பத்து அம்ச கோரிக்கைகள் ! அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் ஆர்ப்பாட்டம் !
தமிழகம் முழுவதும் காலியாக கிடக்கும் கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; மூத்த பேராசிரியர்களை கல்லூரி கல்வி இயக்குனர்களாக நியமிக்க வேண்டும்; தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக 20-08-2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் முனைவர் ஆ. கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைவர் முனைவர் அ.சேட்டு, திருச்சி மண்டல செயலர் முனைவர் ஜோ. சார்லஸ் செல்வராஜ், இணைச் செயலர் பு. பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

திருச்சி மண்டலத்திற்குட்பட்ட கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
1.பழைய ஒய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.
- பேராசிரியர் பணி மேம்பாடு தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்க வேண்டும்.
- பணி மேம்பாடு பெறுவதற்கு புத்தொளி / புத்தாக்க பயிற்சி கால நீட்டிப்பு 31.12.2023 வரைக்கான உரிய ஆணை விரைவில் வெளியிட வேண்டும்.
- கல்லூரி ஆசிரியர்களுக்கு M.Phil., Ph.D., பெற்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு விரைவில் வழங்க வேண்டும்.
- முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பின்படி இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும்.
- TRB 2007, 2008, 2009 பேராசிரியர்கள் இழந்த 6-7, 7-8 க்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
- கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேரடியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும்.
- 2000 ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 7 முறை நடந்த பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த பணி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும்.
- தமிழக அரசு கல்லூரிகளில் பணிபுரியும் மூத்த பேராசிரியர் ஒருவரை பணிமூப்பு அடிப்படையில் கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும்.
- காலியாக உள்ள கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
ஆகிய பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
— அங்குசம் செய்திப் பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.