விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – மோதகம்
சமையல் குறிப்பு: மோதகம்
வணக்கம், சமையலறை தோழிகளே விநாயகர் சதுர்த்திக்கு என்ன ஸ்பெஷல்னு பாக்குறீங்களா! வேற என்ன நம்ப பிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு புடிச்ச மோதகம் தாங்க. இது செய்றது ரொம்ப கஷ்டம்லாம் இல்லங்க சட்டுபுட்டுனு சீக்கிரமா செஞ்சுடலாம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு அல்லது கொழுக்கட்டை மாவு 250 கிராம், வெல்லம் 250 கிராம், தேங்காய் துருவியது ஒரு கப், கருப்பு எள் 50 கிராம், வேர்க்கடலை 50 கிராம், பொட்டுக்கடலை 50 கிராம், முந்திரி 10, உப்பு தேவையான அளவு, நெய் தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு, கொழுக்கட்டை அச்சு -1.
செய்முறை:-
ஒரு அகலமான பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக பிசையவும். அதன் பின் சூடான தண்ணீரை ஊற்றி பூரி மாவு பிசைவது போல் பிசைந்து ஒரு வெள்ளை துணி போட்டு மூடி அரை மணி நேரம் விடவும். அதன் பின் கொழுக்கட்டை உள்ளே வைக்கும் பூரணம் எப்படி செய்வது என பார்க்கலாம். வாணலியில் சிறிது நெய் ஊற்றி அதில் எள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, துருவிய தேங்காய் இதனை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த கலவையை ஒன்று சேர்த்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் வெல்லம் தேவையான அளவு நீர் சேர்த்து ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து வெல்லம் கரைந்து வரும் அளவிற்கு கொதித்து வைத்து எடுத்துக்கொள்ளவும். கொதித்த வெல்லப்பாகை அரைத்து வைத்த பூரணக்கலவையோடு சேர்த்து வடிகட்டி ஊற்றிக்கொள்ளவும். இதனை மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை கிளறி எடுக்கவும். இப்போது கொழுக்கட்டை அச்சில் பிசைந்த கொழுக்கட்டை மாவை அச்சில் வைத்து தட்டி அதன் உள் இந்த பூரண கலவையை சிறிது சிறிதாக வைத்து அச்சில் வார்த்து எடுக்கவும். எடுத்த கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான விநாயகர் ஸ்பெஷல் மோதகம் தயார். இதனை பூஜையில் பிள்ளையாருக்கு பிரசாதமாக வைத்து வழிபடுங்கள். சுவைத்தும் மகிழுங்கள்.
— பா. பத்மாவதி