பூமிநாதசுவாமி கோயிலில் பரிகாரத்திற்கு வசூல் வேட்டை சர்ச்சையில் சிக்கிய வாத்தியார் ! exclusive video
அரசு ஊழியராக இருந்து கொண்டு, விடுமுறை நாட்களில் கோயிலில் நுழைந்து பூஜைகள் மேற்கொள்வதும், முறைகேடாக பக்தர்களிடமிருந்து
பூமிநாதசுவாமி கோயிலில் பரிகாரத்திற்கு வசூல் வேட்டை ! சர்ச்சையில் சிக்கிய அரசாங்க வாத்தியார் !
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பெயருக்கேற்றார் போல, பூமி – நிலம் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கான தனிச்சிறப்பான கோயில் என்ற பெருமைபெற்றது, இக்கோயில்.
வீடியோ லிங்
இங்கு கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், வீடு வாங்க, விற்க, வாஸ்து தோஷம் நீங்க, சொத்து பாகப் பிரச்னைகள் தீர என பூமி சம்பந்தமான குறைகள் நீங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். வழக்கமான நாட்களைவிட, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள்.
பிரச்சினைக்குரிய இடத்திலிருந்து முதலில் மூன்றுபிடி மண்ணை எடுத்து வந்து, பூஜை செய்வது; பின்னர், கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட மண்ணுடன் 5 ரூபாய் காணிக்கை முடிப்பையும் சேர்த்து பிரச்சினைக்குரிய இடத்தில் ஓரிரு நாட்கள் வைத்திருந்து, இறுதியாக ஒருபிடி மண்ணையும் 5 ரூபாய் பணமுடிப்பையும் பூமிநாதன் கோயிலில் சேர்த்துவிடுவது என்பது பரிகார நடைமுறை.
இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வரும் பக்தர்களிடமிருந்து முதல்முறை வரும்பொழுது 500.00 ரூபாயும்; காணிக்கை முடிப்புடன் பரிகாரத்தை நிறைவு செய்வதற்கு 3500.00 ரூபாயும் முறைகேடாக, இலட்சக்கணக்கில் குருக்கள் தரப்பில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த கோயிலில் நீண்ட காலமாக ரமணி குருக்கள் என்பவர் பூஜை செய்து வந்திருக்கிறார். அவர் ஓய்வுபெற்றதையடுத்து, அவரது மகன் மணிகண்டன் என்பவர் தற்போது தற்காலிக ஊழியர் என்ற அடிப்படையில் பூஜை செய்து வருகிறார். கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத, மணிகண்டனின் சகோதரர், கிரி என்பவர் மேற்படி வசூலை முன்னின்று நடத்துகிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.
வீடியோ லிங்
”மணிகண்டனின் சகோதரரான கிரி என்பவர், பெட்டவாய்த்தலை அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரசு ஊழியராக இருந்து கொண்டு, விடுமுறை நாட்களில் கோயிலில் நுழைந்து பூஜைகள் மேற்கொள்வதும், முறைகேடாக பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து வருகிறார் என்கிறார்கள்.
“அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு, இந்த வேலையை நான் செய்வேனா? இரண்டு இடத்தில் கையெழுத்து போட முடியுமா? என் தம்பிதான் அந்தக் கோயில்ல குருக்களா இருக்கான். அவனுக்கு உடம்பு சரியில்லாம போச்சினா, அவனுக்கு உதவியா நான் போவேன். அதுவும் சனிக்கிழமை ஸ்கூலுக்கு போயிடுவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் போவேன். மற்றபடி, யாரையும் கட்டாயப்படுத்தியெல்லாம் காசு வாங்குவதில்லை. அவங்களா கொடுத்தா வேணாம்னு சொல்லமாட்டேன். பக்தர்களாக விரும்பி தட்டில் போடுவதுதான்.
இன்னும் சொல்லப்போனால், 14 வருசத்துக்கு முன்னாடி இந்த மண் பூஜையை ஆரம்பிச்சு வச்சது நான்தான். அதுக்கு முன்னாடி கிடையாது. என்னாலதான், கவர்மெண்டுக்கு வருமானம் வருது. பூஜை சாமான்கள் விற்கிற கடை 2,71,000/-க்கு ஏலம் போயிருக்கு. 120 குடும்பங்கள் இந்தக் கோயில நம்பி பிழைக்கிறாங்க. இங்க இருக்க இ.ஓ.வுக்கு 60,000 சம்பளம். என் தம்பிக்கு மாசம் மூவாயிரம்.” என்கிறார், கிரி.
கோயிலின் செயல் அலுவலரை தொடர்புகொண்டோம். அவரது சார்பில் பேசிய கணக்காளர் குணசேகரன், ”ரெண்டு வருசத்துக்கு முந்தியும் இதே போல குற்றச்சாட்டு வந்துச்சி. அப்போ இருந்த இ.ஓ. போலீஸ் கம்ப்ளெயிண்ட் எல்லாம் கொடுத்தாரு. மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்லயும் கூப்பிட்டு வார்ன் பண்ணி அனுப்பினாங்க. தற்போது, மீண்டும் ஆரம்பித்துவிட்டார் போல. இந்த கோயிலுக்குனு நிரந்தர ஊழியர்கள் இல்லை. விடுமுறை நாட்களில் கிரி வந்து போறதா, எங்களுக்கும் தகவல் வந்திருக்கு. இ.ஓ.வின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.” என்றார்.மேலும், “மண் பரிகாரம் செய்வதற்காக மட்டும், வழக்கமான நாட்களில் சராசரியாக 20 பேர் வரையிலும், விடுமுறை நாட்களில் சராசரியாக 100 பேர் வரையிலும் பக்தர்கள் வருகிறார்கள். இதுதவிர, அர்ச்சனை, அன்றாட தரிசனத்துக்கு எல்லா கோயில்களையும் போல வந்து செல்வார்கள்.” என்கிறார், அவர்.
நாம் தகவல் சொன்னதற்குப் பிறகுதான், விடுமுறை நாட்களில் கிரி வந்து செல்கிறார் என்ற தகவல் தெரிய வருவதாக, கோயில் நிர்வாகத் தரப்பில் சொல்வது, இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகளுக்கும் பங்கீட்டு பணம் செல்கிறதோ, என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இதில் கூடுதல் தகவல், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூமிநாத சுவாமி திருக்கோயில் பற்றிய ஸ்தல வரலாற்றை பதிவு செய்துள்ள முன்னணி தினசரியான தினமணி மற்றும் தினமலர் இணைதளங்களில் , தொடர்பு முகவரியாக கோயில் நிர்வாக அலுவலரின் தொடர்பு எண்ணுக்குப் பதிலாக, ”கிரி” யின் கைப்பேசி எண்தான் பதிவாகியிருக்கிறது.
”பழநி முருகன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் கட்டண அடாவடி வசூலில் ஹிந்து அறநிலைத்துறை ஈடுபடுகிறது. ஏழைகளை கோயில்களில் நுழைய விடக்கூடாது என அறநிலையத்துறை நினைக்கிறது. கோயிலை வருமானம் சம்பாதிக்க கூடிய இடமாக தி.மு.க., அரசு மாற்றி வருகிறது. அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்ய முறைப்படுத்த வேண்டும்.” என இந்து அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கால பூஜை கட்டளை தொகை உயர்த்தப்பட்டதற்கு எதிராக, காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம். அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். திருச்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சினையோடும் பரிதவிப்போடும் கோயில் படியேறும் பக்தனிடம் கட்டாய பணம் வசூலிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
– ஆதிரன்.
வீடியோ வடிவில் பார்க்க – அங்குசம் யூடியூப் சேனலில் பார்க்கவும்