டெண்டரை நிறுத்திய துறையூர் கவுன்சிலர்கள் !
டெண்டர் அறிவிப்பு நோட்டீஸ் தங்களுக்கு ஏன் அனுப்பவில்லை எனவும் , டெண்டர் விவகாரத்தில் முறைகேடு
டெண்டரை நிறுத்திய துறையூர் கவுன்சிலர்கள் !
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் , கடந்த 31-ந் தேதி செல்லிப்பாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணாநகரில் , ஒன்றிய நிதியின் மூலம் சுமார் 11 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டுவதற்கான டெண்டர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் டெண்டர் அறிவிப்பிற்கான நோட்டீஸ் கவுன்சிலர்களுக்கும், ஒப்பந்தாரர்களுக்கும் அனுப்பப்படாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி , செல்லிப்பாளையம் 5வது வார்டு கவுன்சிலர் சின்னம்மாள், சொத்தூர் 10-வது வார்டு கவுன்சிலர் சிவக்குமார், வரதராஜபுரம் (செங்காட்டுப்பட்டி) 4வது வார்டு அசோகன் , மணலோடை 3வது வார்டு கவுன்சிலர் லலிதா உள்ளிட்டோர் , ஒன்றிய ஆணையர் லதாவிடம் , டெண்டர் அறிவிப்பு நோட்டீஸ் தங்களுக்கு ஏன் அனுப்பவில்லை எனவும் , டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான பொது நிதியை டெண்டர் நோட்டீஸ் அனுப்பாமல் , ரகசியமாகவும் , முறைகேடாகவும் டெண்டர் நடைபெற்றுள்ளது எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்திடுமாறும், ரத்து செய்யாதபட்சத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது பற்றி முறையிடப் போவதாகவும் தெரிவித்தனர். கவுன்சிலர்களின் கடும்எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தப்புள்ளி நிறுத்தி வைப்பதாக துறையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் லதா அறிவித்தார். ஒப்பந்தப்புள்ளி நிறுத்தி வைத்ததற்கான ஆணையரின் கையொப்பமிட்ட அறிக்கை அலுவலக நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்டது.
கவுன்சிலர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதே போன்று ஒன்றியக் குழு கூட்டங்களில் அஜெண்டாவில் இல்லாமல் இடைச்செருகலாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன்மீது எதிர்ப்பும், விவாதங்களும் நடைபெற்று மேலிடம் வரை புகார் சென்று , இதன் எதிரொலியாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதும் துறையூர் யூனியனில் நடைபெற்று உள்ள சூழலில் , தற்போது நடைபெற்ற டெண்டரை கவுன்சிலர்கள் தெரிந்து , அதனைக் கண்டுபிடித்து ரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்குண்டான அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக கையாண்டு, துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் இனியும் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக தலையிட்டு ஆவண செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ஜோஸ்