பெரியாரை எதிர்த்து உருவானதா திமுக ? DMK உருவான கதை தெரியுமா ?
அன்றைய மழையில் ஊன்றிய விதை, இன்றைய மழைக்கு பெருங்குடையாக விரிந்த ஆலமரம் போல் வேர்களையும் விழுதுகளையும் கொண்ட இயக்கம்.. 17.9.1949 முதல் 17.9.2025 வரை 76 ஆண்டுகளில், தலைமுறைகள் கடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க நாள் வரலாறு.
இப்போது அந்த இடத்தை அண்ணா பூங்கா என்றும் அண்ணா விளையாட்டுத் திடல் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அப்போது, ‘அண்ணா’ என்கிற சி.என். அண்ணாதுரையை அன்றைய வலிமையான ஊடகங்களான பத்திரிகைகள் கண்டுகொண்டதில்லை. திராவிட இயக்கமே அவர்களின் பார்வையில் கிள்ளுக்கீரைதான். அதைப் பற்றி பெட்டிச் செய்தி வெளியிட்டாலே பெரிது. அந்த செய்தியின் கடைசியில், “Annadurai also spoke” என்று அண்ணாவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் என்று போடுவார்கள். அண்ணா என்ன பேசினார் என்பதுகூட அந்தப் பத்திரிகைகளில் அச்சு ஏறாத காலம்.

அண்ணா பேசினார். இன்றைக்கு அண்ணா விளையாட்டுத் திடல் எனப்படுகின்ற அன்றைய ராபின்சன் பூங்கா திடலில் 18-9-1949 அன்று பேசினார். அவர் என்ன பேசினார் என்பதற்கு முன், அதற்கு முந்தைய நாளில், புதிய இயக்கம் தொடங்குவது பற்றி, சென்னை மண்ணடியில் எண் 7, பவழக்காரத் தெருவில் பகல் முழுவதும் அண்ணாவும் அவரது தம்பிகளும் பேசினார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
திராவிடர் கழகம் என்பது கறுப்புச்சட்டை ராணுவம். பதவி – பட்டம் -லாபநோக்கம் இல்லாமல் தன்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணிக்கும் தற்கொடைப் படை. அண்ணா அதற்கு அடுத்த கட்டத்தை சிந்தித்தார். பெரியார் – மணியம்மையார் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா உருவாக்கினார் என்பது பொதுவான பார்வை. அந்தத் திருமணத்தை அண்ணாவும் அவரது தம்பிகளும் ஏற்கவில்லை என்பதை புதிய இயக்கத்திற்கான வெளிப்படையான காரணமாக முன்வைத்தாலும், அரசியல் – சமுதாய தளத்தில் வெகுமக்கள் பங்கெடுப்புடன் ஒரு ஜனநாயக இயக்கம் தேவை என்பதே அண்ணாவின் எண்ணம்.
இந்திய சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 துக்க நாளா – இன்ப நாளா, எல்லா நாட்களும் கறுப்புச் சட்டை அணியவேண்டுமா என்பது உள்பட அண்ணா தன் சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்தியே வந்தார். 9.7.1949 இல் பெரியார் -மணியம்மையார் பதிவுத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பிருந்தே, இது குறித்த எதிர்ப்பை அண்ணாவும் அவர் தம்பிகளும் முன்வைத்தனர். பெரியாரோ சட்டரீதியான காரணங்களாலும், வேறு எவர் மீதும் நம்பிக்கை கொள்ளாததாலும் திராவிடர் கழகத்தின் எதிர்கால நலன் கருதி, இந்த வாழ்க்கை ஒப்பந்த ஏற்பாட்டை மேற்கொண்டார்.
அண்ணா தன் வாழ்வில் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர், பெரியார்தான். அவரிடமிருந்து பிரியவும் மனமின்றி, இணைந்திருக்கவும் முடியாமல் மனப்போராட்டத்தில் இருந்தார். இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே, புதிய கட்சிக்கான எண்ணம் முழு வடிவம் பெற்றது. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சனிக்கிழமை, சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் திருவொற்றியூர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான 7ஆம் எண் வீட்டில்தான் புதிய கட்சிக்கான ஆலோசனை நடைபெற்றது.
அதில் அண்ணா ஓர் அறிக்கையை முன்வைத்தார். அவரே எழுதி, அவரே படித்த அந்த அறிக்கையில், “நமக்கும் தலைவரின் (பெரியார்) கீழ் உள்ள கழகத்துக்கும் உள்ள தொடர்பு என்னவிதமானது என்பது ஒரு பிரச்சினை. நமக்கும் நாட்டை நாசமாக்கும் பாசிசம் – பழைமை ஆகியவற்றின் தாண்டவமாடும் நிலைமைக்கும் என்ன வகையான தொடர்பு இருத்தல் வேண்டும் என்பது மற்றொரு பிரச்சினை. இந்த இரு பிரச்சினைகளையும் ஒரு சேர கவனித்தே முடிவு காணுதல் வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணாவும் கூடியிருந்தவர்களும் திராவிடர் கழகத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள். அதனால், திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்து பலமாக இருந்தது.
அண்ணா அதற்கு இடம் கொடுக்கவில்லை. புதிய கட்சி அமைப்பது, அதன் தலைவர் நாற்காலியை பெரியாருக்காக காலியாக விட்டு வைப்பது என்ற முடிவை எடுத்தார். புதிய பெயர் குறித்த ஆலோசனைகள் நடந்தன. Dravidian என்ற வார்த்தை இருப்பது போல பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. இறுதியில், Dravidian Progressive Federation (DPF) என்ற பெயர் முடிவானது. அதுதான் தமிழில், திராவிட முன்னேற்றக் கழகம். அந்த தமிழ் வடிவம் அப்படியே ஆங்கில நாளேடுகளில் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டு, பின்னர் முதல் எழுத்துகளை மட்டுமே கொண்டு DMK என்றானது.
செப்டம்பர் 17 இல் பவழக்காரத் தெரு வீட்டில் உள்ள அறையில் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. கட்சியின் உடனடி நிர்வாகத்திற்காக பொதுக்குழு, அமைப்புக்குழு, பிரச்சாரக்குழு, திட்டக்குழு, நிதிக்குழு ஆகியவை தொடங்கப்பட்டன. செப்டம்பர் 18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அதே வீட்டில் இந்தக் குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அன்று மாலையில் ராபின்சன் பூங்கா திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
பெருங்கூட்டம். தொடர் மழை. அண்ணா பேசினார். “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்ம குறிக்கோள், அரசியலில் அன்னிய(வடநாட்டு) ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை ஆகியவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள்.
இத்தனை ஆண்டுகளிலும் நான் அறிந்த ஒரே தலைவர் பெரியார் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. வேலை செய்யவும் மனம் வந்ததில்லை. வராது. அதே காரணத்திற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவர் (பதவி) ஏற்படுத்தவில்லை.
இதயப்பூர்வமான தலைவர். இதயத்திலே குடியேறிய தலைவர். நமக்கெல்லாம் அப்போது நல்வழிகாட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை – தலைவர் பதவியை -நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் எந்த விதத்திலும் திராவிடர் கழகத்திற்கு எதிரானதல்ல. எதிர்நோக்கம் கொண்டதுமல்ல. கொள்கை ஒன்றே. கோட்பாடும் ஒன்றே. திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும்.
படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும் வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து, சமதர்மப் பூங்காவை, திராவிடத்தைச் செழிக்கச் செய்ய வேண்டும். கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும். பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடங்கொடுத்து ஏமாளியாகத் தேவையில்லை.
மரம் அழியவில்லை. இதிலிருந்து ஒட்டு மாஞ்செடி தோன்றியிருக்கிறது. இதை வெட்டிவிட முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஒட்டு மாஞ்செடிதான். மண்வளம் ஏராளம். அதே பூமி.
நீர்ப்பாய்ச்ச, பதப்படுத்த, பாத்திகட்ட முன்னிற்போர் பலர். ஒட்டு மாஞ்செடி (திராவிடர்) கழகத்திற்கு முரணானது அல்ல. ஒத்த கருத்து கொண்டதே ஒட்டு மாஞ்செடி” என்று கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் முழங்கிய அண்ணா, ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடும் களத்தில் தி.மு.கழகத்துடன் இணைந்து நின்றிட சமதர்மத் தோழர்களான கம்யூனிஸ்ட்டுகளையும் சேர்த்தே அழைத்தார்.
பகை உணர்ச்சி வேண்டாம் என ராபின்சன் பூங்கா கூட்டத்தில் அண்ணா வலியுறுத்தினாலும் தி.க.வுக்கும் தி.மு.க.வுக்குமான பகை உணர்ச்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. 18 ஆண்டுகாலம் இருதரப்பிலிருந்தும் எறிகணைகள் பாய்ந்தன. 1967 இல் தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும் வலிமையுடன் வெற்றி பெற்றதும், திருச்சியில் இருந்த பெரியாரை தன் தம்பியருடன் அண்ணா சந்திக்கிறார். பகையுணர்ச்சி, பனிமலையாய் உருகியது. உருகிய தண்ணீர் வற்றாத நதியாகப் பெருக்கெடுத்தது. அந்தத் தண்ணீரில், பெரியாரின் கனவு விதைகளை சட்டதிட்டப் பயிர்களாக வளர்த்தது தி.மு.கழக அரசு.
சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றி பெரியாருக்கு காணிக்கை என்றார் முதல்வர் அண்ணா. பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தை நிலைநாட்டி பெரியாரின் அரசு என நிரூபித்தார் முதல்வர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கி – பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடச் செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.