ஒரு உயில் சமூக மாற்றம் – தோழர் ராஜேஸ்வரராவ் ! – தொடர் – 13
முனைவர் ஜா.சலேத் - கண்ணெதிரே போதிமரங்கள்! ( அறியவேண்டிய ஆளுமைகள் )
“என்னிடம் உள்ள சொத்து வேட்டி சட்டைகள் எட்டு உருப்படிகள்
அதை யாராவது ஏழைகளுக்குத் தருக.
எனது நூல்களை கட்சி நூலகத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
எனக்கென்று வேறு சொத்து ஏதுமில்லை”
இது ஒரு தலைவரின் இறுதி உயில். இந்த உயில் வெறுமனே முத்திரைத்தாளில் எழுதிய உயிலன்று. இது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தியாகத்தின் வரலாறு. இந்த உயில் நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் தம்மைத் தத்தம் செய்த, சுதந்திரப்போராட்ட வேள்விகளில் விளைந்த இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளால் எழுதப்படாத ஒரு உயில் என்றே சொல்லலாம்.
ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, தனக்கு வாரிசுரிமையாகக் கிடைத்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்குப் பங்கிட்டு கொடுத்துவிட்டு, தன் இறுதிக்காலம் வரையில் ஒரு ஏழை விவசாயியைப் போலவே ஒன்றிரண்டு துணிமணிகளோடு டெல்லி மாநகரில் ஒரு சின்னஞ்சிறு அறையில் வாழ்ந்த ஒரு தியாக தீபம்தான் மேற்படி உயிலை வரைந்த வீரத்தின் விளைநிலம். அவர்தான் தோழர் ராஜேஸ்வர ராவ்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகக் காத்திரமான பங்கினை வகித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தொடங்கியபோதே தடைசெய்யப்பட்ட கட்சி. அன்றைய ஆங்கிலேய காலனி அரசாங்கம் பல்வேறு சதி வழக்குகளைப் போட்டு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். அப்போதும் தொழிலாளர் விவசாய கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்டுகள், அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ், அனைத்திந்திய விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம், இந்திய மக்கள் நாடக மன்றம் என பல அமைப்புகள் மூலமாக இந்திய விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டுகள். பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற இந்த மனிதர் அந்தத்தொழிலில் ஈடுபடாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை இளமைப் பருவத்திலேயே தன் வாழ்வியலாக உள்வாங்கிக் கொண்டவர். அந்தக் காலத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.
சுதந்திரம் கிடைத்த பின்னால் தெலுங்கானாவில் கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சியில் அதனை வழிநடத்தும் தளபதிகளுள் ஒருவராக நின்றவர். அந்தப் பேரெழுச்சியில் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஒரு போராளித் தலைவர்.
அவருடைய ஆளுமை போராட்டப் பாரம்பரியங்களால் வடிவங்கொண்ட ஒரு போராளி ஆளுமை. இளமையில் இயக்க வாழ்க்கைக்கும் போராட்ட வாழ்க்கைக்கும் தன்னை தத்தம் கொடுத்த இந்த மனிதர் கடைசி வரையிலும் ஒரு போராளியாகவே வாழ்ந்து மடிந்தவர்.
எனவேதான் 1952 முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டுகள் வந்தார்கள். 1957 இல் உலகிலேயே முதன்முறையாக தேர்தல் மூலம் கேரளத்தில் ஆட்சியைப் பிடித்து ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சர் ஆனார். என்றாலும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவான பிளவுகளும், 1962 இந்தியா மீதான சீன படையெடுப்பும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலவீனப்படுத்தின. விளைவு 1964 இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டாகப் பிளந்துபோனது.

கட்சிப்பிளவின் போது அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர். வரலாற்றில் மிகவும் இக்கட்டான தருணத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த இவர் கட்சியைக் கட்டிக்காப்பதில் மகத்தான பங்கு வகித்தார். அவசர நிலை காலத்திற்குப் பிறகு, காங்கிரஸோடு கொண்டிருந்த உறவுகளை முற்றாகத் துண்டித்து விட்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி என்று அவர் தலைமையில் கொண்டு வந்த அரசியல் திட்டம்தான் இன்றைக்கும் கட்சியின் அரசியல் நெறியாக இருக்கிறது.
அதேபோல் 40 ஆண்டுகளுக்கு முன்னே அவர் கனவு கண்ட கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்ற முழக்கம் நம் நெஞ்சங்களில் ஒலிக்கிறது. இன்றையச் சூழலில் கம்யூனிஸ்டு ஒற்றுமை என்பது சாத்தியப்படுமேயானால், அது நிச்சயம் இந்திய அரசியலில் ஒரு மகத்தான திருப்புமுனையாக அமையும். அப்போதுதான் இடதுசாரி ஜனநாயக அணி என்ற முழக்கமும் ஒரு எதார்த்தமாக மாறும்.
எதிர்க்கட்சிகள் தமக்குள் ஒற்றுமையின்றி நிற்பதால்தானே, வகுப்புவாத சக்திகள் ஆட்சிபீடத்தில் இருக்கின்றன என்பதை நம்மால் மிக எளிதாக உணரமுடியும். 67 சதவீத மக்கள் மதச்சார்பின்மைக்கு பக்கத்திலேயே உறுதியாக நிற்கிறபோதிலும் அரசியல்ரீதியாக அந்த உண்மை நாடாளுமன்றத்திலேயே எடுபடவில்லை. எனவே மக்கள் தயாராக இருந்தும் அதற்குரிய அரசியல் தலைமை இன்னும் இந்த நாட்டில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை என உரக்கச் சொன்னார்.
கம்பீரமானவர். தோற்றத்திலும் செயல்களிலும். ஆனால் எளிமையானவர். மொத்த சொத்துக்களையும் மக்களுக்கு வாரி வழங்கி விட்டு, மிச்சமிருந்த சிறு சொத்திலிருந்து வரும் வருமானத்தில் மனைவி வாங்கித்தரும் ஒன்றிரண்டு துணிமணிகளை மட்டுமே உடமையாக கொண்டு வாழ்ந்த ஒரு உத்தமத் தலைவர் தோழர் ராஜேஸ்வர ராவ்.

அவருடைய உயிலை அப்படியே பதிவு செய்கிறோம்.
“எனது மரணத்தையொட்டித் தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்.
என்னிடம் உள்ள சொத்து வேட்டி சட்டைகள் எட்டு உருப்படிகள் அதை யாராவது ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள்.
பூர்விகச்சொத்தில் எனது பங்காகக் கிடைத்த விவசாய நிலங்கள் முழுவதையும் ஏற்கெனவே குத்தகை விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டேன். வேறு எந்த சொத்தும் எனக்கென்று இல்லை.
எனது வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் பொது நூலகத்துக்கோ அல்லது நமது கட்சிக்கோ கொடுத்து விடுங்கள்.
புதிய சமுதாய மாற்றத்துக்காக, என் சக்தி முழுவதையும் செலவிட்டுப் பயனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறேன்.
அடுத்த தலைமுறை இளைஞர்கள் நான் பிடித்த செங்கொடியைப் பிடித்தபடி மேலும் முன்னேறிச் செல்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முழு மன நிறைவுடன் என் அன்புக்குரிய தோழர்களிடமிருந்து விடை பெறுகிறேன்!”
தோழர் ராஜேஸ்வர ராவின் பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் இரண்டு எண்ணங்கள் நம் கண்ணிலும், மனத்திலும் நிழலாடும்.
ஒன்று அவர் புரட்சி நாயகன் என்ற நினைவு.
இன்னொன்று அவர் விட்டுச் சென்றிருக்கிற கம்யூனிஸ்டு ஒற்றுமை என்ற கனவு !
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.