“அண்ணாமலைக்கு சட்டமும் தெரியல, நியாயமும் புரியல”-டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்!
“அண்ணாமலைக்கு
சட்டமும் தெரியல, நியாயமும் புரியல”
– டாக்டர் சரவணன் சொல்லும் புதுத் தகவல்!
காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடலை அடக்கம் செய்வதற்காக, கடந்த 13—ஆம் தேதி விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை மாவட்ட பா.ஜ.க.தலைவரும் மாநகரில் புகழ் பெற்ற சரவணா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சரவணனும் சென்றுள்ளார். அங்கு போவதற்கு முன்பு சிவகங்கையில் இருந்த தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலைக்கு தகவல் சொல்லி அவரையும் அழைத்துள்ளார் டாக்டர் சரவணன்.
“நம்ம கட்சிக்காரங்க பத்து பதினஞ்சு பேரை அழைச்சுக்கிட்டு நீங்க முன்னால போங்க, நானும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துர்றேன்” என சரவணனிடம் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. அதே போல் சரவணனும் நாலைந்து பேர்களுடன் விமான நிலையம் சென்றுள்ளார். சரவணன் மட்டும் விமான நிலையத்திற்குள்ளே செல்ல, மற்றவர்கள் வெளியில் காத்திருந்துள்ளனர்.
அப்போது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் சில அரசு அதிகாரிகளும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். அமைச்சர், மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் என வரிசையாக அஞ்சலி செலுத்திய பின், இறுதியாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதெல்லாம் முடிந்த பிறகு தான் ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார் அண்ணாமலை. இவரைப் பார்த்த அமைச்சர் பி.டி.ஆர்.”எந்த விதிப்படி நீங்க வந்திருக்கீங்க?” எனக் கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான அண்ணாமலை, டாக்டர் சரவணனுடன் சென்று லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிவிட்டார். அமைச்சர் அங்கிருந்து கிளம்பிய சில நொடிகளிலேயே வெளியில் காத்திருந்த பா.ஜ.க.வினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு கூச்சல் போடத் தொடங்கிவிட்டனர்.
அப்போது ஓவர் டென்ஷனுடன் இருந்த மகளிரணி பெண்மனி ஒருவர் தனது செருப்பைக் கழட்டி அமைச்சரின் கார் மீது எறிந்துள்ளார். அது காரில் மாட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை உரசிக் கொண்டு பேனட்டில் விழுந்துள்ளது. இந்தக் களேபரம் எதையும் கண்டு கொள்ளாமல் கிளம்பிப் போய்விட்டார் அண்ணாமலை.
வெளியில் நடந்த சம்பவத்தால் ரொம்பவே பதறிப்போன டாக்டர் சரவணன், அன்று இரவே அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து விளக்கம் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால் அண்ணாமலையோ மறுநாள்(14—ஆம் தேதி) காலை, மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணனை டிஸ்மிஸ் செய்த அறிக்கையை பிரஸ் ரிலீஸ் பண்ணினார்.
“என்னாதாங்க நடந்துச்சு, ஏன் இந்தக் களேபரம்?” இந்தக் கேள்வியுடன் டாக்டர் சரவணனைத் தொடர்பு கொண்டோம்.
“அந்தக் கொடுமைய ஏன்ணே கேட்குறீக. ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதிச் சென்று அஞ்சலி செலுத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தான் அனுமதி. இதுதான் விதியும் கூட. அதே போல் இறந்த ராணுவ வீரரின் உடலுக்கு மேற்கண்டவர்கள் அஞ்சலி செலுத்திய பின், ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் அஞ்சலி செலுத்துவார். அதன் பின் யாரும் அஞ்சலி செலுத்த முடியாது, செலுத்தவும் கூடாது. இதுவும் கட்டாய சட்டமும் விதியுமாகும்.
அப்படி ராணுவ அதிகாரி ஒருவர் அஞ்சலி செலுத்திய பின்பு தான் அங்கு வந்து சேர்ந்தார் அண்ணாமலை. ஐ.ஏ.எஸ். படித்ததாகச் சொல்லும் அண்ணாமலைக்கு சட்டமும் விதியும் தெரியல போல. அதனால நானும் அஞ்சலி செலுத்தியே தீருவேன்னு வம்பு பண்ணினார். அவரைச் சமாதானப்படுத்த வழியே இல்லாததால், விதிகளை மீறி பெருந்தன்மையுடன் அவருக்கு அனுமதி அளித்தனர்.
ஆனால் இது எதையுமே தெரியாத, புரியாத சில சில்லுவண்டுப் பயலுக அமைச்சரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார்கள், செருப்பை வீசிய அந்த மகளிரணி பெண்மனியை யாரென்றே எனக்குத் தெரியாது. ஒருவித மனபாரத்துடனேயே ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தேன். அமைச்சருக்கு நேர்ந்தது என்னால் தான் என்ற தகவல் மதுரை சிட்டிக்குள் பரவியதும், ரசபாசமானது. மோடி, அண்ணாமலை ஆகியோரின் கொடும்பாவியைக் கொளுத்த ஆரம்பித்தனர்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட எனக்கு பகீர்னு ஆகிப்போச்சு. ஆத்தாடீ… இப்படியாப்பட்ட ஆபத்தான மத அரசியல் நமக்குச் சரிப்பட்டு வராது, தோதுப்படாது என முடிவு பண்ணினேன். அதனால அன்னைக்கு நைட்டு 11 மணிக்கு அமைச்சரின் வீட்டுக்குப் போய் என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொல்லி வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன். எனது விளக்கத்தை அமைச்சரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டேன்.
அண்ணே போதும்ணே இந்த டேஞ்சர் பாலிடிக்ஸ். ஏதோ ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் இலவசமா மருந்து, மாத்திரை கொடுத்து ஊசி போட்டு வைத்தியம் பார்த்துக்கிட்டிருக்கேன். இதுவே எனக்குப் பெரும் நிம்மதி, மகிழ்ச்சி” என்றவரிடம் “பி.ஜே.பி.யிலிருந்து நீங்களாக விலகினீர்களா? அண்ணாமலை டிஸ்மிஸ் பண்ணினாரா?” எனக் கேட்டோம்.
“ அமைச்சரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்ததும் நைட் 12 மணிக்கே மதுரை மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் இனிமேல் பா.ஜ.க.வில் தொடரவிரும்பலைன்னும் மீடியாக்களிடம் சொல்லிட்டேன். இதையெல்லாம் பார்த்த பிறகு இன்னைக்கு ( ஆக.14 ) காலையில தான் என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார் அண்ணாமலை” என்றார்.
“இப்படி அடிக்கடி நீங்க கட்சி மாறுவதால உங்களுடைய அபிமானிகள், நலன் விரும்பும் நடுநிலையாளர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா?” என நாம் கேட்டதற்கு,
“என்னை நேசிக்கும் மக்கள், என்மீது அக்கறை கொண்டவர்கள் இவர்களிடையே இருக்கும் என்னைப் பற்றிய நம்பிக்கை கொஞ்சமும் குறையாது” என்றவரிடம் இறுதியாக
“அடுத்த கட்ட முடிவு திமுகவில் இணைவது தானே?” என்றதும் “அதில் ஒன்றும் தப்பில்லையே, அதுவும் நல்லதிற்குத் தானே. அடுத்த ஓரிரு நாட்களில் எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும். நன்றி வணக்கம்ணே” என்றார் டாக்டர் சரவணன்.
முதல்வர் மு.க..ஸ்டாலின் நாளை (ஆக.16) டெல்லி செல்கிறார். அவர் சென்னைக்குத் திரும்பியதும், டாக்டர் சரவணன் மதுரையிலிருந்து கிளம்பி சென்னையில் அறிவாலயத்திற்கோ, முதல்வரின் முகாம் அலுவலகத்திற்கோ செல்லலாம்.
–மதுரை மாறன்