25 லட்சம் குளித்தலை எம்.எல்.ஏ. நிதியில் போட்ட புது ரோடுக்கு நேர்ந்த கதி !
குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை இரண்டே நாளில் பெயர்ந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் பஞ்சாயத்து,
மேலதாளியாம்பட்டி வடக்குத் தெருவழியாக சீகம்பட்டிக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது.
இந்த மண் சாலை வழியாக தினந்தோறும் விவசாயிகள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பிரதான சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் அங்குள்ள மானாவாரி நிலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் செல்ல வழி இன்றி குடியிருப்பு பகுதிக்குள் சென்று மூழ்கடிக்கும் அவல நிலை உள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையில் மழை நீர் செல்ல வழி இன்றி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பொக்லின் எந்திரம் மூலம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சாலையை சரி செய்தனர்.
இந்த சாலையை தரம் உயர்த்தி தார் சாலையாக மாற்ற அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திடம் அப்பகுதி மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்ற குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 25 லட்சத்தை ஒதுக்கி சுமார் 670 மீட்டர் தூரம் தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனை அடுத்து பூமி பூஜை போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஒப்பந்ததாரர் சாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் சில தினங்களுக்கு முன்பு பணியை முடித்துள்ளார். புதிய தார் சாலை வழியாக வாகனங்கள் சென்றபோது தார் சாலை பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தார் சாலையை கையில் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்ற முறையில் ஒப்பந்ததாரர் அமைத்ததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரமற்ற சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற சாலைக்கு பதிலாக புதியதாக தரமான சாலையை மீண்டும் அமைத்து தர வேண்டு. என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நௌஷாத்