விருதுநகரில் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த பெண் ஊழியரை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர்
விருதுநகரில் நியாய விலை கடையில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து எடை போடும் ஊழியருக்கு ஊதியம் அளிப்பதாகவும், இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் இவ்வாறு தான் செய்கிறார்கள் என நியாய விலை கடை பெண் விற்பனையாளர் கூறும் அதிர்ச்சி காணொளி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய சூழ்நிலையில், நியாய விலை கடை ஊழியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அய்யம்பட்டி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் மீது அரிசியை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அப்பகுதி பொதுமக்கள் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.அப்போது எடை இயந்திரத்தில் எடை குறைவாக வைத்து பொருட்களை வினியோகம் செய்துள்ளார்.
விற்பனையாளர் திலகவதியிடம் இது குறித்து பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு மூட்டை அரிசியை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் தங்களது கைபேசியில் காணொளியை பதிவு செய்து கொண்டே விற்பனையாளரிடம் கேள்வி கேட்டபோது, இவ்வாறு வெளியில் அரிசிகளை விற்பனை செய்தால் தான் பொருட்கள் எடை போடும் உதவியாளருக்கு சம்பளம் கொடுக்க முடியும் எனவும், மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் இது நடக்கிறது என தெரிவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்படி நியாய விலைக்கடையில் மாவட்ட வழங்கல் அலுவலரால் 21.11.2024 அன்று தணிக்கை செய்யப்பட்டு கடையில் கோதுமை 108 கிலோ, பாமாயில் 2 கிலோ, துவரம் பருப்பு 5 கிலோ, சீனி 7 கிலோ, செறிவூட்டப்பட்ட அரிசி 114 கிலோ இருப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ.6425/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03.12.2024 அன்று தனியார் தொலைக்காட்சியின் எக்ஸ் வலைதளத்தில் வரப்பெற்ற செய்திக்கு பின்னர், சிவகாசி தனி வருவாய் ஆய்வாளரால் மேற்படி கடை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. 03.12.2024 அன்று சிவகாசி வட்டம், அய்யம்பட்டி நியாய விலைக் கடை தனி வருவாய் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கையில் 100 கிலோ அரிசி அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு, ரூ.2500/- அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனவே உண்மைக்கு புறம்பாக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பேச்சு வீடியோவில் சமூக வலைதளத்தில் பரவி வருவதாலும், தனியர் முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாலும், மேற்கண்ட சிவகாசி வட்டம், அய்யம்பட்டி நியாய விலைக் (கடை எண்.24FD007PN) விற்பனையாளர் திலகவதி என்பவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
— மாரீஸ்வரன்.