அல்லூரில் சமத்துவ விருந்து பொதுமக்கள் திரளாக பங்கேற்பு !
திருச்சி சேவை தொண்டு நிறுவனத்தின் அல்லூர் மையத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ விருந்து நடைபெற்றது. அல்லூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேர் சமத்துவ விருந்தில் கலந்துகொண்டனர். அறுசுவை உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்ததுறை அலுவலர் துணை கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசுகையில், அனைவரும் சமம் என்ற பொருளில் தமிழக அரசின் சமத்துவ விருந்தின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சேவை தொண்டு நிறுவன நிறுவனர் கே. கோவிந்தராஜு வாழ்த்திப் பேசினார். மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர், கண்காணிப்பாளர், அலுவலர்கள் பொதுமக்களோடு சமத்துவ விருந்தில் கலந்துகொண்டனர். நிறைவாக சேவை தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் வனிதா நன்றி கூறினார்.