நடுவழியில் சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து ! நீதிமன்ற உத்தரவை மதிக்காத போக்குவரத்து கழகம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் (43) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ராஜபாளையம்-மதுரை சாலையில் நாட்டர்மங்கலம் அருகே வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அரசு விரைவு பேருந்து ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்தார். இந்நிலையில், இவரது மனைவி ஜான்சிராணி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஆண்டு ரூ. 18 லட்சத்து 86 ஆயிரத்து 700 ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்தார். மேலும், விபத்திற்கான இழப்பீடு தொகையினை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், நீதிமன்றம் அளித்த கால அவகாசத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இழப்பீடுதாரருக்கு பணத்தை கொடுக்காததால், சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன் அளித்த உத்தரவின் பேரில், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த அரசு விரைவு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டது.
— மாரீஸ்வரன்