அதிகாரிகள் தந்த அழுத்தம் … அவசரமாக கூடிய நகரசபை … சர்ச்சையில் சிக்கிய சேர்மன் !
நகராட்சி மோசமான நிலைக்கு காரணம் அதிகாரிகள்தான் என கூறும் திமுக நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக திமுக துணை சேர்மன் முதல் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் வரை கொந்தளிக்கும் விவகாரம் திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
”நகராட்சியை நிர்வகிக்க அரசு வழங்கும் நிதியை கையாளவும் , கூட்டத்தை நடத்தவும் போதிய நிர்வாக திறமையில்லாத காரணத்தால், அதனை மறைக்க கமிஷனர் மீது பழியை சுமத்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நகர்மன்றத் தலைவி சங்கீதா. இவரால் இதுவரை 5 கமிஷனர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தற்போது 6-வது கமிஷனராக சாந்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில்தான், பழையபடி கமிஷனர் சாந்தி மீதே பழியைப்போட நினைக்கும் நகராட்சி தலைவர் சங்கீதாவுக்கு எதிராக” சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் உள்பட ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கூடி அவர் மீது நம்பிக்கையில்ல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக கொந்தளிக்கின்றனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 28 பேர்களும் அதிமுக கூட்டணி கவுன்சிலர்கள் 5 பேர்களும் , சுயேட்சை கவுன்சிலர்கள் 3 பேருமாக திருப்பத்தூர் நகராட்சி திமுக வசம் இருந்து வருகிறது.
மாதந்தோறும் நடத்த வேண்டிய கவுன்சில்கூட்டம், நான்கு மாதங்களாக நடத்தப்படாத நிலையில் திடீரென்று மேலிடம் சொல்லியதாகக்கூறி கடந்த மார்ச்-19 அன்று நள்ளிரவில் வார்டு கவுன்சிலர்களின் கதவை தட்டி கூட்ட அஜெண்டாவை விநியோகித்திருக்கிறார்கள் நகராட்சி ஊழியர்கள். தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

இந்நிலையில், அவையில் இருந்த சில உறுப்பினர்களை வைத்து கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்த நிலையில், அதற்கும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் மற்ற கவுன்சிலர்கள்.
ஒருவழியாக, கவுன்சிலர்கள் அஜெண்டாவிலுள்ள 65- தீர்மானங்களில் , 58-வது தீர்மானமான திருப்பத்தூர் நகராட்சிக்கு “புதிய அலுவலக கட்டிடம்” கட்டுவதுற்கு ரூ.4.95 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி கூட்டத்தை முடித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திந்த நகராட்சி தலைவி சங்கீதா, தனது பாணியிலேயே அதிகாரிகளை குறை சொல்லத் தொடங்கினார். “ 20-ந்ததேதி கூட்டம் நடத்த அஜெண்டாவை 19- ந்ததேதி இரவு 9- மணிக்கு தான் அதிகாரிகள் கொடுத்தார்கள். அவசர கூட்டத்தை கூட்டினால், அதன் பின் விளைவுகள் ஏற்படும் என அவர்களிடம் எச்சரித்தேன். ஆனாலும் அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட பிடிவாதமாக இருந்தனர். இங்கு, நகராட்சி அதிகாரிகள் நான் சொல்வதை எதையும் கேட்பதில்லை. நான் பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஐந்து கமிஷனர்கள் மாறிவிட்டனர். புதியதாக வருபவர்கள் ஒட்டுமொத்த வார்டுகளை பற்றி புரிந்து கொள்வதற்குள் அவர்கள் மாறிவிடுவதாக” நொந்து கொண்டவர், ”அதிகாரிகள் பற்றாக்குறையால், திருப்பத்துார் நகராட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் முன்கூட்டியே அறிவிப்பு செய்து கூட்டம் நடத்த முயற்சி செய்வதாக” கூறினார்.

வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களிடம் பேசியபோது, ” அரசியலுக்கு அவர் புதுசு. திடிரென்று திமுகவில் இணைந்து கவுன்சிலர் போட்டியில் வென்று நகர்மன்ற தலைவி ஆனவருக்கு , அதிகாரிகளிடம் வேலை வாங்க தெரியவில்லை. நகரத்தில் என்ன பிரச்சினை என கேட்டறிவதில்லை. ஆய்வுக்கு போவதில்லை , கவுன்சிலர்களிடம் குறைகளைக் கேட்க முடியவில்லை. நகர்மன்ற அலுவலகத்தில் நேரடியாக குறைகளைக் கூற சென்றால், அவர் கணவர் வெங்கடேஷ் தான் சேர்மன் சீட்டில் அமர்ந்து கொண்டிருப்பார். போனிலாவது குறைகளைக் கூற தொடர்புக் கொள்ள முயற்சித்தால் அழைப்பு எடுப்பதில்லை. இப்படி ஒரு நகர்மன்ற தலைவரை இந்த நகராட்சி இதுவரை பார்த்ததில்லை” என்று அடுக்கடுக்காகான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து நகர்மன்ற தலைவி சங்கிதாவிடம் விளக்கம் அறிய அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டோம் நமது அழைப்பையும் எடுக்கவேயில்லை. கமிஷனர் சாந்தியிடம் பேசினோம். “அதிகாரிகள் பற்றாக்குறை தான் இருப்பதாக சேர்மன் சங்கீதா கூறினார்” என்பதாக விளக்கம் அளிக்கிறார், அவர்.
கவுன்சிலர்கள் நகர்மன்றத் தலைவியை குறை சொல்வதும்; நகர்மன்றத் தலைவி அதிகாரிகளை குறை சொல்வதும்; நகர்மன்ற தலைவியின் பேச்சையும் கேட்காமல், அதிகாரிகள் அவசரக்கூட்டம் நடத்துவதுமாக ஒருவரை மாற்றி ஒருவர் கையை நீட்டுகிறார்கள். ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள்.
— மணிகண்டன்.