தேர்தல் கூத்து 2026 ! இலால்குடி – களம் எப்படி இருக்கிறது ?
ஏறத்தாழ 6000 கோடி ரூபாயை மொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பாக கொண்டிருக்கும், தமிழகத்தின் நெ-1 பணக்கார வேட்பாளர் என்ற அடையாளத்தோடு, லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் களம் காணும் தொகுதியான திருச்சி – இலால்குடி தொகுதி தவிர்க்கவியலாமல் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டது. அடிப்படையில் விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் நிறைந்த தொகுதியான இலால்குடியில், காவிரி, கொள்ளிட கரையோர கிராமங்களில் நெல்லும், வானம் பார்த்த பூமியான புள்ளம்பாடி ஒன்றியத்தில் பருத்தி, மக்காச்சோளம் பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. உடையார், ரெட்டியார், முத்துராஜா, மூப்பனார் மற்றும் பட்டியல் சாதியினர் நிறைந்த தொகுதி.
களத்தில் யார் – யார் ?
தொடர்ந்து 10 முறை தி.மு.க. வென்ற தொகுதி. 2006 முதல் 2021 வரை தொடர்ந்து நான்கு முறை திமுக சார்பில் அ.சௌந்தரபாண்டியன் வென்ற தொகுதி. வெற்றி நம் பக்கம்தான் என்ற உற்சாகத்தில், திமுக சார்பில் தொழிலதிபர் த.பாரிவள்ளல் களமிறங்கியிருக்கிறார். கே.என்.நேருவை எதிர்த்து வெற்றி பெற்ற தொகுதியின் ஒரே பெண் வேட்பாளரான காங்கிரசு கட்சியின் லோகாம்பாளுக்கு அடுத்து, இதே தொகுதியில் களம் காணும் இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு, உடையார் சொந்தங்களின் ஓட்டுகளை குறிவைத்து அ.தி.மு.க.வின் லீமா ரோஸ் களமிறங்கியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல்வாதி என்ற அனுபவத்தோடு த.வெ.க. சார்பில் கு.ப.கிருஷ்ணன் களத்தில் இருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ மோதி பார்த்துவிட வேண்டியதுதான் என்ற வைராக்கியத்தில் நா.த.க. சார்பில் இளம் வழக்கறிஞர் நே.மதன் களத்தில் இருக்கிறார். சினிமாவில் வில்லனாகவே அடையாளப்படுத்தப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகான் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு தேர்தலில் பங்கேற்று காமெடியனாகவே மாறி பட்டையை கிளப்பி வருகிறார். இந்தமுறை இலால்குடியை அவர் தேர்வு செய்திருக்கிறார்.
திமுக – பாரிவள்ளல் :
தொடர்ந்து நான்குமுறை வென்ற போதிலும், சீனியர் அமைச்சர் நேருவுடன் முரண்பட்டு நின்ற காரணத்தால், சிட்டிங் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனை தலைமை கைவிட்டதாக, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. என்னதான், கே.என்.நேருவுடன் பிணக்கு என்றாலும் அதை வெளிப்படையாகவோ, அல்லது அரசியல் சாதுர்யத்துடனோ அணுகுவதற்கு பதிலாக, பேஸ்புக் உள்ளிட்டு பொது தளத்தில் அதனை எடுத்து சென்றதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்கிறார்கள் மற்றொரு தரப்பில்.
அடுத்து, தொடர்ந்து நான்குமுறை வென்றிருப்பதும் உண்மை. தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார் என்பதும் உண்மை. ஆனால், அவை எதுவும் அவரது சர்ச்சை பேசப்பட்ட அளவுக்கு, விளம்பரம் ஆகவில்லை என்கிறார்கள். காலம்போன கடைசியில், தற்போது தனது சாதனைகளை பேஸ்புக்கில் தினமும் பதிவிட்டு வருவதால் என்ன பிரயோசனம் என்ற கேள்வியையும் உடன்பிறப்புகள் எழுப்புகிறார்கள். இதையெல்லாம்விட, தன்னைச்சுற்றி ”செவன்ஸ்டார்ஸ்” என்றழைக்கப்படும் ஏழுபேர் கூட்டணியைத் தாண்டி அவர் மக்களிடத்தில் மக்களோடு மக்களாக ஐக்கியமாகாமல் இருந்ததும்; தன்னிடம் கோரிக்கையோடு வந்தவர்களையெல்லாம், “அவரிடம் போ” என்று கே.என்.நேருவிடம் தள்ளிவிட்டதும்தான் அவருக்கான தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை பெற முடியாமல் போனதற்கான காரணங்களாக பட்டியலிடுகிறார்கள்.
இந்த பின்புலத்தில்தான், மகிழம்பாடியை பூர்வீகமாக கொண்ட த.பாரிவள்ளல் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான சித்ரா காம்ப்ளக்ஸ் உரிமையாளர்தான் இந்த த.பாரிவள்ளல். அப்பா தங்கவேல், அந்த காலத்து திமுக தொண்டன். சித்ரா காம்ப்ளக்ஸை திறந்து வைத்ததே அன்பில் பி.தர்மலிங்கம்தான். அப்பா வழியில் அரசியலில் சோபிக்கத் தவறியவர் த.பாரிவள்ளல். இடையில், கொஞ்சம் ஆடம்பர செலவுகளில் நாட்டம் கொண்டவராக இருந்து, தந்தையால் கட்டுப்படுத்தப்பட்டு தற்போது நார்மல் நிலைக்கு திரும்பிய நிலையில், அப்பா வழியில் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் வியூகமும் திமுக தொண்டர்களின் களப்பணியும் தன்னை எப்படியும் கரை சேர்த்துவிடும் என்ற தெம்பில் களத்தில் குதித்திருக்கிறார். ஆனாலும், ”கைக்காச செலவு பண்ணாம வெற்றியை ருசிக்க முடியாதுப்பா”-னு அமைச்சரின் அட்வைஸ்-க்கு இணங்க, திருச்சி நகரத்திலுள்ள முக்கியமான இடத்தை விலை பேசிவிட்டாராம். கே.என்.நேருவின் கடைசி கட்ட களப்பணிகள் எப்படியும் திமுகவுக்கான இடத்தை உறுதி செய்துவிடும் என்றே மலையாக நம்பியிருக்கிறார்கள், திமுக தரப்பில்.
அதிமுக – லீமா ரோஸ் மார்ட்டின் :
அதிகாரப்பூர்வமாக அதிமுக தரப்பில் இந்தந்த தொகுதியில்தான் போட்டியிடப்போகிறது என்று தொகுதியின் பட்டியலே இறுதி செய்யாத நிலையில், இலால்குடி தொகுதியில் அதுவும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரான அன்பிலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று தமிழகத்தில் முதல் முதலாய் அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியவர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின். அப்போதே, இவருக்கு எதிரான சர்ச்சையும் தொடங்கிவிட்டது.
உடையார் சாதியினருக்கான கட்சியாக கருதப்படும், பாரிவேந்தரை தலைவராகக் கொண்ட இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே) 2012 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோதே, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற உயர் பொறுப்பை வகித்தவர் லீமா ரோஸ் மார்ட்டின். 2019 இல் இணை பொதுச்செயலர் ஆனார். 14 வருடம் ஐ.ஜே.கே.வில் பயணப்பட்டவர், திடீரென்று 2026, பிப்-09 அன்று தனது கட்சி பதவி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டு அனைத்தையும் ராஜினாமா செய்து வெளியேறினார். சரியாக ஒருவார இடைவெளியில், பிப்-17 இல் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அடுத்த ஒரு வாரத்தில், அதிமுகவின் மாநில மகளிர் அணி இணைச்செயலராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த வாரத்தில், இலால்குடி தொகுதியில் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.
இந்த பின்னணியைத்தான், த.வெ.க.வின் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், அதிமுக கட்சியை விலைக்கு வாங்கிவிட்டார் என்றும் இவரிடம் கட்சியை எடப்பாடி விற்றுவிட்டார் என்றும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். எத்தனை கோடி செலவானாலும் சரி, வென்று காட்ட வேண்டுமென்று பம்பரமாக சுழன்று வருகிறார் லீமா ரோஸ் மார்ட்டின். திமுக என்ன கொடுக்கிறதோ, அதை அப்படியே இரட்டிப்பாக கொடுத்து வெற்றியை தன்வயமாக்கிக்கொள்ள வேண்டுமென்ற கணக்கில் இருக்கிறார் என்கிறார்கள். இதற்காக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒன்றிய நிர்வாகிகள் வரையில் நேரில் பார்த்து சரிகட்டி வருவதாக தகவல்.
த.வெ.க. – கு.ப.கிருஷ்ணன் :
ஏற்கெனவே, அதிமுகவில் இருந்தபோது தன்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதியை குறிவைத்துதான், கடைசி நேரத்தில் த.வெ.க. பக்கம் போனார். இந்த தொகுதியில் நிறைந்திருக்கும் முத்துராஜா சாதி ஓட்டுக்களை குறிவைத்தே களமிறங்கியிருக்கிறார். ஆள்பலமும் விட்டமின் பலமும் இருப்பதை வைத்து எப்படியும் மல்லுக்கட்டி வென்றுவிடலாம் என்றே நினைத்து களமிறங்கியிருக்கிறார். மாமியாருக்கு எதிராக, மருமகன் ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரா? கு.ப.கிருஷ்ணன் வெற்றிக்கு அவர் உள்ளபடியே பாடுபடுவாரா? என்பதெல்லாம் குழப்பத்திற்குரியவையாகவே இருக்கின்றன.
நா.த.க – வழக்கறிஞர் மதன் :
நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளரான இளம் வழக்கறிஞர் மதன் என்பவரை களமிறக்கியிருக்கிறார்கள். தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு அவரது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்ததே, அண்ணன் சீமான்தான். அப்போதே, இவர்தான் கட்சியின் வேட்பாளர் என்பதாக அறிவித்தும் விட்டார். சீனியர் கட்சி வேட்பாளர்களுக்கு போட்டியாக இல்லாமல் போனாலும், தனது சக்திக்குட்பட்டு, முடிந்த அளவுக்கு தொடர்ச்சியான பிரச்சாரத்தை மதன் மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளவும்; இப்போது இல்லையென்றாலும் பிற்காலத்தில் அனுபவமாகவேனும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற எண்ணத்தில் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் நா.த.க.வினர்.
நடிகர் மன்சூர் அலிகானை பொறுத்தமட்டில், தொகுதியில் கவனத்தை ஈர்க்கலாம். ஓட்டை ஈர்த்துவிட முடியாது என்பதே யதார்த்தம். அவரும் ஒரு போட்டியாளர் அவ்வளவுதான். அதிமுக தரப்பில் லீமாரோஸ் மார்ட்டின் களமிறக்கப்பட்டிருப்பதன் காரணமாக, மிக எளிதாக வென்றுவிடலாம் என்ற திமுகவின் கனவை சற்றே தொந்தரவு செய்திருக்கிறது என்பதே உண்மை. களப்பணிகளோடு, கொஞ்சம் கைக்காசை செலவும் செய்தால்தான் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்க முடியும் என்ற நிலையில்தான் இலால்குடி தொகுதியின் கள நிலவரங்கள் அமைந்திருக்கின்றன.
அங்குசம் தேர்தல் செய்திக்குழு.
இதுபோன்ற, இத்தொகுதியின் பல்வேறு அம்சங்களை அலசுகிறது இந்த காணொளி : முழுமையாக காண :








Comments are closed, but trackbacks and pingbacks are open.