சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு ! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கொளத்தூர் மணி !
“சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின முனைவர் பட்ட மாணவர்கள் முனைவர் பட்டத்தை முடிக்க முடியாமல் தமிழ் துறைப் பேராசிரியர் பெரியசாமி இடையூறு செய்து வருவதால் பல பட்டியலின முனைவர் பட்ட மாணவ மாணவிகள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளது மிகவும் வேதனையான ஒன்றாகும்.
படிக்கும் மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வது, வீட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூறுவது, மளிகை பொருட்களை வாங்க சொல்வது போன்ற கொடுமைகள் பெரியார் பல்கலையில் நடப்பது வேதனையான ஒன்று. இனியும் இதை அனுமதிக்க முடியாது.
பட்டியலின, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளை வேலைக்காரர்களாக எஜமான மனப்பான்மையோடு நடத்துவது கண்டனத்திற்கு உரியது.

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் (19 பேர்) பாதியிலேயே இவரின் கொடுமை தாங்காமல் நின்று விட்டதாக இன்றைய ஆங்கில ஹிந்து நாளிதழில் வந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. சில மாணவர்களைத் தொடர்பு கொண்டபோது ஏறத்தாழ இருபது நாள்களுக்கு முன்பே முன்னதாகவே துணைவேந்தர் பணி அமைப்புக் குழுவுக்கு விரிவான புகார்களை அளித்திருந்தும் எந்த பலனும் இல்லை என்பதாலேயே இந்து நாளேட்டுக்கு செய்தியைக் கொண்டு போனதாகவும் அறிந்தோம். மேலும் இதே பேரா. பெரியசாமி மீது உயர்கல்வித்துறை விசாரணை செய்து அளித்துள்ள அறிக்கை மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுகூட அவருக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கலாம்.
ஜாதீயப் பாகுபாடு, பட்டியலின மாணவர்களைக் கேவலமாக நடத்துவதை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் இரும்புக் கரம் கொண்டு இதை அடக்குவதுடன், சம்பந்தப் பட்ட புகாரளித்த பட்டியலின மாணவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்; பெரியசாமியால் முனைவர் பட்டத்தை முடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்ட ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டத்தினை முடித்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுவே நமது கோரிக்கை. பேரா.பெரியசாமியின் கையாளாக இருந்து ஆராய்ச்சி மாணவர்களை ஆராய்ச்சியினை முடிக்க முடியாமல் பல்வித இன்னல்களுக்கு ஆளாக்கி வரும் ஆராய்ச்சி வளர்ச்சிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரகாஷ்தான் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் கூட்டிய துணை வேந்தர் மாநாட்டில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் சார்பில் கலந்து கொண்டவர் ஆவார்.

மேலும் இது தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணைக்கு உடனடியாக உத்திரவிடுவதுடன், விசாரணை முறையாக நடைபெற பேரா.பெரியசாமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தற்பொழுது தமிழக அரசின் நேரடிப் பார்வையில் பெரியார் பல்கலை இயங்குவதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ஜாதீய பாகுபாடு கொடுமை என்பதனை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்பதோடு உரிய சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.”