தீபாவளியும் – தீப ஒளியும் முனைவர் சீமான் இளையராஜா
தீபாவளியும் – தீப ஒளியும் – முனைவர் சீமான் இளையராஜா
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பல விதமான புராணக்கதைகள் உண்டு. இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும் கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
தீபாவளிப் பண்டிகையும் – புராணக் கதைகளும்
மயிலை சீனி. வேங்கடசாமி, சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகைதான் தீபாவளி என்கிறார். சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார். பொழுது விடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் (தீபஒளி) விளக்குகளை ஏற்றிவைத்து கொண்டாடும்படி செய்தான். மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால் தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. பாவாபுரி அரண்மனையில் மகாவீரர் மகா நிர்வாணம் அடைந்த பிறகு, அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றி கொண்டாடியுள்ளனர்.
சமணர்களின் இந்தப் பண்டிகை எப்படி இந்து மதத்திற்குள் நுழைந்தது என்ற கேள்விக்கு ஒரு பதிலை முன்வைக்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. “சமண மதம் வீழ்ச்சியடைந்த பிறகு பெருவாரியான சமணர்கள் இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் தாங்கள் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவளியை தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத இந்துக்கள் தாமும் அதை ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையை கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும் அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானதன்று. இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை” என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.
இந்துமத புராணப்படி, கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்று வெற்றி கொண்ட நாளாகக் கொண்டாடுவது தீபாவளி என்று ஒரு கற்பனைக் கதையும், மற்றொரு கதையில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனும் பழந்தமிழ்நாட்டில் தீபாவளி என்ற பண்டிக்கை இல்லை என்கிறார். ‘சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்’ என்ற கட்டுரையில் “தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடி மாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்தில் உள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத காலப்பகுதியே தமிழர்களின் திருவிழாக் காலமாகிறது. தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள் இந்தக் கால அளவில்தான் கொண்டாடப்படுகின்றன. இன்று பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி, விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழாவாகும். வடநாட்டில் இது சமண சமயத்தைச் சேர்ந்த திருவிழா ” என்கிறார் தொ. பரமசிவன்.

தீபாவளிப் பண்டிகைக்கு உண்மையான வரலாறு என்ன என்பதைப் பற்றியும் அதற்கான காரணங்களையும் பார்ப்போம். தீபாவளி என்ற சொல்லுக்கு நேரான பொருள் காற்றில் எரியும் ஒளி என்பதாகும். தீபம் + வளி = தீபாவளி என்றும், தீபம் + ஆவளி = தீபாவளி என்றும் பிரித்து பொருள் அறியலாம். ‘தீபம்’ என்ற சொல்லுக்கு ஒளி தரும் விளக்கு என்பது பொருளாகும். ‘வளி’ என்றால் காற்று என்பது பொருள் ‘ஆவளி’ என்று பிரித்தால் வரிசையாக என்று பொருளாகும். ஆகவே, தீபாவளி என்றால் காற்றில் எரியும் விளக்கு என்றும், வரிசையாக எரியும் விளக்கு என்றும் பொருளாகும்.
தீபாவளி என்ற தொடரில் நரகாசுரனைப் பற்றிய எந்தச் செய்தியும் இடம் பெறவில்லை. பொதுவாக ஒரு பண்டிகையின் பெயர் அதற்குரிய காரணக் கதையைக் குறிப்பால் உணர்த்தும். ஆனால் தீபாவளி என்ற தொடரில் எந்தப் புராணச் செய்தியும் இடம்பெறவில்லை. எனவே, தீபாவளிப் பண்டிகைக்கும் நரகாசுரனின் புராணக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பண்டிதர் முன்வைக்கும் விளக்கம்
தீபாவளிக்கு அயோத்திதாசப் பண்டிதர் முன்வைக்கும் விளக்கம் மக்கள் பயன்பாட்டைச் சார்ந்ததாகும். தீபாவளிப் பண்டிகைக்கு உண்மையான அடிப்படைக் காரணம் என்னவென்றால் முன்பு ஒரு காலத்தில் இந்திய நாட்டில் பவுத்தம் மேலோங்கி பரவி இருந்தது. பவுத்த சங்கத்தைச் சேர்ந்த ஞானிகள் சும்மா இருந்து காலம் கழிக்க மாட்டார்கள். எந்த நேரமும் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், ஆய்வுகள் நடத்திக் கொண்டும் இருப்பார்கள். மக்கள் பயன்படுத்தக்கூடிய, உண்ணக்கூடிய உணவுப் பொருள்கள், தானியங்கள், கீரை வகைகள், கனி வகைகள், எண்ணெய் வித்துக்கள் முதலானவற்றையும் பவுத்த ஞானிகள் கண்டறிந்து, தாவரங்களிலிருந்து மருந்தாகப் பயன்படக்கூடிய மூலிகைகளையும் கண்டறிந்து அவற்றின் மருத்துவ குணங்களை மக்களிடம் கொண்டுப்போய் சேர்த்தனர்.
பவுத்த ஞானிகள் புதிதாக ஒரு பொருளைக் கண்டறிந்தால் அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து பரிசோதனைகள் செய்து பார்த்து மக்களுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்குமானால் அந்தப் பொருளைப் பற்றி அந்நாட்டு அரசருக்கு முதலில் தெரிவிப்பார்கள். அரசர் முன்னிலையில் அந்தப் பொருளின் தன்மைகளையும் பயன்களையும் விளக்கி நிரூபித்து உறுதிப் படுத்துவார்கள். பின்பு அரசன் அரச சபையைக் கூட்டி ஆலோசனைகள் செய்து அந்தப் பொருளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி ஆணை பிறப்பித்து, முரசடித்து அறிவிப்பான். மக்கள் எல்லோரும் அரசன் ஆணையை ஏற்று மகிழ்ச்சியாக அதனைக் கொண்டாடுவார்கள். அவ்வாறு, மூலிகைகளை மருத்துவ ஆராய்ச்சி செய்தபோது ‘எள்’ எனும் செடியின் விதையிலிருந்து நெய்யினைக் கண்டுபிடித்தனர்.
பின்பு அதன் மருத்துவக் குணங்களை அலசி ஆராய்ந்து மக்கள் அதை உணவாகவும், எரிக்கவும் பயன்படுத்தலாம் என அறிந்து அதனை “பள்ளி” என்ற நாட்டை ஆண்ட “பகுவன்” எனும் தென்னாட்டு அரசனிடம் அதைக் கொடுத்தனர். அரசன் எள்நெய்யின் மேன்மைகளைக் கண்டு எள் செடிகளை அதிகமாக விளைவிக்கச் செய்தான். அதிலிருந்து நெய்யை எடுக்கச் செய்து தன் நாட்டு மக்களை வரவழைத்து எள் நெய்யைக் கொடுத்து சிரசில் தேய்த்துக் கொண்டு அருகில் ஓடும் ‘தீபவதி’ என்னும் நதியில் தலைமுழுகச் செய்தான். அந்த எள்நெய்யில் பலகாரங்கள் செய்து உண்ணும்படியும், பிறருக்குக் கொடுத்து உதவும்படியும் உரிமை வழங்கினான். இதன் மகிழ்ச்சியாக எள்நெய்யில் தீபம் ஏற்றி கொண்டாடினர்.
எள்நெய் (எண்ணெய்) புழக்கத்திற்கு வந்தது. அந்த எள் நெய்யினைக் கண்டுபிடித்த நாளே ‘தீபாவளி’ என்றும், இதற்கு 1.பதார்த்த சிந்தாமணி 2.பெருந்திரட்டு – பாண்டி படலம் ஆகிய இரு நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார் அயோத்திதாசப் பண்டிதர்.
“நேத்திரக் கபால ரோகம் நீங்கிடுஞ் சுரங்கள் மேகங்
காத்திரமான சேத்மம் கறைந்திடு மலத் திரட்சை
மாத்திடுந் சோம ரோகம் வளரெனும புருக்கியீளை
சேத்த நல்லெண்ணெ யாலே தேகமுங் காந்தியாமே”
(பதார்த்த சிந்தாமணி)
“பள்ளியம் பதியிலூர்ந்த பகுவனார் கிழவகாலந்
தெள்ளிய லுழுவிலாறுஞ் சேர்புநல் புஞ்சைவாவி
எள்ளக வெண்ணெயாய்ந்த விடய மற்றவர் குறிப்ப
வெள்ளியில் மாறறாகார மேற்சில மகிழ் வென்றாங்கே
சிரமுருகு வெள் நெய்மற்றுந் திரளொடு செந்நெலீந்து
கரமுகிலேந்தி கங்கைக் கரைதீப வதியை நாடித்
துரமுறத் தோய்ந்த நிரிற் றுவைந்து மெய்யக நிறப்ப
பரவருமசதி மற்றும் பாயுலு மகலு மென்றான்”
(பெருந்திரட்டு)
‘எள்’ நெய்யைப் பயன்படுத்துவதால் மூளை சம்பந்தமான நோய்கள் நீங்கும், காய்ச்சல், தோல் சம்பந்தமான மேக நோய்கள், சளித் தொல்லைகள் அகன்று போகும்; மலச்சிக்கல் தீரும். போதைப் பொருட்களால் ஏற்படும் நோய்கள் நீங்கும். எலும்புருக்கி முதலான நோய்கள் குணமாகும். உடல் இளமையோடு திகழும் என்ற கருத்துக்கள் மேலே கண்ட செய்யுளில் சொல்லப்பட்டுள்ளன. நெய்கள் பல இருந்தபோதிலும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யை மட்டும் அதன் சிறப்புத் தன்மைகளைக் குறிப்பால் உணர்த்தவே ‘நல்ல’ என்ற அடைமொழியைச் சேர்த்து நல்ல எண்ணெய் (நல்ல + எள் + நெய்) என்று வழங்கிவருகின்றனர். மக்கள் அனைவரும் ‘துபவதி ஸ்நானம்’ என்று கூறி அதை ஒரு விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அந்த வழக்கம் மாறாதிருக்க ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எள்ளின் நெய்யை தலையில் தேய்த்து ‘தீபவதி’ நதியில் தலைமுழுகி புதிய ஆடைகளை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் உண்டு மகிழ்ந்து, ஏழைகளுக்குத் தானம் வழங்கி, புத்த தன்மங்களான மும்மறைகளை ஓதி தீபஒளி ஏற்றி கொண்டாடி வந்தார்கள் என்றும், தீபாவளி வரலாறு குறித்த முன்வைப்புக்குத் துணையாக ஜப்பான் நாட்டில் நுகர்வு பொருள் கண்டுபிடிப்பு நாளை அவர்கள் வருடந்தோரும் கொண்டாடிவரும் வழக்கத்தையும் அயோத்திதாசப் பண்டிதர் சுட்டிக்காட்டுகிறார்.
கி.பி.1250 ஆண்டு எழுதப்பட்ட மராத்தி நூலான ‘லீலாவதியில்’ தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் தீபாவளி குறித்தப் பதிவுகளே தவிர, அவை கொண்டாடப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவுகள் குறைவாக உள்ளது. இக்கதைகளைப் பார்க்கும்போது தமிழில் தீபாவளி குறித்த வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. எனவே, முன்னோர்கள் காட்டிய வழியில் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். நம்பிக்கை இல்லாதவர்கள் கடந்து சென்றுவிடுகின்றனர். தீபாவளி எனும் தீப ஒளி மக்கள் மனதில் அறிவொளியாக ஒளிக்கட்டும்.
கட்டுரையாளர் –
முனைவர் சீமான் இளையராஜா
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.