நீதிமன்றங்கள் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ! திமுக ஆட்சி கலைக்கப்படுமா ?
சுமார் 75 ஆண்டு காலம் “மாநிலச் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டும், போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஒரே மாநிலக் கட்சி திமுக தான். 2014இல் மோடி தலைமையில் நடைபெறும் பாஜக ஆட்சியில் பல்வேறு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதற்குக் குரல் கொடுத்தது. அதிமுக ஆட்சியில் பன்வாரிலால் புரோகித் என்பவர் ஆளுநர் பொறுப்பில் இருந்தபோது மாவட்ட வாரியாக நான் ஆய்வு செய்யப்போகிறேன் என்று புறப்பட்டபோது, எதிர்க்கட்சி பொறுப்பில் இருந்த திமுக ஆளுநரை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஆளுநர் பின்னர் ஆய்வுக் கூட்டத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார். இவ்வளவும் நடக்கும்போது ஆளும்கட்சி அதிமுக வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்தது. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு நீட்டை எதிர்த்து இன்றளவும் சட்டப் போராட்டங்களைத் திமுக நடத்தி வருகிறது. இப்போதைய எதிர்க்கட்சி அதிமுக பாஜகவோடு உறவில் இருந்தும் தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறையில்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆளுநர் கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர், குடியரசுத் தலைவர் 3 மாதங்களுள் கோப்புகளில் கையொப்பமிடவேண்டும். அல்லது காரணம் தெரிவித்துக் கோப்புகளைத் திருப்பி அனுப்பவேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்த பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு போடாமல், குடியரசுத் தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்திற்கு “அரசியல் சாசனத்தில் சொல்லப்படாத காலவரையறையைத் தீர்ப்பில் சொன்னது சரியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்த உச்சநீதிமன்றம், சட்டத்தின் தேவை குறித்துக் கால வரையறையைச் செய்திருக்கிறார் தவிர, ஆளுநர், குடியரசுத் தலைவருக்குக் கால வரைமுறை வைக்க முடியாது” என்று தெரிவித்திருந்தது. மேலும், ஆளுநர், குடியரசுத் தலைவர் தேவையற்ற வகையில் சட்ட முன்வடிவில் கையெழுத்திடாமல் இருக்கிறார்கள் என்றால் மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இது ஒரு வகையில் பாஜகவிற்கு வெற்றியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மனநிம்மதியையும் கொடுத்தது.
திருப்பரங்குன்றம் மலையில் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மதுரை உயர்நீதி மன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நில அளவைக் கல் என்றாலும் அதில் ஏன் ஏற்றக்கூடாது? என்று விசாரணையின்போது நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்து அறநிலையத் துறை, ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றும் கல்லிதான் ஏற்றவேண்டும் என்று வாதம் செய்தது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத தமிழ்நாடு அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு கொண்டுவர வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் விசாரிக்கத் தடை கேட்ட வழக்கில் (16.12.25) மதுரை அமர்வு நீதிபதிகள் தடை கொடுக்க மறுத்துள்ளார்கள். இதனால் திருப்பரங்குன்றம் தீர்ப்பு எப்படி வரும் என்பது அனைவரும் அறிந்ததே. தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு இருந்தால் நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் பிரதமர் நிதியில் நவயோத பள்ளிகள் தொடங்காமல் இருப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் (16.12.25) உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாடு அரசு 6 நவயோத பள்ளிகளைத் தொடங்க இடங்களை 6 வாரங்களுக்குள் தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கில் திமுக தரப்பில் வழக்காடிய வழக்கறிஞர் வில்சன்,“நவயோத பள்ளிகள் மூலம் இந்தி திணிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு அரசு தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழி கொள்கையைக் கொண்டுள்ளது என்பதால் சட்டத்தை மீறி நவயோத பள்ளிகளைத் தொடங்கமுடியாது” என்று கூறியபோது, குறுக்கிட்ட நீதிபதிகள்,“தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது. ஏன் பிரித்துப் பேசுகின்றீர்கள். ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசு ஏற்கவேண்டும். உங்கள் இருமொழி கொள்கைகளை மாநில அரசின் பள்ளிகளில் வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் பள்ளிகள் மீது குற்றம் சொல்லக்கூடாது” என்று கூறி வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடங்க 6 வாரங்களில் தமிழ்நாடு அரசு நிலங்களைத் தேர்வு செய்யுமா? அல்லது தேர்வு செய்யாமல் நீதிமன்ற இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் இருக்குமா? என்று தெரியவில்லை. பெரும்பகுதி திமுக அரசு நவயோத பள்ளிகளுக்கு நிலம் தேர்வு செய்வதை நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அப்படியானால் திமுக அரசு மீது உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை வைக்கும். தொடர்ந்து தீர்ப்பையும் வழங்கும். காரணம் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பில் திமுக அரசைச் சிக்கவைக்கலாம். இப்படித் திமுக அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க மறுக்கின்றது. நடைமுறைப்படுத்த முடியாது என்று சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில், ஆளுநர் பரிந்துரையோடு, உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு, குடியரசுத் தலைவர் திமுக ஆட்சியைக் கலைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச்சு முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். மே இரண்டாவது வாரம் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் இந்தக் கால அட்டவணையில், பிப்ரவரி 3ஆவது வாரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம் என்ற கருத்து டெல்லி வட்டாரங்களிலும் நிலவுகின்றது. இது சாத்தியம் இல்லை என்றால், திமுகவின் முன்னணி தலைவர்கள், கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, பொன்முடி, ஐ.பெரியசாமி போன்றவர்கள் வருமான வரித்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கவும் பாஜக தேசியத் தலைமை சிந்தித்து வருகின்றது என்ற தகவலும் தலைநகரில் கசிந்து கொண்டிருக்கின்றது.
பாஜக தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அழித்துவிடுவது என்ற திட்டமும் உள்ளதாகவும் 2031இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்து, காவிக் கொடி பட்டாளி வீசிப் பறக்கும் என்ற அமைச்சர் எல்.முருகன் கனவு நிறைவேறும். இது கனவா? நனவா? என்பதை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவு செய்யும்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.