இஷ்டத்துக்கும் அஸ்தியை மாற்றிக் கொடுக்கிறார்கள்…. மதுரையில் பகீர்!
இஷ்டத்துக்கும் அஸ்தியை மாற்றிக் கொடுக்கிறார்கள்…. மதுரையில் பகீர்!
இறந்தவர்களின் அஸ்தியை இஷ்டத்திற்கும் மாற்றி வழங்கி வருகிறார்கள். பலர் தங்களின் பெற்றோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக அஸ்தியை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம், திருப்புவனம் சென்று தங்கள் பெற்றோர்களின் அஸ்தி தான் என்ற குருட்டு நம்பிக்கையில் மற்றவர்களின் அஸ்திகளுக்கு பால் ஊற்றி வருகிறார்கள்.” என மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பகீர் கிளப்பியிருக்கிறார், மதுரை மாநகராட்சி 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மா.ஜெயராம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தத்தனேரி மயானத் தை பராமரித்து வரும் டீடு பவுண்டேச னுக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
அங்குசம் இதழுக்காக மாமன்ற உறுப்பினர் மா.ஜெயராம் அவர்களை சந்தித்து பேசினோம் : ”இங்கு தினசரி 5 முதல் 10 இறப்புகள் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மின் மயானம் செயல்பாட்டில் இல்லை. தற்போது விறகு வைத்துதான் எரிக்கிறார்கள். மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.450/-தான். ஆனாலும், எப்போதும்போல இரண்டாயிரம் ரூபாய் வரை வசூலித்து வருகிறார்கள். விறகு மூலம் எரியூட்டுவதால் எப்படியும் 12 மணி நேரம் ஆகும். ஆனால், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஒரு மணி நேரத்தில் அஸ்தியை கொடுத்து விடுகிறார்கள்.
பிரேதங்களை முழுமையாக எரிப்பதில்லை என்றும் சைக்கிள் டயர், விறகு கட்டைகள், லாரி கழிவு ஆயில் மற்றும் தார் சீட்டுகளை வைத்து எரிப்பதாகவும் சொல்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.” என நீண்ட புகாரை வாசித்தார் அவர். டீடூ பவுண்டேஷன் தரப்பில் அந்நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் கதிரேசனிடம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். “எங்களது சேவை சம்பாதிக்க அல்ல.
பொது சேவையாகத்தான் செய்து வருகிறோம். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த எரிவாயு தகன மேடையை பராமரித்து வருகிறோம். நீங்கள் சொல்வதைப் போல, டயர், பழைய துணி வைத்து எரிப்பதாகவோ, அஸ்தியை மாற்றி கொடுப்பதாகவோ சொல்வது தவறான தகவல். கருவேலம் குச்சிகளை சிறிதாக வெட்டி டன் கணக்கில் இருப்பு வைத்து எரித்து அதில் வரும் எரிவாயுவை எடுத்து அதன் மூலமாகத்தான் இதுவரை பிணங்களை எரியூட்டி வருகிறோம். அரசு விதிமுறையைப் பின்பற்றியே அனைத்தையும் செய்து வருகிறோம். யாரோ எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.
கட்டணமாக ரூ 1350- வசூலிக்கிறோம். அதலிருந்து மாநகராட்சிக்கு ரூ. 450-ஐ கட்டி விடுகிறோம். எஞ்சியிருக்கும் ரூ 950/-ஐ வைத்தே மற்ற செலவுகளை ஈடுகட்டி வருகிறோம். அடுத்தது எல்லோரும் இதனை மின் மயானம் என்கிறார்கள். அப்படியல்ல; இது எரிவாயு தகனமேடை” என்கிறார் தெளிவாக. மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மா.ஜெயராம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கள ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துமா, மதுரை மாநகராட்சி நிர்வாகம்?
– ஷாகுல், படங்கள்: ஆனந்த்.