பெருங்காயத்தூளில் இவ்வளவு மோசடியா?
பிரபலமான கூட்டுப் பெருங்காய நிறுவனத்தின் பெருங்காயத்தூள் விற்பனை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ, அதே அளவு அதனுடைய போலியும் சந்தையில் நிறைய விற்பனையாகிக் கொண்டிருந்தன.
என்ன செய்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
விழி பிதுங்கிப் போனார்கள் அந்த நிறுவனத்தினர்.
ஒரு அதிபுத்திசாலி ஒரு ஐடியாவைத் தந்திருந்திருக்கிறார்.
“இது ஒரிஜினல்” அப்படின்னு அச்சிட்டு விற்பனைக்கு அனுப்புவோமா?
“ஏன்யா லூஸூ. அதை அப்படியும் அவனுங்களும் அச்சடிச்சுடுவாங்கல்ல?”
“ஹாலோக்ராம் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவோம்”
இது நல்ல ஐடியாவாகப்பட்டது. ஒட்டி அனுப்பினார்கள். அடுத்த நாளே அதை விட கூடுதல் தெளிவான ஸ்டிக்கருடன் போலி பெருங்காயத்தூள் வந்தது.
அப்போதுதான் வேறொரு ஐடியா வந்தது.
“ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு க்யூ.ஆர். கோடு கொடுப்போம். அதை ஸ்கேன் செய்தால் ஒரிஜினலா இல்லையா என்று சொல்லி விடலாம். இப்போத்தான் எல்லாருமே கையில் மொபைல் போன் வெச்சிட்டிருக்காங்களே. இணைய இணைப்பும் இருக்கும்”
“அடடே.. செம்ம ஐடியாய்யா”
”அது சரி.. அதே க்யூ.ஆர். கோடை அவனுங்களும் காப்பி அடிச்சு வெச்சிட்டா என்ன செய்யுறது?”
“அதுக்கும் வழி இருக்குங்க. க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செஞ்ச உடனே அது வெப்சைட்டுக்குள்ளே நுழையும். அங்கே பேரு, மொபைல் நம்பரெல்லாம் வாங்கிக்கிட்டு அது நம்மளோட ஒரிஜினல் பெருங்காயமா, இல்லையான்னு சொல்லிட வெப்போம். ஒரு தடவை அப்படி ஸ்கேன் செஞ்சுட்டா அதோட அந்த க்யூ.ஆர். கோடை தடை செஞ்சிடுவோம். அதனாலே அதைக் காப்பி அடிக்க முடியாது”
“ப்ரில்லியண்ட் ஐடியா”
உடனே நடைமுறைப்படுத்தினார்கள். நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்தினார்கள்.
கடைகளில் வரிசையாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நேரே போய் அத்தனை க்யூ.ஆர். கோடுகளையும் ஸ்கேன் செய்து ஏதோ ஒரு பெயர், ஏதோ ஒரு மொபைல் நம்பர் கொடுத்து ஸ்கேன் செய்து விட்டு வந்து விட்டார்கள் எந்தப் புண்ணியவான்களோ.
பிறகென்ன.. வாடிக்கையாளர் போய் ஸ்கேன் செய்தால், “இது டூப்ளிகேட்டுங்க” என்று வந்துத் தொலைத்தது.
ஓரிரு வாரங்களிலேயே அந்த ஐடியாவும் புட்டுக்கிச்சு!
பழையபடி இப்போது அந்த நிறுவனம் அவ்வப்போது புகார் கொடுத்து சில விற்பனையகங்களிடமிருந்து போலிகளைக் கைப்பற்றி அதைச் செய்தியாக்குவதோடு சரி.
நாம் வாங்குவது போலியா, உண்மையா என்பது கடைக்காரருக்குத்தான் தெரியும்.
அதே நிறுவனம் இணைய தளங்கள் வழியே பெருங்காயத்தூளை விற்பனை செய்கிறது.
100 கிராம் பெருங்காயத்தூள் இந்தப் பதிவு எழுதும் போது :
Amazon : ரூ. 161
Zepto : ரூ. 153
Bigbasket : ரூ. 130
Flipkart : ரூ. 138
Jiomart : ரூ. 180
ஒரு பெருங்காயத்தூளிலேயே இத்தனை பிரச்னைகள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு மளிகைப் பொருட்களில் எத்தனை எத்தனை போலிகள் இருக்கின்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
— மாயவரத்தான் கி ர








Comments are closed, but trackbacks and pingbacks are open.