21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !
கல்வி உரிமைக்கான போராட்டச் சுடரை மக்களிடம் ஒப்படைத்து விடை பெற்றார் கல்வியாளர் பேராசிரியர் முனைவர் வே. வசந்தி தேவி அவர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பாக பொதுச் செயலாளர், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மக்களை தொழிலாளர் வர்க்கமாக அணிதிரட்டிய இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சக்கரை அவர்களின் மகள் வழிப் பேத்தி, ஜானகி – வேங்கட தாஸ் ஆகியோரின் மகள், பேராசிரியர் முனைவர் வே. வசந்தி தேவி அவர்கள் இந்தியக் கல்வியாளர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தவர்.
பேராசிரியர் அரகோபால், பேராசிரியர் அனில் சட்கோபால் உள்ளிட்ட கல்வி ஆளுமைகளுடன் இணைந்து கல்வி உரிமையே மனித உரிமையின் அடிப்படை என போர்க் குரல் எழுப்பியவர்.

மனித உரிமை செயல்பாட்டாளராக பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவர்.
பன்முகத் தன்மைக் கொண்ட பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்கள் கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் (All India Forum for Right to Education – AIFRTE) ஆலோசகராக செயல்பட்டார்.
தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக அணிதிரட்டிட பெருமைமிகு பேராசிரியர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த காலத்தில் “மனித உரிமை” பாடப் பிரிவுகளை பல்கலைக் கழகத்தில் அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த போது, பாதிப்பிற்குள்ளான பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க துரித நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்தார். தொழிற் சங்கங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொழிற் சங்கத் தலைவர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
சமூக நல்லிணக்கத்திற்காக பல் துறை ஆளுமைகளுடன் இணைந்து பல இயக்கங்கள் கண்டார். சீக்கியராக, இஸ்லாமியராக, இந்துவாக, கிருஸ்த்துவராக, நாத்திகராக என்று அவரவர் விரும்பும் படி வாழ உரிமை உண்டு. பல்வேறு கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழும் சமூகமே இந்தியச் சமூகம். இந்தியா வெறும் அரசியல் எல்லைகளைக் கொண்ட நாடு அல்ல. இந்தியா என்பது “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தத்துவம் என்பதை, தனக்கே உரிய தாய்மை உணர்வுடன் மக்களிடம் எடுத்துக் கூறினார்.
சாதியை அழித்தொழிப்பதே கல்வியின் அடிப்படை நோக்கம் என்பதை உணர்ந்த கல்வியாளர் வே. வசந்தி தேவி அவர்கள், அரசின் பொறுப்பிலும் செலவிலும் இயங்கும் பொதுப் பள்ளிகள் சமூக மாற்றத்திற்கான செயல் கூடங்கள் என்று கருதினார்.
தனது மகன் நரேந்திரன், மகள் அஜந்தா இருவரையும் பாரதி விரும்பிய புதிய மாந்தர்களாக வளர்த்தார். அவர்களுக்கு நல்ல கல்வியைத் தந்து, உலகெங்கும் உள்ள மக்களை சொந்தங்களாக்கிக் கொள்ளப் பழக்கினார். அவரின் மகள் வழி பேத்திகளும் அதே உணர்வும் உரிமையும் கிடைக்கப்பெற்றனர்.
“எனது மருமகன், மருமகள், பேத்திகள் எல்லாம் ஆப்பிரிக்கா, ஆசியா என உலகெங்கும் வாழும் மக்களின் குழந்தைகள். ஆப்பிரிக்க வம்சா வழியினரும், ஆசிய வம்சா வழியினரும் இன்று எனது குடும்பம். எனது குடும்பத்தைப் போன்றே இந்தியாவை சாதிகள் இல்லாத ஒரு பெரும் குடும்பமாக பார்க்க விரும்புகிறேன்” என்று தனது மகன், மகள், மருமகள், மருமகன், பேத்திகள் ஆகியோர் கூடியிருந்த புகைப்படத்தைக் காண்பித்து கூறினார்.

மார்க்ஸ்சியத்தை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் நிலைபாடுதான் தனது நிலைபாடு என்ற அரசியல் கருத்து கொண்டவராக இறுதி வரை வாழ்ந்தார்.
சாதி ஒழிப்பிற்கான வாழ்வியலை தனது குடும்பத்தின் மூலமே நிரூபித்துக் காட்டிய மனித உரிமைப் போராளி வே. வசந்தி தேவி அவர்கள், மக்கள் நலக் கூட்டணி சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மோதிரம் சின்னத்தில் சென்னை ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்ததும், அதை கல்விக் காண உரையாடலுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஆர். கே. நகர் தொகுதியில் அன்றைய முதலமைச்சரும் போட்டியிட்டார். கல்வி உரிமைப் போராளி வே. வசந்தி தேவி அவர்களும் போட்டியிட்டார்கள்.
பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்களைப் பொறுத்தவரை, அவர் யாரையும் எதிர்த்துப் போட்டியிட வில்லை. தேர்தலில் மக்களிடம் இறையாண்மை (Sovereignty) குறித்த உரையாடல் நிகழ்த்தினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி இறுதி இறையாண்மை மக்களிடம் உள்ளது, எனவே, மக்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி உரிமைக்கான வாக்காக தங்களிடம் உள்ள இறையாண்மையை பயன்படுத்த வேண்டும் என்று தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
வாக்களிக்கும் நாளில், பணிகள் எல்லாம் முடிந்த பின்னர், தனக்கு எவ்வளவு வாக்கு கிடைக்கும் என்று எந்த கவலையும் இல்லாமல், மிகவும் உற்சாகத்துடன் அவர் சொன்னது, “உழைக்கின்ற மக்களின் வீடுகளுக்கு சென்று, கல்வி குறித்து அவர்கள் எப்படியான புரிதல் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த பகுதிகளில் மக்களுக்கு நூலகம், படிப்பகம் உருவாக்க வேண்டும்” என்றார்.
அரசுப் பள்ளிகளை ஜனநாயகப்படுத்த வேண்டும். பெற்றோர் அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க வேண்டும். பள்ளியின் மேலாண்மை அந்தந்தப் பகுதி மக்களிடமே இருக்க வேண்டும் என்று தனது 87வது வயதிலும் ஓயாமல் பேசி வந்தார்.
அவர் கூறுவதை செய்து முடிக்க ஒரு இளம் படையையும் உருவாக்கிக் கொண்டார்.
கல்விப் போராட்டச் சுடரை இனி தனது அடுத்தத் தலைமுறை உயர்த்திப்பிடித்து முன்னேறிச் செல்லும் என்ற பெரும் நம்பிக்கை பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்களுக்கு உருவானது.
இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சமூக மாற்றத்திற்கான முன்னணி படையாக திகழும் என்ற பெரும் நம்பிக்கை பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்களுக்கு உண்டு.
அன்னிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலையடைந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், தனது மகள் அஜந்தா கரங்களில் குழந்தையைப் போல் சாய்ந்து, தனது இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டார் தோழர் வே. வசந்தி தேவி.
இருபத்தோராம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலேவாக வாழ்ந்த அம்மா வே. வசந்தி தேவி அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
பேராசிரியர் முனைவர் வே. வசந்தி தேவி அவர்களுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.