இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே !
பண்ணையின் உள்ளிருந்த ப்ராய்லர் கோழி , வெளியே மேய்ந்து கொண்டிருந்த நாட்டுக்கோழியை பார்த்துக் கொண்டே தனக்கு அருகில் இருந்த சக ப்ராய்லர் தோழியிடம் கூறியது ” அங்க பாருடி எவ்வளவு சுதந்திரமா அந்த செவத்தவ சுத்துறானு…
தனக்கு புடிச்சத தானே தேடி சாப்புடுறாடி…
நமக்கும் வாய்ச்சதே ஒரு வாழ்க்க .. நமக்கு புடிக்குதா என்னனு கூட கேக்காம தீவனம் தண்ணி எல்லாத்தயும் நமக்கு குடுக்குறானுங்க..
நாளுக்கு நாளு உடம்பு தான் பெருக்குது. அவள பாரேன். உடம்ப என்ன ட்ரிம்மா மெய்ண்டெய்ண் பண்றானு..
போருடி(Bore) நம்ம வாழ்க்க… வாழ்ந்தா அவள மாதிரி ஒரு நாள் வாழனும்டி ” என்றது. அங்கே தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த நாட்டுக்கோழி தன் தோழியிடம் கூறியதைக் கேட்போம் வாருங்கள்.
“ச்ச.. வாழ்க்கைனா அந்த வெள்ளக்காரிகளுக்கு அமஞ்சது மாதிரி இருக்கனும்டி..
வேளைக்கு மணியடிச்சா டாண்ணு சாப்பாடு தீனி தண்ணீ இருந்த இடத்துக்கே வந்துடுது.. நம்மள மாதிரி ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் நாய்பட்டபாடா அலைய வேண்டியதே இல்ல பாத்தியா..
ஆளும் எப்டி கொளு கொளுனு குஷ்பு மாதிரி இருக்கா பாரு.. நாம தான் சூம்பி போய் திரியறோம்.. அவள மாதிரி ஒரு நாளாச்சும் வாழனும்டி”
நாமக்கல் கோழிப்பண்ணையில் கண்ட காட்சியை புனைவாக மாற்றி எழுதியது.
மக்களே…
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே…
வரலாற்று காலந்தொட்டு இதே கதை தான்.
நம்மிடம் இருப்பதைக் கொண்டு இன்பம் அடையக்கூட நேரமில்லாமல் அடுத்தவன் கதையை கேட்கவே பார்க்கவே நமக்கு அலாதி இன்பமாக இருக்கும்.
நம்மை விட பிறர் சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
நம்மை விட பிறர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது போன்ற பிரம்மை உணர்வு பீடித்தவர்களாகவே பெரும்பான்மை மக்கள் இங்கு வாழ்கிறோம்.
நடப்பவருக்கு ஸ்கூட்டி மேல் கண்..
ஸ்கூட்டி வைத்திருப்பவருக்கு ராயல் என்ஃபீல்டு மேல் கண்..
ராயல் என்ஃபீல்டு வைத்திருப்பவருக்கு மாருதி கார்..
மாருதி கார் வைத்திருப்பவருக்கு இன்னோவா..
இன்னோவா வைத்திருப்பவருக்கு பிஎம்டபிள்யூ..
இப்படியாக மகிழ்ச்சி என்பது கிளை விட்டு கிளை தாவும் மந்தி போல தாவிக்கொண்டே இருக்கிறது.
குண்டா இருந்தா குண்டச்சி குண்டன்னு ஊர் பேசும்.
சரி.. உடம்பு இளைச்சா உடனே உனக்கென்ன சுகரான்னு கேட்கும்.
ஏண்டி முன்ன நல்லா தான இருந்த.. என்னாச்சு உனக்கு.. டொக்கு விழுந்த மாதிரி ஆய்ட்டியேடி..
ஏலேய் மக்கா உனக்கு ஏதும் வரக்கூடாத நோய் வந்துருச்சாலே.. ஏன் இப்டி ஆய்ட்ட என்று கேட்கும்..
சரி..ஒல்லியா இருக்கவன நிம்மதியா விடுமான்னா.. அதுவும் இல்ல.
அடேய் இவனப்பாறேன்.. பென்சிலுக்கு சொக்கா மாட்டுனவன மாதிரி இருக்கான்..
ஏண்டி என்ன திண்ணாலும் பெருக்கவே மாட்டேங்குற..என்று கேட்கும் அதே ஊர்..
கொஞ்ச நாள்கழிச்சு உடம்பு கொஞ்சம் குண்டானா போதும்..
திரும்ப பழைய கதையை ஆரம்பிக்கும் .
அட குண்டச்சி வாடி சீக்கிரம்.. மெதுவா இவ உருண்டு வர்றதுக்குள்ள.. பொழுது விடிஞ்சுரும்.. என்று காதுக்குள் தாரைக் காய்ச்சி ஊற்றும்..
பள்ளி காலம் வரை படிப்பில் எப்படி என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.
கல்லூரி முடிந்த பிறகு எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று மாறி விடும்.
அடுத்து எப்போ கல்யாணம்?
இந்த மாசம் தலைக்கு குளிச்சியா?
வயித்துல புழு பூச்சி ஏதும்?
இப்படியாக சமூகம் நம் மீது தொடர்ந்து அழுத்தத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.
இதனால் நம்மை விட பிறர் நன்றாக வாழ்கிறார்கள் என்ற மாய பிம்பம் தோற்றுவிக்கப்பட்டு அதை நாம் நம்ப வைக்கப்படுகிறோம்.
இருப்பதில் சுகம் அடைய ஒருபோதும் இந்த நுகர்வுக் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை.
நாம் நமது உடல் நலத்திற்காக உடல் எடையை பராமரிப்பது போல் நாம் நமது மனநலனுக்காக மன எடையையும் பராமரித்தாக வேண்டும்.
மன எடையை ஏற்றும் கர்வம் அகந்தை பொறாமை போன்ற குணங்களை முடிந்த வரை கழற்றி விட்டு விட வேண்டும்.
ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.
இவை இரண்டுக்கும் இடையே சரியான சமநிலையை நம் மனதால் அடைய வேண்டும்.
Dr.அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.