சாதி ரீதியாக பேசி சக மாணவியின் காலில் விழ வைத்த தனியார் கல்வி நிறுவனம் ! வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாய்ந்த வழக்கு !
கோவில்பட்டியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவியை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி சான்றிதழ்களை தர மறுத்த தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் தியான் ஹெல்த் எஜுகேஷன் என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்பிற்கான கல்வி நிறுவனம் உள்ளது. டாக்டர் சிவகுமார் என்பவர் நிர்வாகியாகவும், கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா என்பவரும் இருந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகாவை சேர்ந்த கிராமம் ஒன்றிலிருந்து அக்கல்வி நிறுவனத்தில் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உட்பட பல மாணவியர் மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 31 ம் தேதி தீபாவுக்கும், சக மாணவி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தீபா, அந்த மாணவியை தாக்கியுதாக கூறப்படுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ண பிரியா மாணவி தீபாவை அழைத்து கண்டித்ததோடு தாக்கியதாகவும், மேலும், சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி, சமுதாய ரீதியாக அவதூறாக பேசியதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து, மாணவி தீபா கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா என்னை தாக்கியதோடு, சக மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் எனது சான்றிதழ்களை தருவதாக கூறினார். வேறு வழியின்றி அந்த மாணவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். அதன் பிறகும் ஒரு லட்சம் ரூபாய் தந்தால்தான் சான்றிதழ்களை தருவதாக கிருஷ்ணபிரியா மிரட்டுகிறார். விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, விசாரணை நடத்திய போலீசார் கல்வி நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ணபிரியா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தரப்பில் கேட்ட போது இது பொய்யான புகார் என்று கூறியுள்ள நிலையில், கோவில்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியில் பட்டியலின மாணவி காலில் விழ வைத்த சம்பவம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது தூத்துக்குடி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் ,மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜா.பென்னட் ஆசீர் , கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
— மணிபாரதி.