சபாஷ் தம்பி ! நாய் துரத்தினால் எதிர்ப்பு காட்ட வேண்டும் பாடம் எடுத்த சிறுவன் ! வீடியோ
தமிழகத்தில் தெருநாய்களின் அட்ராசிட்டி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இரவு பத்து மணிக்கு மேல் நாம் குடியிருக்கும் தெருவில்கூட, கொஞ்சம் சூதானமாகத்தான் நடந்து போயாக வேண்டும். தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தி, அதன் அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை பாதுகாப்பது என்பது உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்திருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் மூன்று இலட்சத்து 60 ஆயிரம் பேர் நாயிடம் கடி வாங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ளலாம்.
தெருநாய்கள், வயது வித்தியாசமின்றி அனைவரையும் துரத்திக் கடிக்கிறது என்றாலும், சிறுவர்கள்தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சமீபத்தில் ஆம்பூரில் பள்ளிச்சிறுவன் ஒருவனை தெருநாய் கடித்துக் குதறிய வீடியோ காட்சிகள் வெளியாக நம்மை பதைபதைப்பில் ஆழ்த்தியிருந்தது. கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றாலும்கூட, அதன் வேகத்திற்கு ஈடாக துரத்திச்செல்லும் தெருநாய்களை காண நேரிடும்போது நமக்கே கொஞ்சம் அல்லு விட்டுத்தான் போகிறது.
இந்தப் பின்னணியில்தான், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இரண்டு முதல் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தெருவில் நடந்து வரும்போது தெருநாய்கள் அவர்கள் இருவரையும் துரத்துகிறது. தெருநாய்களைக் கண்ட சிறுமி தலைத்தெறிக்க ஓடிவிட, அச்சிறுவனோ எந்தவிதமான பதட்டமுமின்றி நாய்களை எதிர்த்து நிற்கிறான். கையில் கல்லோ, குச்சியோகூட இல்லாத நிலையிலும்கூட வெறும் கையால் தனது எதிர்ப்பை காட்டுகிறான் அச்சிறுவன். அவனைச்சுற்றி நாலைந்து நாய்கள் இருந்தாலும், அவனது எதிர்ப்பைக் கண்டு அஞ்சி பின் வாங்குகின்றன. கைகளால் கம்பு சுற்றுவது போலவே நாலாபுறமும் கைகளால் எதிர்ப்பை காட்டியபடியே, பெரியவர்களை நோக்கி முன்னேறுகிறான்.
நாய் துரத்தினால் நாமும் பயந்து ஓடக்கூடாது. ஓடும் குழந்தைகளைத் தான் நாய்கள் துரத்தி கடிக்கும். பதிலுக்கு தைரியமாக நின்று எதிர்ப்பு காட்ட வேண்டும் என்பதை அனுபவப் பாடமாக கற்றுத்தந்திருக்கிறான், அச்சிறுவன். நாமும் நமது குழந்தைகளுக்கு இந்தப் பாடத்தை சொல்லித்தரலாமே !
– கலைமதி
வீடியோவை காண