இவ்வளவு குரூரமான வங்கியை பார்த்ததே இல்லை … அம்பலப்படுத்தும் தொழிலதிபர் வேணுகோபால் !
இவ்வளவு குரூரமான வங்கியை பார்த்ததே இல்லை… அம்பலப்படுத்தும் தொழிலதிபர் வேணுகோபால் !
சிட்டி யூனியன் வங்கியின் மோசமான நிர்வாக அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வேணுகோபால், அவ்வங்கியின் மோசடிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார்.
சிட்டி யூனியன் வங்கியினால் பாதிக்கப்பட்டு, தொழிலையும் சொத்தையும் இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவபாண்டியனுக்கு நேர்ந்தது போலவே, தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகிறார், தொழிலதிபர் வேணுகோபால்.
கரூர் வைஸ்யா வங்கியின் அடாவடிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்ற சிவகாசி மாரித்துரை. கோடக் மகிந்திரா வங்கியின் பிராடு தனத்தை நீதிமன்றத்தில் தோலுரித்து, நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை நடத்தி, வங்கிக்கு எதிராகவும் வங்கியின் அதிகாரிக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனையையும் பெற்றுத்தந்த சென்னையை சேர்ந்த செல்வராஜ் ஆகியோரின் வரிசையில் தொழிலதிபர் வேணுகோபாலும் இடம் பெற்றிருக்கிறார்.
சிட்டி யூனியன் வங்கியின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி காமகோடியின் தந்தை காலத்திலிருந்தே அந்த வங்கியில் வரவு செலவு இருந்து வந்ததாகவும்; நெருக்கடியான காலங்களில் அவசர கால கடன்களை வழங்கி வந்த நிலையில், காமகோடி காலத்திற்கு பிறகு அத்தகைய அவசரகால கடன்கள் குறித்த நேரத்தில் கிடைக்காமல் பெரும் நெருக்கடியை சந்தித்ததாகவும் பதிவு செய்கிறார், வேணுகோபால்.

எந்த ஒரு தொழிலும் ஏற்ற இறக்கங்களை கொண்டதுதான். வருடத்தின் சில மாதங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுதான் எந்த ஒரு தொழிலும் கடந்து வந்தாக வேண்டிய சூழல் நிலவிவருகையில், அத்தகைய நெருக்கடி காலத்தில் எந்தவிதமான அட்ஜஸ்ட்மெண்டுகளையோ, அவசர கால கடன்களையோ வழங்காமல், நெருக்கடி முற்றிய நிலையில் வாராக்கணக்காக மாறும் தருணத்தில் மட்டும், தனது அனுமதியில்லாமல் பல்வேறு கடன்களை வரவு வைத்தும் அவ்வாறு வரவு வைக்கப்பட்ட கடன்களையும் தங்களது வட்டிக்காக அவர்களே பிடித்தம் செய்து கொண்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறார். கேசவபாண்டியன் விவகாரத்திலும் இதே பாணியில்தான் நடந்து கொண்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, கேசவபாண்டியன் விவகாரத்தில் கோவை கடன்வசூல் தீர்ப்பாயத்தில் சிட்டி யூனியன் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டவை பெரும்பாலும் மோசடியானது. போர்ஜரி கையெழுத்தைப் போட்டு மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பதிவான முதல் தகவல் அறிக்கை மீதான விசாரணையையே தொடராத அளவுக்கு இன்றுவரையில் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார்கள் என்பதாக கேசவபாண்டியன் குற்றச்சுமத்தி வரும் நிலையில், வேணுகோபால் விவகாரத்திலோ, அவர்கள் போர்ஜரி கையெழுத்தை போட்டு முறைகேடான உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபணமாக்கியிருக்கிறார்.
வகையாய் சிக்கிக்கொண்ட நிலையில், வட்டி முதலுடன் சேர்த்து 38 கோடி அளவுக்கு கடன் நிலுவை இருப்பதாக சொல்லி வந்த நிலையில், வெறும் 18 கோடிக்கு சமரச உடன்படிக்கைக்கு முன்வருவதாக நம்பவைத்து, அதன் வழியே தங்களுக்கு எதிரான வழக்குகளை தந்திரமான முறையில் வாபஸ் பெற வைத்து, மேற்படி 18 கோடியையும் வேணுகோபால் முழுமையாக கட்டி முடித்த பின்னரும் அவரது கணக்கை முடிக்காமல், பழிவாங்கும் வகையில் சொத்துக்களை அபகரித்துக்கொண்டதையும் பதிவு செய்கிறார், தொழிலதிபர் வேணுகோபால்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிட்டியூனியன் வங்கியின் தில்லுமுல்லுகள் தொடங்கி, அதன் சதித்திட்டங்கள், எரியும் வீட்டில் பிடுங்கியது வரையில் ஆதாயம் என்ற ரீதியிலான அணுகுமுறை, தொழில்களை இழந்து சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்திய கதை, நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதை, குடும்பத்தையே நாசமாக்கிய கதை என எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார், தொழிலதிபர் வேணுகோபால்.
இதில் எந்த இடத்திலும் தனது தரப்பில், ஏதேனும் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டினால் ”என்னை தூக்கில் கூட போடுங்க சார்”என பகிரங்கமாகவே, சவாலும் விடுகிறார், வேணுகோபால்.
நீங்களும் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் …
— அங்குசம் புலனாய்வுக்குழு.