ஆசிரியர்களை பழி வாங்கும் பழங்குடியினர் நல இயக்குனர் ச.அண்ணாதுரையை ! பழையபடி மத்திய அரசு பணிக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள் !
ஆ.தி.ந. துறை ஆசிரியர்களை பழிவாங்குகிறாரா, பழங்குடியினர் நல இயக்குனர் ச.அண்ணாதுரை ? “மத்திய அரசின் சர்வாதிகாரத்தை மாநில அரசில் நிர்வாகத்தில் காட்டுவதா ? பழங்குடியினர் நலத் துறையின் கீழ் பயின்று வரும் மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேண்டுகோள் விடுத்த காப்பாளர் சங்க மாநிலப் பொறுப்பாளர்கள் மீது 17 (ஆ) குற்றச்சாட்டினை பிறப்பிப்பதா?” என கேள்வி எழுப்பியிருப்பதோடு, ஆதிதிராவிடர்களின் நலனுக்கான எந்த முயற்சியும் எடுக்காமல், அத்துறை ஆசிரியர்களிடத்தில் வெறுமனே அதிகாரத்தை மட்டுமே செலுத்தி வரும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரையை பழையபடி மத்திய அரசு பணிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
இந்த விவகாரம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொற் குற்றமா?.. பொருள் குற்றமா? மத்திய அரசு பணியில் உள்ளவரை மாநில அரசு நிர்வாகப் பணியில் மாற்றுப் பணியில் மாற்றியதன் விளைவுதான் இது! மத்திய அரசின் சர்வாதிகாரத்தை மாநில அரசில் நிர்வாகத்தில் காட்டுவதா? துறையின் அமைச்சரை மதிப்பதில்லை.
துறை சங்கங்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதில்லை. சர்வாதிகாரமாக நடந்து வரும் திரு. ச.அண்ணாதுரை, CLS அவர்களை உடனடியாக மத்திய அரசுப் பணிக்கு திருப்பி அனுப்பிட ஐபெட்டோ (AIFETO) அகில இந்திய அமைப்பின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 212 தொடக்கப் பள்ளிகளும், 49 நடுநிலைப் பள்ளிகளும், 31 உயர்நிலைப் பள்ளிகளும், 28 மேல்நிலைப் பள்ளிகளும் என 320 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் 30000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாததால் 50 க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட காரணத்திற்காக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் திரு. விவேக், திரு. சுதாகர், திரு. சங்கர சபாபதி ஆகியோர் மீது 17 (ஆ) குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக பழங்குடியினர் மாணவர்களின் கல்வி நலனில் மீது அக்கறை காட்டாதவர். அதிகாரம் செய்வதற்காகவே பதவியினை பயன்படுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 76 வருடங்கள் ஆகிவிட்டது. கருத்துச் சுதந்திரம் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வாதிகார ஒழுங்கு நடவடிக்கையினை திரும்ப பெற வேண்டுமென பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இவ்வளவு நிர்வாகச் சிக்கலுக்கும் காரணமாக இருந்து வரும் மத்திய அரசு தொகுப்பிலிருந்து மாற்றுப் பணியில் பணிபுரியக்கூடிய பழங்குடியினர் நல இயக்குனர் ச. அண்ணாதுரை, CLS அவர்களை மாநில அரசின் பணியிலிருந்து விடுவித்து மத்திய அரசுப் பணிக்கு திருப்பி அனுப்பிட வேண்டுமென ஐபெட்டோ (AIFETO) அகில இந்திய அமைப்பின் சார்பிலும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
பழங்குடியின மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்போம்!
தங்களின் விரைவான நடவடிக்கைக்கு பழங்குடியின மாணவர்களும் ஆசிரியர்களும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார், ஐபெட்டோ வா.அண்ணாமலை.
– அங்குசம் செய்திப்பிரிவு.