ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் – இடி முழக்கம் ஓய்ந்தது !
இடி முழக்கம் ஓய்ந்தது – இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் (பெரம்பலூர், அரியலூர், கரூர் சேர்ந்த) பெரம்பலூரை பூர்வீகமாகக் கொண்ட அணுகுண்டு ஹழ்ரத் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மௌலவீ ஷர்புத்தீன் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் படைத்த இறைவனின் அழைப்பை ஏற்றுள்ளார்கள்.
1962-ல் லால்பேட்டை மதரஸா நூற்றாண்டு விழாவில் அல்லாமா காயிதேமில்லத் அவர்களின் தலைமையில் அல்லாமா அமானி ஹழ்ரத் அவர்களின் பொற்கரத்தில் ஸனது பெற்ற பாக்கியசாலி.
இந்தியாவின் மற்ற எந்த ஒரு இரண்டாம்நிலை நகரத்தை விடவும், முஸ்லிம் நிறுவனங்கள் அதிகமாக கல்வி நிறுவனங்களைக்கொண்டு கல்விப்பணி செய்த ஊர் திருச்சி. அதற்கான விதைகளில் முதன்மையானது “மஜ்லிசுல் உலமா” ஆகும். 1918ல் தொடங்கி இன்று வரை நூற்றாண்டு கடந்து லட்சத்தைத்தாண்டி கல்வியாளர்கள் உருவாக விதையிட்டது மஜ்லிசுல் உலமா ஆகும். இந்த மஜ்லிசுல் உலமாவின் வளர்ச்சியுடனே 20ம் நூற்றாண்டின் இறுதிவரை பயணித்தவர் ஹழ்ரத் பெருந்தகை அவர்கள்.
அக்காலகட்டங்களில் மஜ்லிசுல் உலமா தொடக்கப்பள்ளி, காஜாமியான் மேல்நிலைப்பள்ளி, சமது மேல்நிலைப்பள்ளி, காஜாமியான் ITI, ஜமால் முகம்மது கல்லூரி, MIET பாலிடெக்னிக் (இது 1992 வரை ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்திலேயே இயங்கியது) போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணாக்கார்களுக்கும், மஜ்லிசுல் உலமா அநாதை விடுதியில் தங்கி பிற கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணாக்கர்களுக்கும் இவரே தீனியாத் கல்வியின்,தந்தை ஆவார். காஜாநகர், அரபிக்கல்லூரி மக்களின் மிகுந்த அன்புக்கு பாத்திரமானவர்.
இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்து கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் இருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்து கல்வி வளர்ச்சிக்கு விதையிட்டதில் முக்கியப் பங்கு வகித்தது மௌலானா முகம்மது அலவி அவர்களால் தொடங்கப்பட்ட பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப்பள்ளி. இதுவே பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.
இதற்கடுத்து, பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற மாணாக்கர்களை திருச்சிக்கு அழைத்துவந்து கல்வி வழிகாட்டியதில் மிக முக்கியப்பங்கு வகித்தவர் ஹழ்ரத் பெருந்தகையே. சமீபத்தில் மறைந்த அப்துல் ஜப்பார் ஹழ்ரத் அவர்களும் அணுகுண்டு ஹழ்ரத் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள். காரணம் இருவரின் ஒத்த சிந்தனையே. இவர்கள் இருவரும் சேர்ந்து பெரம்பலூர் மாவட்ட மாணாக்கர்களுக்கு கல்வி பயில திருச்சிக்கு வழிகாட்டினர் என்பது மிகையல்ல.
இவர்களது மற்றொரு நண்பர் சமீபத்தில் மறைந்த போஸ்ட் மாஸ்டர் முகம்மது ஹனீபா அவர்கள் இவர்களைப்போல் அரியலூர் மாவட்டத்திற்கு வழிகாட்டியதையும் இந்நேரத்தில் நினைவு கூறுவோம். பெரம்பலூர் மாவட்ட மக்கள் நகைச்சுவையாக ஹழ்ரத் பெருந்தகை பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுவர். “பையன் படிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறானா?, அணுகுண்டு ஹழ்ரத்திடம் சொல்லுங்கள். ஆள் அணுப்பி அவர் தூக்கிக்கொண்டு சென்று விடுவார்.
சாப்பாடு, இடம், படிப்பு எல்லாவற்றையும் இறையருளால் அவர் பார்த்துக்கொள்வார்”. என்று கூறுவர். இது வெறும் வார்த்தையல்ல, பெரம்பலூர் பகுதி மக்கள் ஹழ்ரத் பெருந்தகை மேல் வைத்திருந்த நம்பிக்கை. ஹழ்ரத் பெருந்தகையும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையும் நிறைய ஆலிம் உலமாக்களையும் உருவாக்குவதில் பங்கேற்றார்.
மாஷா அல்லாஹ்.
1929ல் பெரம்பலூர் மாவட்டம் முகம்மது பட்டிணத்தில் பிறந்து, 95 வருடங்கள் இவ்வுலகில் தீன் பணியும் கல்விப்பணியும் செய்து இன்று பெரம்பலூரில் தனது இம்மை வாழ்வை நிறைவு செய்துள்ளார். எல்லாம் வல்ல இறைவன் அண்ணாரின் அனைத்து சமுதாயப் பணிகளையும் ஏற்று, உயர்வான சுவர்க்கத்தை தந்தருள் புரிவானாக! ஆமீன். அதேபோல் ஹழ்ரத் பெருந்தகையின் சமூகப்பணிகளில் பகுதியளவேனும் நாமும் செய்ய அருள் புரிவானாக! ஆமீன்.