வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த கார்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் ! வைரலான சிசிடிவி காட்சிகள் !
மதுரை அருகே வீட்டில் நிறுத்தியிருந்த சொகுசு கார்களை போதை கும்பல் ஒன்று அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அடுத்துள்ள நரசிங்கம் அம்மச்சியம்மன் நகரில் அருள்தாஸ், வினோத், பாஸ்கர் மற்றும் முத்து ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு வழக்கம்போல வீட்டு வாசல் முன்பு கார்களை நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நள்ளிரவில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் வெளியே நிறுத்தி வைத்திருந்த கார்களின் மீது பெரிய கல்லால் 8 முறை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர்.
மற்றொருவர் போதையில் செய்வதறியாது வலது கைகளால் காரின் கண்ணாடியை நான்கு முறை தாக்கியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்ததை அறிந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
காலையில் நிறுத்தி வைத்திருந்த நான்கு கார்கள் கண்ணாடி சேதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து காரின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினருக்கு அருள்தாஸ் மற்றும் மூன்று நபர்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ சஞ்சய் முத்துப்பாண்டி, மங்களகுடி பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாண்டியன் ஆகியோரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒத்தக்கடை சுற்றுப் புற பகுதியில் சுதந்திரமாக காரை வீட்டு வாசலின் முன்பாக இரவில் நிறுத்திவிட்டு செல்ல முடியாத அவலநிலை காணப்பட்டு வருகிறது. இதனால் இந்த போதை இளைஞர்கள் செய்யும் அட்ராசிட்டிகளின் அட்டூழியம் தாங்க முடியாமல் அப்பகுதியில் வாழும் பொது மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.