ஓசியில வர்றவளுங்க உட்கார்ந்துகிட்டு… எவ்ளோ ஜவ்லாடா வர்றாளுங்க பாரேன்… !
ஓசியில வர்றவளுங்க உட்கார்ந்துகிட்டு… எவ்ளோ ஜவ்லாடா வர்றாளுங்க பாரேன்… !
தினமும் பரபரப்பு தான் . வேலைக்கு கிளம்பி போறதுக்குள்ள அப்பப்பா…
”நானும் உங்கள மாதிரி தானே வேலைக்கு போறேன் சீக்கிரமா எந்திரிச்சு உதவி செஞ்சா எல்லாருமே சீக்கிரமா போலாம் இல்ல ” இப்படி மனைவி தினமும் புலம்பிக்கொண்டே இருப்பாங்க.
“சரி சரி விடுமா. நாளையிலிருந்து பாரு” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டும் சாப்பிடாமலும் சோத்தை கட்டிக்கிட்டு ரோட்ட நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிச்சேன்.
எங்க தெருவுல இருந்து பஸ் ஸ்டாப்ப தொடுற வரைக்கும் எல்லாருக்கும் ஓட்டப்பந்தயம் தான். ஒருத்தர ஒருத்தர் போட்டி போட்டு பஸ் ஸ்டாப் நெருங்கிட்டோம். பஸ் ஸ்டாப்ல பார்க்கிறப்ப அவ்வளவு கூட்டமா இருந்தாங்க. எப்படியும் அரை மணி நேரத்துக்கு மேல பஸ் இல்லாம எல்லாரும் நிக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு. எங்க தெருவுல நிறைய அக்கா இருக்காங்க. சித்தாள் வேலைக்கு போறவங்க தான்.
“என்ன தம்பி எப்பவும் வண்டியில தான் போவீங்க? இன்னைக்கு பஸ்ல வேலைக்கா?” என்ற விசாரிப்பு குரல் வந்தது ஒரு அக்காவிடமிருந்து. ”ஆமாம்..க்கா வண்டி கொஞ்சம் மர்க்கர் பன்னிட்டு. மெக்கானிக் கடையில் விட்டு இருக்கேன்.”னு சொல்லி முடிக்கறதுக்குள்ளயே, பக்கத்துல ஒரு அக்கா ரொம்ப சலிச்சிக்கிட்டாங்க. என்னாச்சுனு கேட்டேன்.
![எவ்ளோ ஜவ்லாடா வர்றாளுங்க பாரேன்... !](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-6.34.00-PM.jpeg)
”அரை மணி நேரமா நிக்கிறோம் தம்பி. ஃப்ரீ பஸ் நாலு பேரு வந்தானுங்க. ரெண்டு பேரு நிக்காமலே போய்ட்டான். இன்னொருத்தன் அங்கேயே நிப்பாட்டுறான். ஓடிப்போய் ஏறுறதுக்குள்ள, பஸ் எடுத்தர்றாங்க . என்னால, ஓடவும் முடியல. ரெண்டு நாளா வயிறு வலி வேற…” னு ரொம்பவே சலிச்சுகிட்டாங்க. ”இன்னொருத்தன் ஏறிக்கிட்டு இருக்கும் போதே, வண்டி எடுத்துட்டான்பா. வசந்தி அக்கா கீழ விழுந்துருச்சு தெரியுமா?” னு தொடர்ந்தாங்க இன்னொரு அக்கா.
”என்னக்கா சொல்றீங்க? வசந்தி அக்காவுக்கு அடி ஏதும் பட்டுருச்சா?” னு பதட்டத்தோட நான் கேட்க, ”நாசமா போறவனுக்கு என்னமோ.. இவிங்க வண்டி மாதிரி… வண்டிக்கு இவிங்களே ஓனர் மாதிரி வண்டி ஓட்டுறாங்க.. முட்டில தான்பா கொஞ்சம் அடிபட்டுருச்சு.”னு சொன்னாங்க.
”ரொம்ப பண்றானுங்க தம்பி. எவ்வளவு பேர் நிக்கிறோம் பாரு? படிக்கிற பிள்ளைங்க, காலேஜ் பிள்ளைங்க, எல்லாம் ரொம்ப நேரமா நிக்குதுங்க. ஏன் மேஸ்திரிகாரன் இருக்கான் பாரு.. லேட்டா போன அவன் கேக்குற கேள்வி எல்லாம் காதுலயே வாங்க முடியாதுப்பா”னு அந்த அக்கா என்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போதே, ரோஸ் கலர் பஸ்ஸ பார்த்துட்டாங்க.
அப்புறம் என்ன, ஒரே ஓட்டப்பந்தயம்தான். “ஏய், இதுலயாச்சும் எப்படியாது ஏரிருடி”னு கூட இருந்த அக்காவுக்கு குரல் கொடுத்துகிட்டே அவங்க ஓடுனத பார்க்கிறப்பவே, மனசுக்கு அவ்ளோ கஷ்டமா போச்சு.
ஒரே லேடீஸ் கூட்டம். அவங்களோடு போட்டி போட்டுக்கிட்ட ஏறதுக்கு ஒரு பக்கம் தயக்கமா இருந்துச்சு. இன்னொரு பக்கம், இந்த பஸ்ஸ விட்டா, வேலைக்கு லேட்டாயிடும். வேற வழியில்லாம, படியில கால் வைக்க கிடைச்ச இடத்துல வவ்வால் மாதிரி தொத்திகிட்டு அதே பஸ்ல பயணப்பட்டேன்.
”உள்ள வா….யாருமா, இந்த பைய இங்க வச்சிருக்கிறது? கையில எடும்மா… தள்ளு… வழியை வுடு…. தம்பி எங்க போற டிக்கெட்ட வாங்கு…. நீ ஏம்மா இங்கே நிக்கிற உள்ள தள்ளிப்போமா…. ஃப்ரீ பஸ்ஸ வுட்டு எங்க எழவை எடுக்குறாங்க …. ”னு அந்த ரணகளமான பயணத்துலயும் அவ்வளவு பேச்ச நான்ஸ்டாப்பா பேசிகிட்டே இருந்தாரு கண்டக்டரு.
”அண்ணே அண்ணே… நிப்பாட்டுங்க.. எறங்கணும்..” கெஞ்சலோடு பெண் பயணி குரல். “எங்கம்மா இறங்குற முன்னாடியே சொல்லித்தொலைய மாட்டியா?” பதில் வந்தது கண்டக்டரிடமிருந்து. ”டிக்கட் வாங்குறப்பவே, சொல்லித்தானே டிக்கெட் வாங்கினேனு” அந்த பெண்மணியும் சொல்ல, ”அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோமா..”னு கூலா சொல்லிட்டே நகர்ந்து போனாரு கண்டக்டர்.
அண்ணே … ஏற்கனவே லேட் ஆச்சு … கொஞ்சம் இறக்கிவிடுங்கன்னே… னு மீண்டும் கெஞ்ச, ”ஸ்டாப் வர வரைக்கும் உட்கார்ந்தே இருக்கிறது.”னு பதிலுக்கு கவுண்டர் கொடுத்துக்கொண்டே இருந்தார் கண்டக்டர்.
![எவ்ளோ ஜவ்லாடா வர்றாளுங்க பாரேன்... !](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-15-at-6.33.59-PM.jpeg)
”காசு கொடுத்து டிக்கெட் வாங்குற நாங்க நின்னுகிட்டே வரோம். ஓசியில வர்றவளுங்க உட்கார்ந்குகிட்டு, எவ்வளவு ஜவ்லாடா வர்ராளுங்க பாரு.”னு கண்டக்டருக்கு வக்காலத்து வாங்குனாரு, ’குடி’மகன் ஒருத்தரு.
“அண்ணே, கொஞ்சம் நகந்துதான் நின்னுங்களேன். ரொம்ப நேரமா, மேல சாஞ்சிட்டே இருக்கீங்க.”னு பெண் சொல்ல, “ இங்கே எங்கே – மா இடம் இருக்கீது. நகரு நகருன்ற… யாரும் உரசாம மோதாம போனும்னா தனியா, ஆட்டோ, கார் புடுச்சி போலாம்ல..”னு விரசா பதில் கொடுத்தாரு ஆண்மகன் ஒருத்தரு.
”படியில தொங்காத… படியில ஏறி எறங்கு… பொம்பளைய ஆள்எ ல்லாம் டிக்கெட் ட வாங்குமா..”னு கண்டக்டர் பேச, “பஸ் ஃபுல்லா வெறும் பொம்பளைங்களா தான் இருக்காளுங்க… ”னு திரும்பவும் ஒத்து ஊதினார், அந்த ’குடி’மகன்.
”ஏதோ இவனுங்க பஸ் மாதிரி பேசுறானுங்க .. பஸ்சுக்கு இவங்கதான் ஓனர் போல ….” னு சித்தாளு அக்கா ஒருத்தங்களால, சன்னமா புலம்பிக்கத்தான் முடிஞ்சுச்சு அந்தக் கூட்டத்துல.
”கவர்மெண்ட் ஃப்ரியா பஸ் வுடுது .. இவுங்களுக்கு என்ன வந்துச்சு?” இன்னொரு அக்கா கேட்க, “பொம்பளைங்கன்னா அவ்வளவு எளக்காரமா போச்சா?”னு எல்லோரும் கேட்கிற மாதிரியே பஸ் முழுக்க எதிரொலிச்சது ஒரு பாட்டியின் குரல். அந்த குரல் வந்த தைரியத்துலயே, “அதானே, இப்படி எல்லாம் பேசுறவங்களுக்கு அக்கா தங்கச்சி அம்மா பொண்டாட்டி எல்லாம் பொம்பளைங்க தானே நாசமா போறவனுங்க…”னு நடுத்தர வயசுக்கார பெண்மணி ஒருவர் ஆதங்கத்தை கொட்டினார்.
அவ்வளவுதான், “இந்தமா.. என்னமா… கத்துக்கிட்டே இருக்கீங்க… முன்னாடி நகருங்கமா வழியிலேயே நின்னுகிட்டு இந்த நீ டிக்கெட்ட வாங்கிட்டியா?” இந்த முறை வழக்கமான விரைப்போட கண்டக்டர் கேட்க.
“என்ன நாங்க ஆடா மாடா வா போங்கறீங்க…”னு ஒரு பெண்மணி எதிர்த்து கேட்டதுதான், பஸ்ல ஒரே களேபரமே ஆயிடுச்சு.
ஒருவழியா, நான் உட்கார சீட்டும் கிடைச்சு, ஸ்ஸ் அப்பாடானு உட்கார்ந்தேன். “கொஞ்சம் பையை புடிப்பான்னு செல்வி அக்கா கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துச்சு.. “பாத்தியா தம்பி இப்படித்தான் நாங்க தினமும் போறோம். வர்றோம். ரொம்ப கேவலமா பேசுவாங்க தம்பிழ ஒரு சில கண்டக்டர் டிரைவர் தவிர எல்லாரும் இப்படித்தான் நடந்துக்கிறாங்க…”
“எங்க கையில காசு இருக்கிறப்ப இந்த பஸ்ஸுக்காக நிக்கவே மாட்டோம். பிரைவேட்டு பஸ்ல வந்துருவோம். இந்த ஃப்ரீ பஸ்ல போகணும் வரணும்னா பொம்பளைங்க மரியாதைய எதிர்பார்க்க முடியாதுப்பா… எவன் எதோ பேசினாலும் வாயைத் திறக்காமல் கம்முனு தான் நிறைய பேரு வருவாங்க… ”னு ஆதங்கத்தோட சொல்லிக்கிட்டு இருந்துச்சு செல்வி அக்கா.
”எல்லாம் கவர்மெண்ட் சொல்லணும். பொம்பளைங்களுக்கு ஓசில கொடுத்து கெடுத்து வச்சிருக்கானுங்க. பஸ்ல ஓசிங்கரதால இவளுங்க இஷ்டத்துக்கு எங்க வேணாலும் போறாளுக வராளுக…” ன்னுஅந்த குடிகாரன் பேசி வாய மூடுறதுக்குள்ள .. என்னை அறியாமலே எந்திரிச்சு போத தெளியிற மாதிரியே ஓங்கி விட்டேன் ஒரு அரை.
”போடு தம்பி இன்னொன்னு. நானும் அப்பயிலிருந்து பார்க்கிறேன். ஏறுனதுல இருந்து அசிங்க அசிங்கமா பேசிகிட்டே வரான் பா..”ன்னு எனக்கு முன்னாடி சீட்டுல உக்காந்து வந்தாக்கா.. சொன்னுச்சு.
விசில அடிச்சு வேகமா வந்தாரு கண்டக்டரு….. என்ன பிரச்சனையா …கீழ எறங்கியான்னு கழுத்தை புடிச்சு அந்த குடிகாரனை கீழ எறக்கி விட்டாரு.
தம்பி நீங்க உட்ட அர அந்த குடிகாரனுக்கு மட்டும் இல்லப்பா தம்பி- ன்னு இன்னொரு அக்கா சொல்லி முடிக்க, தள்ளி போனாரு கண்டக்டரு… தம்பி நீங்க இறங்குற இடம் வந்துருச்சுன்னு லேசான புன்னகையோட செல்வி அக்கா என்ன பார்த்து சொல்லுச்சு.
தான் அவமானப்படுத்தப்படும் நேரத்தில், தனக்காக ஒரு குரல் பேசும் என்றால் அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை தரும் என்பதை செல்வி அக்காவின் அந்த லேசான புன்னகை உணர்த்தியது.
செ.கார்க்கி, துவாக்குடி, திருச்சி.