சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக தொடா்
சென்னிமலை முருகன் கோவில் கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் அமர்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் சென்னிமலை திருத்தலம் அமைந்துள்ளது. முன் ஒரு காலத்தில் அனந்தனுக்கும், நாகர்ஜுனனுக்கும், வாயு தேவனுக்கும் பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவதத்தை சுற்றி பிடித்துக் கொள்ள வாயு தேவன் கடுமையாக வீசி அனந்தன் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க முயன்றார். அப்போது மேருவின் சிகர பகுதி முறிந்து பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப் பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி சென்னிமலை என்றும் வளங்கள் ஆயின.

சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நகரில் பண்ணைக்காரர் ஒருவருடைய பெரும் பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு வளம் மிக்க காராம் பசுவும் இருந்தது.

தினமும் பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக காராம் பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்து வந்ததை வேலையால் கவனித்து பண்ணையாரிடம் தெரிவித்தான். பண்ணையாரும் பல நாட்கள் இதை கவனித்து வந்த போது தினசரி மாலையில் ஆவிணங்கள் கூட்டமாக தொட்டிக்கு திரும்பி வரும்போது காராம் பசு மட்டும் பிரிந்து சற்று தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள பால் முழுவதும் தானாகவே வெளியே விட்டு பின் மறுபடி மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை கவனித்து விட்டு அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணைத் தோண்டி பார்க்கச் செய்தார். சுமார் 5/6 அடி ஆழம் தோண்டியதும் எல்லோரும் அதிசயக்கத்தக்க பூர்ண முகப்பொலிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. பண்ணையார் புளங்காகிதம் அடைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனே வந்து விட்டதாக கூறிக்கொண்டு விக்ரகத்தை எடுத்து அதன் முகப்பொலிவில் ஈடுபட்டு மெய் மறந்து இருந்தார்.
பின் விக்கிரகத்தினை ஆராய்ந்தபோது விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் மிகவும் அதி அற்புத பொலிவுடன் இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியாக வேலைப்பாடு இல்லாமல் கரடு முரடாக இருப்பதை அவர் ஒரு குறையாக எண்ணி அந்த பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியினால் வேலை துவங்கும் சமயம் அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. இதை கண்ணுற்ற எல்லோரும் பயந்து மேற்கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள். பண்ணையார் தன் அபச்சாரத்திற்கு வருந்தி ஆண்டவர் இப்படியே இருக்க பிரியப்படுகிறார் என்று மகிழ்ந்து பயபக்தியுடன் ஆராதனை செய்து பக்கத்தில் உள்ள குன்றின் மேல் ஒரு சிறிய ஆலயம் எழுப்புவித்து இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாயும் அதுவே சென்னிமலை மலையின் பெயரில் தண்டாயுதபாணி மூர்த்தியாக ஆட்சி பீடத்தில் வீற்றிருப்பதாயும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

அதன் சான்றாக அருள்மிகு தண்டாயுதபாணி மூர்த்தி திருமுகம் பிரசன்ன பொலிவுடனும் இடுப்புக்கு கீழே வேலைபாடற்று இருப்பதை இன்றும் கோவிலுக்கு சென்றால் நாம் காணலாம். பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்பணிகள் கொண்ட பட பாதையும் வாகனங்கள் மூலம் செல்ல நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள தார் சாலை ஒன்றும் உள்ளது. படிவழியில் ஆங்காங்கே நிழல் தரும் மண்டபங்களும் குடிநீர் வசதியும் இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக மின் விளக்குகளும் உள்ளது. மலைக் கோவிலில் மூலவர் சந்நிதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி தெய்வானை சன்னதி தனியாகவும் இதற்கு பின்புறம் நான்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது. ஒரு அர்த்த மண்டபம் ஒரு அந்தரலா ஒரு முக மண்டபம் மற்றும் பின்னர் சேர்க்கப்பட்ட தூண் சோபன மண்டபம். கருவறையில் முருக பகவான் சிற்பம் நிற்கிறது. கருவறையின் உச்சவரம்பு மற்றும் சுவர்களின் சூட்டின் அடர்த்தியான வைப்புகள் காணப்படுகின்றன.
அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் பித்தளை தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது. அந்தராலாவின் வடக்கு மற்றும் தெற்கில் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்டது. சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி பல இடங்களுக்குச் சென்று வந்த சமயம் இம்மலைக் கண்டு தனது பரிவாரங்களுடன் மலைக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகர் அர்ச்சகராக வந்து தன்னைத் தானே பூஜித்து சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ அருணகிரிநாதரால் திருப்புகழில் சென்னிமலை முருகனைப் புகழ்ந்து ஐந்து பாடல்கள் பாடி முருகப் பெருமானால் படிக்காசு பெற்றுள்ளார். கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது. தினசரி மூலவர் அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படி வழியே திருமஞ்சனம் கொண்டு செல்லும் பழக்கம் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் தங்களது சுப காரியங்களுக்காக மூலவர் சிரசுப் பூ வாக்கு கேட்டு அதன்படி செயல்படுவது வழக்கத்தில் உள்ளது. செங்கதுரை பூசாரியார், வேட்டுவப் பாளையம் பூசாரியார், மற்றும் சரவண பூசாரியார் ஆகியோர் வாழ்ந்து இறைக்காட்சி பெற்று முக்தி அடைந்த திருத்தலமாகும். சென்னிமலை நகரினை சுற்றிலும் 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்பது ஐதீகமாகும். மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை என்பது சான்றோர்கள் வாக்கு. “மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் வணங்கியோர்க்கு வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே” என்பது தாயுமானவர் வாக்கு.
அதன்படி மூன்றும் அமைந்த திருத்தலம் இச்சென்னிமலையாகும். பக்தர்கள் தங்களது தொழில் மேன்மை அடையவும், திருமண காரியம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் கல்வி மேன்மை அடையவும், வியாதிகள் தீரவும், கடன் தொல்லைகள் சகலமும் நிவர்த்தி அடையவும், வாழ்க்கையில் எல்லா நலங்களும் பெற்று சுபக்சமாக வாழவும் பிரார்த்தனை செய்து நிறைவேறிய பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் தேர்வு உலா நடத்துவதும் மூலவருக்கு அபிஷேகம் செய்து மனநிறைவு கொள்வதுமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தைப்பூசம் மற்றும் சஷ்டி தினங்களில் பழனிக்கு செல்வோர் ஆனால் போகும் வழியில் உள்ளது. இச்சென்னிமலை. ஒரு முறை சென்று முருகப்பெருமானின் அருளை பெற்று வாருங்கள்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.