ஒரு கேட்சால் மாறிய மேட்ச்!!!!
ஒரு கிரிக்கெட் போட்டியின் தலைவிதியை, ஒரு உலகக்கோப்பையின் முடிவை, 130 கோடி மக்களின் கனவை, ஒரே ஒரு கேட்ச் தீர்மானிக்குமா?
ஆம், தீர்மானிக்கும் என்பதற்கு நேற்று இரவு அமன்ஜோத் கௌர் பிடித்த அந்த ஒரு கேட்சே சாட்சி. தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்டின் விக்கெட்டை வீழ்த்த அவர் பிடித்த அந்த ‘திக் திக்’ கேட்ச், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பை சில நொடிகள் நிறுத்தி, பின்னர் ஆனந்தக் கடலில் மிதக்க வைத்தது.
இந்தியாவின் வெற்றிக்கும், உலகக்கோப்பைக்கும் இடையில் ஒரே ஒரு தடையாக, அசைக்க முடியாத மலையாக நின்றுகொண்டிருந்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.
தனி ஒருவராகப் போராடிச் சதம் விளாசிய அவர், தென்னாப்பிரிக்காவின் வெற்றி நம்பிக்கையைத் தனது பேட்டின் நுனியில் சுமந்துகொண்டிருந்தார்.
இந்தியா ஒருபுறம் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், வோல்வார்ட் களத்தில் இருக்கும் வரை வெற்றி நிச்சயம் இல்லை என்ற பதற்றம் அனைவர் முகத்திலும் தெரிந்தது.
ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பில் இருந்தபோது, 42வது ஓவரை வீச வந்தார் தீப்தி ஷர்மா. அவரது பந்தை வோல்வார்ட் தூக்கி அடிக்க, அது டீப் மிட்-விக்கெட் திசையை நோக்கி காற்றில் மிதந்தது.
ஒட்டுமொத்த மைதானத்தின் பார்வையும், கோடிக்கணக்கான ரசிகர்களின் பார்வையும் அந்தப் பந்தைப் பின்தொடர்ந்து ஓடிய அமன்ஜோத் கௌரின் மீதே இருந்தது.
பந்தின் கீழ் கச்சிதமாக வந்து நின்றார் அமன்ஜோத். ஆனால், அடுத்த சில நொடிகள், பதற்றத்தின் உச்சம். பந்து அவரது கைகளிலிருந்து நழுவியது.
மீண்டும் பிடிக்க முயன்றார், அது மீண்டும் தட்டியது. ‘ஐயோ, கேட்ச் போய்விட்டதா?’ என்று அனைவரும் உறைந்து நின்ற நொடியில், கீழே விழுந்து பாய்ந்து, மூன்றாவது முயற்சியில் பந்தை இறுக்கமாகப் பிடித்தார் அமன்ஜோத்.
கேட்சைப் பிடித்த மறுகணமே, ஒரு பெரிய பாரம் இறங்கியது போல தரையில் அப்படியே படுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அமன்ஜோத் கௌர்.
அவரது அந்த ரியாக்ஷனே, அந்த விக்கெட்டின் முக்கியத்துவத்தைச் சொன்னது. சக வீராங்கனைகள் அனைவரும் அவரை நோக்கி ஓடிவந்து, மிகப்பெரிய ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
அந்த ஒரு விக்கெட், வெறும் வோல்வார்ட்டின் விக்கெட் அல்ல; அது தென்னாப்பிரிக்காவின் தோல்வியை உறுதி செய்த விக்கெட்.
அது இந்தியாவின் வெற்றிக் கதவை முழுமையாகத் திறந்த விக்கெட்.
முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
ஷஃபாலி வர்மாவின் (87) அற்புதமான ஆட்டம், தீப்தி ஷர்மாவின் (58) பொறுப்பான அரை சதம், ரிச்சா கோஷின் (34) அதிரடி ஆகியவற்றால் இந்தியா 50 ஓவர்களில் 298 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா, வோல்வார்ட்டின் (101) சதத்தால் போராடியது. ஆனால், வோல்வார்ட்டின் விக்கெட்டுக்குப் பிறகு சரிந்த தென்னாப்பிரிக்கா, 246 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தியா முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வரலாற்று வெற்றியில் பலரது பங்களிப்பு இருந்தாலும், அமன்ஜோத் கௌர் பிடித்த அந்த ஒரு கேட்ச், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படும்.
— பிரபு சண்முகம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.