பல்லே படாமல் பழம் தின்று, சொல் வலி புரியாமல் பேசும் மெத்தப்படித்த அண்ணாமலைகள் !
பல்லே படாமல் பழம் தின்று, சொல் வலி புரியாமல் பேசும் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் ! சென்னை பிரஸ் கிளப் காட்டமான அறிக்கை !
”நேத்து உதயநிதி ஸ்டாலின் அவங்களோட இன்டர்வியூ பார்த்தேன். தமிழ்ல சொல்லுவாங்க… பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போதுனு அப்படீம்பாங்க. அந்தமாதிரி ப்ரண்ட்லி ரிகொஸ்ட்..” என்பதாக பத்திரிகையாளர்களிடையே, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும், ”கொங்கு பகுதிகளில் பேசும் வழக்கில் பேசியதை தவறாக சொல்கிறார்கள். மாட்டிற்கு பால் பீச்சுவதில் பல் படாமல் செய்வதையே சுட்டிக் காட்டினேன். இதில் என்ன தவறு உள்ளது? இதேபோன்று பதத்தை தொடர்ந்து நாளையும் பயன்படுத்துவேன். இது குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன். பேச்சை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் உளவியல் நிபுணர்களை சந்திக்க வேண்டும்.” என்று பதிலளித்திருக்கிறார், பாஜக அண்ணாமலை.
அண்ணாமலை குறிப்பிடுவதைப்போல, கொங்கு மண்டலத்திலோ அல்லது சங்க இலக்கியத்திலோ எதிலுமே நேர்மறையான பொருளில் ”பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போது” என்கிற வார்த்தை பிரயோகம் இல்லையென்பதும்; முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனங்களோடு வெளியான, ”பல்லு படாம பார்த்துக்க” என்ற மட்டரகமான திரைப்படத் தலைப்பை தழுவிய; அப்பட்டமான 18+ ரகத்தைச் சேர்ந்த இரட்டை அர்த்த தொனியிலான ஆபாச பேச்சுத்தான் என்பதையும் விளக்கி சொல்வதற்கு ஏதுமில்லை.
தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்களுக்காகவே பெயர்போன வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில், சொல்வதையும் சொல்லிவிட்டு, நான் இப்படித்தான் சொன்னேன் என்று அவரது பாணியிலேயே விளக்கமும் கொடுத்திருக்கிறார், பாஜக அண்ணாமலை என்பதுதான் இதில் வேடிக்கையானது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை பிரஸ் கிளப்பின் தலைவர் அ.செல்வராஜ் மற்றும் பொதுச்செயலர் ச.விமலேஸ்வரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் பாஜக அண்ணாமலைக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர்.
அவர்களது அறிக்கையில், ”பல்லே படாமல் பழம் தின்று, சொல் வலி புரியாமல் பேசும் அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள்..!
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்’ என்ற அனுபவச் சொல்லை தன் இலக்கணமாகக் கொண்டு தலைக்கனம் பிடித்த சில அரசியல் தலைவர்களின் வாயைப் பிடுங்கி, இதயம் நுழைந்து அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அம்பலத்திற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் பணியை கொச்சைப்படுத்திய அரசியல் தலைவர்கள் எவரும் நிலைத்து நின்றதில்லை என்பதே இதுவரை உள்ள வரலாறு!
காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, இவ்வளவு ஏன்? இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கும் திரு. நரேந்திர மோடி போன்ற எத்தனையோ தலைவர்கள் தங்கள் மீது வீசியெறியப்பட்ட சாணியையும் எருவாக்கி தங்களை உருவாக்கியவர்கள் என்பதையும், பழம் தின்று கொட்டை போட்டபின் தலைமைப்பதவிக்கு வந்தவர்கள் என்பதையும், அவர்களின் ஒவ்வொரு படிக்கட்டையும் செதுக்கிய சிற்பிகள்தான் இந்த பத்திரிகையாளர்கள் என்பதையும் நாடே நன்கறியும்.
ஆனால், பல்லே படாமல் பழம் தின்று, முதிர்ந்தவர்கள் பலரையும் உதிர்ந்தவர்கள் ஆக்கிவிட்டு, சிறு உரசல் கூட இல்லாமல் இன்று அரசியலில் தலைமைப் பதவிக்கு வந்திருக்கும் மெத்தப்படித்த அண்ணாமலை போன்றவர்களுக்கு அரசியலின் இந்த அரிச்சுவடி தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே..!
எனவே, பத்திரிகையாளர்களின் அரும்பணியை தொடர்ந்து கொச்சைப்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேட நினைக்கும் ‘வார் ரூம்’ அண்ணாமலைக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை அமைப்புகளின் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் பத்திரிகை அமைப்புகளின் பேரமைப்பான CHENNAI PRESS CLUB, தனது இந்த இழிசெயலுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ” என்பதாக வேண்டுகோளையும் முன் வைத்திருக்கின்றனர்.
பரவலான எதிர்ப்புகள் எழத்தொடங்கியுள்ள இந்த சூழலிலும், பேசியதில் தவறில்லை என்று அண்ணாமலையே விளக்கம் கொடுத்திருப்பது ஒருபுறமிருக்க; அவரது ஆதரவாளர்களுள் ஒருவரான பாஜக ரெங்கராஜன் என்பவர், “இன்று கோவை வட்டார வழக்கை எடுத்திருக்கிறார். நாளை மதுரை வட்டார வழக்கு, நாளை மறுநாள் வேலூர் வட்டார வழக்கை எடுக்கப்போகிறார். மக்கள் புரிஞ்சிகிட்டா போதும். மீடியாவுக்குப் புரிய வேண்டிய அவசியம் இல்லை” என்பதாக பேசியிருப்பதும் இந்த விவகாரத்தின் சூட்டை அதிகப்படுத்தியிருக்கிறது.
– ஆதிரன்.
செய்தியாளன் நடுநிலை தவறும் போது…!
பல்லு படாமல் பாத்துக்கோ…!! போன்ற விமர்சகர்கள் வரவே செய்யும்!!!
இவர்கள் கோபாலபுரம் கொத்தடிமைகள் சங்கம்