Indigo மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு!
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமான போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக Flight Duty Time limitations விதிகளை மத்திய அரசு கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது.
அதுவும் விமானிகள் சங்கங்கள் வேலை பளுவை குறைக்கவும், ஓய்வு நேரத்தை அதிகரித்து, பறக்கும் பணி நேரத்தை குறைக்க பல்வேறு கோரிக்கைள் வைத்த பிறகு (Director General of Civil Aviation ) இந்திய விமானப் பொது போக்குவரத்து இயக்ககம் புதிய விதியை அமல்படுத்தியது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விமான போக்குவரத்து துறையில் சுமார் 64% மார்க்கட் பங்குகளை வைத்திருக்க கூடிய தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான Indigo இரண்டு நாட்களாக மத்திய அரசுக்கும், அந்த நிறுவனத்தின் டிக்கட்டை வாங்கிய பயணிகளுக்கும் வேண்டும் என்றே ஒரு செயற்கை நெருக்கடியை ஏற்படுத்தி போக்கு காணப்பித்து வந்தது. கிட்டதட்ட பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட அசாதரான சூழலை போல் தான் விமான நிலையங்கள் காட்சி அளித்தன. ஏழை மக்களின் அவஸ்தையும் சொகுசுக்காக மக்கள் பயன்படுத்தும் விமானமும் ஒன்றா என்று சிலர் என்னை குதற புது காரணம் தேட வேண்டாம். இன்றைக்கு பணி நிமித்தமாக, மருத்துவ அவசர தேவைக்காக, பணத்தை விட நேரத்தின் மதிப்பு தேவைப்படுபவர்கள் என்று அதிகளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு முறையான அறிவிப்புகளின்றி விமான சேவையை ரத்து செய்தது Indigo நிறுவனம். மக்கள் விமான நிலையங்களில் போராட தொடங்கினார்கள். விமானங்கள் தாமதமாக இயக்குவது, முறையான அறிவிப்புகளின்றி விமான சேவையை ரத்து செய்வது என்று Indigo நிறுவனம் ஒரு புறம் அரசுடன் பேரத்தை பேசிக் கொண்டே அந்த நிறுவனத்தை நம்பி விமான பயணச் சீட்டை வாங்கியவர்களை அவதிக்குள்ளாக்கி பந்தாடிக் கொண்டிருந்தது.
விளைவு மனைவியை அவசர மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்ல காத்திருந்த கணவன் கண்ணீர் மல்க அடுத்து என்ன செய்வது என்று திசை தெரியாமல் நின்றிருந்தார்; தங்களுடைய திருமண வரவேற்புக்கு புவனேஸ்வரிலிருந்து பெங்களுர் வர வேண்டிய புதுமண தம்பதிகள் விமான நிலையத்தில் முடங்க மணமேடையில் பொண்ணு, மாப்பிள்ளை இல்லாமலே அவர்கள் வீடியோவுடன் அவரது உறவினர்கள் திருமண வரவேற்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்வியல் அவசரத்திற்கு அத்தியாவசிய காரணங்கள் இருக்கிறது. அவர்கள் அனைவரும் விமானநிலையங்களில் முடங்கி கிடக்கிறார்கள். இதை காரணமாக வைத்து ராக்கெட் விலை கணக்காக டிக்கெட் விலையை ஏற்றி லாபம் பார்க்கிறது மற்ற விமான நிறுவனங்கள். இதை தடுக்க வேண்டிய மத்திய அரசு அமைதி காத்தது.
2200 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களை வைத்துள்ள Indigo நிறுவனம் ஏற்கனவே தனிக்காட்டு ராஜாவாகதான் விமான சேவையில் இருந்து வருகிறது. ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்று விட்டு அரசு விமான சேவையில் இருந்து கைகழுவியதன் விளைவு தான் தலைநகர் டெல்லி தொடங்கி சென்னை விமான நிலையம் வரை நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் அல்லோலப்பட்டது. இப்போது ஏர் இந்தியா மத்திய அரசிடம் இருந்திருந்தால் குறைந்தது ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணிகளின் தேவைகளில் முன்னுரிமை அடிப்படையிலாவது சில பகுதிகளுக்கு விமான சேவையை மத்திய அரசு வழங்கி இருக்கலாம். குறிப்பாக விமான போக்குவரத்து என்று வரும் போது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பயண சேவையை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
Indigo நிறுவனத்தை சூமூக பேச்சுவார்த்தை நடத்தி சேவையை தொடர வைத்திருக்க வேண்டும். இத்தனை விமானங்களை வைத்திருக்கும் நிறுவனம் பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அந்த விமானம் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிரட்டியாவது விதிகளை பின்பற்ற வைத்திருக்க வேண்டும்.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிரோடு விளையாடுகிறது Indigo நிறுவனம் என்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து மத்திய அரசு சிறப்பாக வாதாடி விமான நிலையங்களில் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு நீதி பெற்று தந்திருக்க வேண்டும்.
அதிக விமானங்கள் மற்றும் விமான சேவைகளை வழங்கும் Indigo நிறுவனம், புதிய விதிகளை அமல்படுத்த போதிய அவகாசம் கொடுக்க வில்லை, மற்றும் புதிய விதிகளை பின்பற்ற போதிய விமான பணியாளர்கள் இல்லை என்ற காரணங்களை கூறி விமான சேவைகளை ரத்து செய்துள்ளது Indigo.
மோசமான வானிலை, தொழில் நுட்ப கோளாறு போன்றவற்றையும் காரணங்களாக Indigo கூறுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஒரே நாளில் எப்படி 700 க்கும் மேற்பட்ட Indigo நிறுவன விமானங்களில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்?
மற்ற விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்த குளிர் கால மோசமான வானிலையில் எப்படி பறக்கின்றன என்பது மற்றொரு சந்தேகம்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி ப்ரமோத் திவாரி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி விதி 180 கீழ் விவாதிக்க கொடுத்த நோட்டீஸிற்கும் வெளிப்படை தன்மையாக எந்த பதிலும் மத்திய அரசு வழங்கியதாக தெரியவில்லை. மாறாக புதிய விதிகளை திரும்ப பெறுவதாக DGCA அறிவித்துள்ளது.
விமான நிலையங்கள் முடங்கி கிடக்கும் தமிழ் நாட்டு மக்களுக்காக (அதில் எத்தனை பேர் மதுரைக்கு விளக்கேற்றுவதற்காக செல்ல நினைத்து சென்னை விமான நிலையத்தில் முடங்கினார்களோ பாவம்) தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண்பார் என்று பார்த்தால் அவர் விளக்கேற்ற தமிழ்நாடு அரசு முட்டைக்கட்டை போட்டுவிட்டது என்றார்.
நாட்டில் மக்கள் என்ன பிரச்சினை எதிர்கொண்டால் என்ன, நமக்கு விளக்கேற்றுவதும், சூடம் ஏத்துறதும் தான் பிரச்சினை.








Comments are closed, but trackbacks and pingbacks are open.