டயட் இட்லி — கோவி.லெனின்
கவுண்டமணியிடம் செந்தில், “அண்ணே வயிறு சரியில்லேண்ணே..” என்று சொல்லும்போது, “இட்லியும் கெட்டி சட்னியும் வச்சி சாப்பிடு. சரியாயிடும்” என்று பதில் சொல்லிவிட்டு, , “நான் என்ன ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ்.னா போர்டு போட்டிருக்கேன்?” எனக் கவுண்டமணி கேட்பார். வயிறு சரியில்லாத நேரத்தில், கெட்டி சட்னியைத் தவிர்த்து, கெட்டித் தயிருடன் இட்லி சாப்பிட்டால் நலமாக இருக்கும்.
பள்ளிப் பருவத்தில் வீட்டில் பாட்டியின் சமையல்தான். அவர் எளிதாக செய்யக்கூடிய காலை உணவு, இட்லி. அதையே அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் சலிப்பில், “வயிறு சரியில்லம்மா..இட்லி வேணாம்” என்று நான் சொல்லும்போது, “அப்படின்னா சட்னியோ, பொடியோ வச்சிக்க வேணாம். இந்தா, தயிரு தொட்டு சாப்பிடு” என்று கெட்டித்தயிருடன் இட்லியைத் தட்டில் வைப்பார். தப்பிக்கவே முடியாது.
இட்லிக்கு ஒரு நாள் தேங்காய் சட்னி, ஒரு நாள் தக்காளி சட்னி, ஒரு நாள் சாம்பார், ஒரு சில நாட்களில் பூண்டு-மிளகாய் சேர்த்து அரைத்த உறைப்பான துவையல் என்று சைடு டிஷ் மாறிக் கொண்டிருக்கும். எதுவும் செய்ய முடியாத நேர நெருக்கடி என்றால் இட்லிப்பொடியும் எண்ணெய்யும் இருக்கும். எனினும், இட்லிக்கு ஸ்பெஷல் என்பது, கடப்பா.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சிறப்பு டிஷ் அது. பாசிப்பருப்பு, மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை உள்ளிட்ட பலவும் சேர்ந்து, சுவையுடன் பல இட்லிகளை சாப்பிட வைக்கும் தன்மை கடப்பாவுக்கு உண்டு.

இன்று ஊரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் அண்ணன் உமாசங்கள் வீட்டு திருமண விருந்தின் காலை உணவில் ஆப்பம்-தேங்காய் பால், ரவா தோசை, பொங்கல், வடை ஆகியவற்றுடன் இட்லிக்கு கடப்பா வைத்தார்கள். “இன்னொரு இட்லி வச்சிக்குங்க” என்றார் பரிமாறியவர். “போதுங்க.. நிறைய சாப்பிட்டுட்டேன். பயணம் போகணும்” என்றேன். “அதனால் என்ன?” என்றவர், இட்லியுடன் கெட்டித்தயிரையும் இலையில் வைத்தார். டயட்டில் இருந்தாலும் இதை சாப்பிடலாம்” என்றார்.
நாவின் சுவைக்கு கடப்பாவுடன் ஓர் இட்லி. நலம் காக்க கெட்டித்தயிருடன் ஓர் இட்லி.
மனதில், ஊரில் இருந்த நாட்களின் சுவை ஊறியது.
— கோவி.லெனின் – மூத்த பத்திரிகையாளர்.