தூத்துக்குடி மாவட்ட ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனு அளித்த மாவட்ட தலைவா்
திருநெல்வேலி திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட ஐந்து இரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகளை விரிவாக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும், இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், பரிந்துரை செய்த தங்களுக்கும் மாநில தலைவர் K.அண்ணாமலை அவர்களுக்கும் அப்பகுதி மக்களின் சார்பாகவும் பாஜக சார்பிலும் நன்றியை தெரிவித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அவர்கள்
தென்தமிழகத்தில்; உள்ள இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி துறைமுகமானது இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இதனால் இங்கு பெருமளவில் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அதிகமாக உள்ள வணிக நகரமாகவும் திகழ்கின்றது.
அதேபோல் மீன்பிடி தொழில் மற்றும் மீன்சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் சர்வதேச சந்தையில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் கம்பு சோளம் உழுந்து பாசிபயிர் போன்ற சிறுதானிய உற்பத்தியிலும் வாழைநெல் முருங்கை சாகுபடி என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனத்தில் இஸ்ரோ இராக்கெட் ஏவுதளம், வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையம், பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி நிலையம், சோலார் மின் உற்பத்தி, சர்வதேச தரத்தில் விமான நிலைய விரிவாக்கம் போன்ற பல புதிய வளர்ச்சித் திட்டங்களை வழங்கி உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் திருச்செந்தூர்முருகன் கோவில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், பனிமயமாதா ஆலயம், நவதிருப்பதி கோயில்கள், போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆன்மீக நகரமாகவும் தூத்துக்குடி மாவட்டம் விளங்கிவருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரியும் உள்ளுர் மற்றும் வெளியூரைச் சார்ந்த மக்களின் போக்குவரத்து வசதியை எளிதாக்கும் விதமாக கீழ்காணும் கோரிக்கையை தங்களிடம் வைக்கின்றேன்.
- சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
- தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பகல்நேர இன்டர்சிட்டி இரயில் இயக்கப்பட வேண்டும்.
- பெங்களுரில் இருந்து மதுரை வரை இயங்க கூடிய வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.
- தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை வாரம் இருமுறை இயக்கப்படும் இரயில் சேவையை தினசரி இரயில் சேவையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னை சென்டலில் இருந்து மாலை 6 மணிக்கு ஹைத்ராபாத் வரை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும்.
- விரைவில் பயன்பாட்டிற்கு வரக்கூடிய வந்தே பாரத் சிலீப்பர் இரயிலை தூத்துக்குடியில் இருந்து ஹெளரா வரை புதிய இரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடந்த 2009 ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம், திருச்சூர், கர்நாடகா, கோவா வழியாக லோக்மானிக் திலக் இரயில்வே நிலையம் வரை இரயில் சேவை வழங்க அப்போதைய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்து தூத்துக்குடியில் இருந்து லோக்மானிக் திலக் இரயில்வே நிலையம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- தூத்துக்குடி – கன்னியாகுமரி வழி திருநெல்வேலி நாகர்கோவில் புதிய பயணிகள் இரயில் சேவைகளை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தூத்துக்குடி – திருச்செந்தூர் – குலசேகரப்பட்டினம் – உடன்குடி- திசையன்விளை வழியாக கன்னியாகுமரி வரை புதிய கடற்கரை இரயில்பாதை அமைக்கபட வேண்டும்.
- திருச்செந்தூரில் உள்ள இரயில் நிலையத்தின் நடைமேடை தற்போது 18 பெட்டி கொள்ளளவு உள்ளது. இது 23 பெட்டி கொள்ளளவு கொண்ட நடைமேடையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதே போன்று ஆறுமுகநேரி இரயில் நிலையத்தின் நடைமேடையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
- இராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை – அருப்புகோட்டை – திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு புதிய இரயில் சேவை வழங்க வேண்டும்.
- திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை நேர்வழி பாதையில் செல்லும் வகையில் புதிய இரயில் இயக்கப்பட வேண்டும்.
13.தூத்துக்குடி திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் வழியாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கப்பட வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன கோரிக்கை வைத்துள்ளனர்.
— மணிபாரதி.