம்மம், சங்கம்’ என்பவையாகும்.’புத்தம்’ என்றால் ஞானம்; ’தம்மம்’ என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகள்; ’சங்கம்’ என்றால் ஞானத்தினால் கண்டுணர்ந்த உண்மைகளை மக்களுக்கு போதித்து, வழிநடத்தும் இயக்கம். அச்சங்கத்தின் முதல் தலைமை வகித்தவர் புத்தர். எனவே புத்தர் “அறவர்,அறர்,அறவோர்,அறவாழி” என்றெல்லாம் அழைக்கப்பட்டார். மேலும், சங்கத்தின் அறர், சங்கத்தின் அறவோர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.
பொங்கல் பண்டிகை
போகிப் பண்டிகைக்கு மறுநாளாகிய தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகை என்றும், சங்கராந்திப் பண்டிகை என்றும் கொண்டாடி வருகின்றார்கள். சங்கராந்தியாகிய பொங்கல் பண்டிகையும் புத்தருக்காக கொண்டாடப்படும் பண்டிகையே ஆகும்.
சங்கராந்தி என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள வரலாற்று உண்மை நன்கு விளங்கும்.சங்கரர் + அந்தி = சங்கராந்தி என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அந்தி என்றால் முடிவு, இறுதி, இறத்தல், மறைதல், பரிநிர்வாணம் என்பது பொருளாகும். சங்கரன் என்ற பெயர் ஆதிகாலத்தில் புத்தருக்கு உரிய சிறப்புப் பெயராகும். சங்கம் + அறன் = சங்கரன். அதாவது சங்கம் வைத்து அறம் வளர்த்தவர் ஆதலால் அவருக்குச் சங்கரன் என்ற பெயர் ஏற்பட்டது. ஆகவே சங்கரர் + அந்தி என்றால் சங்கரராகிய புத்தர் அந்தியடைந்த (இறுதியடைந்த) பரிநிர்வாணமுற்ற காலம் என்பது பொருளாகும். புத்தர் இறந்த நாளையும் அதைத் தொடர்ந்து வந்த மூன்று நாட்களையும் அவரது நினைவைப் போற்றும் நாட்களாகக் கொண்டாடி வந்தார்கள். இன்றும் கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்த நாளையும் அதைத் தொடர்ந்து வரும் சில நாட்களையும் துக்க தினங்களாக அந்தியடைந்த நாட்களாக அனுசரிப்பதைக் காணலாம்.புத்தருக்கு இருந்த ஆயிரம் பெயர்களில் சங்கரன் என்பதும் ஒன்றாகும்.
சங்கராந்திய புண்ணிய காலம்
”பொங்கலிட்டுப் புண்ணியஞ் செய்வோர்
தங்குஞ் சங்கத் தண்ணருள் பெற்று
மங்கா செல்வ வாழ்க்கை பெறுவர்”
என்று வீரசோழியம் குறிப்பிடுகின்றது.
போகிப்பண்டிகையின் மறு நாள் (தை முதல் நாள்) கொண்டாடப்படும் பண்டிகை சூரியப் பொங்கல்.உழவுத்தொழிலுக்கு பெருந்துணையாக இருப்பது சூரியன். எனவே அதனை வணங்கும் விதமாக சூரியப்பொங்கள் கொண்டாடப்படுவதாக முன்னோர்களால் சொல்லப்படுகிறது. சூரியன் அனைத்து உயிர்களுக்கும் மையமான சக்தியாக இருக்கிறது. கிரகங்களின் இயல்புகளை ஆராய்ந்து சொன்னது பவுத்தம் தான். எனவே அதனை வணங்குவதில் தவறில்லை. சூரியனை ’பகலவன்’ என்றும் அழைப்பதுண்டு. பகல் என்றால் ஒளி-வெளிச்சம் என்று பொருள். வெளிச்சம் இருளை அகற்றுகிறது. இருட்டென்னும் இருளை நீக்கும் ஒளியை கொடுப்பதால் சூரியன் ’பகலவன்’ என்று அழைக்கப்படுகிறது. அறியாமை எனும் இருளை ஞானமெனும் ஒளியால் நீக்கியதால் புத்தர் பகவான்-பகவன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
மார்கழி கடைசி நாளில் பகவான் புத்தர் மறைந்தார். எனவே அதன் காரணமாக மறு (தை முதல்) நாள் பேரொளியின் அடையாளமான ’பகலவன்’ எனும் சூரியனை புத்தரின் நினைவாக, அதாவது அவரது ஞான வழி எனும் ஒளியினை வணங்கி, பொங்கல்,பழங்கள்,மஞ்சள் உள்ளிட்ட பண்டங்களை படையிலிட்டு வணங்கும் வழக்கமே சூரியப்பொங்கல் நாளாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அயோத்திதாசப் பண்டிதரின் கூற்று
சமண முனிவர்களுக்குச் சத்திய தன்மத்தையே பெரும்பாலும் போதித்தவராதலின் சங்க தருமர்-சங்கரர் என வழங்கி வந்தார்கள். அவர் பரிநிர்வாணமடைந்த அந்தியங்காலத்தைச் சங்கரர் அந்நிய புண்ணிய காலமென்றும் இந்திர விழா வென்றும், தீபசாந்தி நாள் என்றும், சுவர்க்க வானம் ஏறிய நாளைச் சொக்கப்பானை கொளுத்தும் நாள் என்றும் கொண்டாடி வருகின்றார்கள் என்கிறார்.
பெரிய, பெரிய பாத்திரங்களில் நிரம்ப பச்சரிசியைப் போட்டு, உப்பிட்டு வேகவைத்து, அதைப் பலர் உண்ணக் கொடுத்து உபசரிப்பார்கள். அந்த அன்னதானம் அப்பொழுது பெரும் ஆரவாரமாக நடைபெற்று வந்திருக்கிறது. தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே உண்டு. உடுத்தி மகிழ்வதற்காக பண்டிகை நாள்கள் ஏற்படுத்தப்படவில்லை. பிறருக்கு ஈந்து மகிழ்வதற்கே பண்டிகைகள் கொண்டாடப்பட்டுள்ளது.

உயிர்களைக் கொல்லக்கூடாது என்பது புத்தருடைய ஐந்து ஒழுக்கங்களில் முக்கியமான ஒரு கொள்கையாகும்.ஆரியர்கள் அந்தக் காலத்தில் மாடுகளைக் கொன்று யாகம் செய்தும் அவற்றின் மாமிசத்தை சமைத்து உண்டு களித்து வாழ்ந்து வந்தனர். மாடுகள் அழிந்து போவதைத் தடுக்கவும் ஆரியப் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகளைக் காக்கவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் விலங்குகளை யாகத்தில் போட்டுப் பொசுக்கியுள்ளனர். பவுத்தர்கள் விலங்குகளைப் பாதுகாத்துள்ளனர். உலகின் முதல் கால்நடை மருத்துவ மனையைக் கட்டியவர் பவுத்த பேரரசன் அசோகர. பவுத்தர்களில் உழவர்களாக இருந்தவர்கள் ஏர்கலப்பை, மண்வெட்டி, களைக்கொத்தி உள்ளிட்ட உழவு கருவிகளையும், உழவுத் தொழிலில் மனிதனுக்கு துணையாகவும், உழவுக்கான எருவை கொடுக்கும் ஊக்கியாகவும் இருக்கும் மாடுகளையும் வணங்கி வந்துள்ளனர். இவை தான் பின்னர் கண்ணுப் பொங்கல், கன்றுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், காணும் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடப்படுகின்றது. இப்பொங்கல் பண்டிகையை தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக உலகெங்கிலும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தப் பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளத்தையும் சேர்க்கட்டும் என மகிழ்ச்சியுடன் வாழ்த்துவோம்.
— முனைவர் சீமான் இளையராஜா








Comments are closed, but trackbacks and pingbacks are open.