இலவச வீட்டு மனை பட்டா – முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள் ?
தமிழகம் முழுவதும் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் சுற்றுப்பயணங்களில் மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். உங்களுடன் முதல்வர் முகாம்களிலும் பொதுமக்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் வகையில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தீர்வு கண்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான், தமிழகம் முழுவதுமே வீட்டு மனை வழங்கப்பட்ட விவகாரத்தில் பட்டா வழங்கி பல மாதங்கள் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்றும்; அளந்து கொடுக்கப்பட்ட இடத்தையும் பலர் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்றும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

பலனில்லாத பட்டாவை மட்டும் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம், இதையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மதுரை மேலூர் வடக்கு நாவினிப்பட்டியை சேர்ந்த பயனாளிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் துணை முதல்வர் முன்னிலையில் கொடுத்த பட்டாக்கள் இவை.
திருச்சியிலும் இதே பஞ்சாயத்துதான். இனாம்குளத்தூரில், கல்வெட்டுகுழி என்ற புறம்போக்கு இடத்தில் 164 பேருக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள். முதல்வர் கையால் பட்டாவை வாங்கி மூன்று மாதங்கள் ஆகியும் இடத்தை அளந்து கொடுக்கவில்லை என்ற நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவகாசம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசம் முடிந்தும் அலைக்கழிக்கப்படுவதாக மீண்டும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

பட்டா வழங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் வீடு கட்டி குடியேறிவிட வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் இத்தகைய வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வரும் நிலையில், இடத்தை அளந்து கொடுக்கவே வருடக் கணக்கில் எடுத்துக்கொண்டால் எப்போது வீடு கட்டி குடியேறுவது? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்.
அரசு விழாக்கள் முன்னரே திட்டமிடப்படும் நிகழ்வுகள்தான். இலவச வீட்டு மனை கோரிக்கையும், இன்று மனு கொடுத்து நாளையே வழங்கிவிடுகிற விவகாரமும் அல்ல. என்றோ கொடுத்திருந்த மனுவுக்கு முதல்வர் வருகையின்போது பட்டா கொடுக்கிறார்கள். அப்படி இருந்தும் முன்னரே இடத்தை கண்டறிந்து, முறையாக அளந்து அத்து காட்டி பட்டா வழங்க சாத்தியம் இல்லையா? விழா முடிந்து ஓராண்டு ஆகியும் இடத்தை வழங்க முடியவில்லை என்றால், என்னதான் சிக்கல்? எங்கே சிக்கல்? என்ற கேள்வி எழுகிறது.

முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கில், அவசரம் அவசரமாக பெயருக்கு பேப்பரில் பட்டா என்று எழுதி கையில் கொடுத்து விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசு கொடுத்த காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு இடத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் பயனாளிகள். அதிகாரிகளோ, இன்று நாளை என்று வருடக்கணக்கில் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்று பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுங்கள். இல்லையா, இது வெறும் கண்துடைப்புக்காக கொடுத்த வெற்றுக் காகிதம்தான் என்றாவது சொல்லிவிடுங்கள். பாவம் மக்கள் உங்களைத் தேடி அலைவதை விட்டு, அடுத்த வேலையையாவது நிம்மதியாக பார்ப்பார்கள் !
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.