செயல்படாமல் போன இடது கை! துரிதமாக செயல்பட்ட பஸ் டிரைவா் ! உயிர் தப்பிய பள்ளிக் குழந்தைகள்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல கோவில்பட்டியில் இருந்து அகிலாண்டபுரத்திற்கு அரசு பஸ் சென்றுள்ளது. பஸ்சினை சிவகுருநாதன் என்பவர் இயக்கி உள்ளார். பிரபாகரன் என்பவர் நடத்துனூராக பணியாற்றியுள்ளார்.
பஸ் அகிலாண்டபுரத்திற்கு சென்று விட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அகிலாண்டபுரத்திலிருந்து கோவில்பட்டிக்கு பஸ் கிளம்பி உள்ளது. பஸ் தேசிய நெடுஞ்சாலை இருந்து வில்லிசேரி கிராமத்திற்குள் திரும்ப முயன்ற போது , ஓட்டுநர் சிவகுருநாதனுக்கு இடது கை திடீரென வேலை செய்யாமல் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் லாவகமாக அரசு பஸ்சை நிறுத்தி விட்டு , பயணிகளை இறங்கச் சொல்லியுள்ளார்.
மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் விரைந்து பஸ்சினை அங்கிருந்து அகற்றில் ஓரத்தில் நிறுத்தி வைத்தார்
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் ஓட்டுநர் சிவகுருநாதனை மீட்டு வில்லி சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதும் ஓட்டுநர் உடனடியாக பஸ்சை நிறுத்தியது மட்டுமின்றி, அருகில் இருந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலை நடுவில் நின்ற பஸ்சினை விரைந்து சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி