கண் திருஷ்டி அல்ல. இதன் பின்னால் ரத்தம் தெறித்த கொடூர வரலாறு இருக்கிறது
இந்தப் படங்கள் வைப்பது கண் திருஷ்டி அல்ல. இதன் பின்னால் ரத்தம் தெறித்த கொடூர வரலாறு இருக்கிறது.
நான் பாளையங்கோட்டையில் ஒரு ஒப்பந்தக்காரர் மூலம் வீடு கட்டினேன்.இதே போல் ஒரு படத்தை எடுத்துக் கொண்டு வந்தார். இது எதற்கு என்றேன். கண்திருஷ்டி என்றார். இதை வைக்காதீர்கள் என்று சொன்னேன். நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் சொல்கிறீர்களா சார்? எனது திருப்திக்கு வைக்கிறேன் என்றார்.
எனக்கு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை. நான் எந்தக் கடவுள் படத்தையும் என் வீட்டில் வைத்ததும் இல்லை. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள். பொது இடத்தில் வைக்கமாட்டேன் என்றேன்.
இதை ஏன் வைக்கிறார்கள் என்று அவரிடம் சொன்ன போது, இனி எங்கும் வைக்கமாட்டேன் என்றார்.
ஆசீகவகம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களே தமிழ் மண்ணில் கி.பி.7 ம் நூற்றாண்டு வரை செழித்து இருந்தது. பௌத்த மதம் அரசுக்கு வழிகாட்டுபவர்களாகவும், சமண மதத்தினர் குகைகளில் வாழ்ந்து அறம் உரைப்பவர்களாகவும் இருந்தனர். பௌத்தம், சமணத்தை கைவிட்டு கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் எழுந்தது.
சமணத்திலிருந்த திருநாவுக்கரசர் சைவத்திற்கு மாறினார் என்பது அறிந்த வரலாறு.
ஆசீவகர்,பௌத்தர், சமணர் தங்கள் மதங்களை காக்கும் பொருட்டு போராடினார்கள். பௌத்த விஹார்களையும், சமணப் பள்ளிகளையும் பார்ப்பனியம் தனதாக்கிக் கொண்டது.
ஆசீவகர்கள், சமணர்கள் கழுவேற்றம் செய்யப்பட்டார்கள். இன்றைய கோவில் கோபுரங்களில் கழுவேற்றக்காட்சிகள் சிற்பங்களாக இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் ஆசீவகர்கள் கழுவேற்றப்பட்ட காட்சிகளை படத்தில் இணைத்துள்ளேன்.
மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வரலாறும் படித்திருப்பீர்கள். எண்ணாயிரம் பேர் என்றும், எண்ணாயிரம் என்ற ஊரைச்சேர்ந்த சமணர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.
இதே போல் பௌத்த பிக்குக்களின் தலைகள் வெட்டி எறியப்பட்டது. புத்தரின் சிலைகள் தலை இல்லாமல் இருப்பதையும் நாம் அறிவோம். மன்னர்களுக்கு மந்திரம் சொல்லிக்கொடுத்த பார்ப்பனர்களின் துணையோடு தான் இக்கொடூரங்கள் அரங்கேறியது.
வெட்டிக் கொல்லப்பட்ட பௌத்த பிக்குகளின் தலையை ஒரு தட்டில் வைத்னர். அதற்கு பரிசுகளும் மன்னர்களால் வழங்கப்பட்டது. வெட்டப்பட்ட தலைகளோடு, பௌத்த விஹார்களை கோவில்களாக மாற்றினர். அப்போது ஏற்கனவே இருந்த வழிபாட்டு முறைகளையும், புத்தர்,மகாவீரர் போன்றோரை மிகவும் மோசமாக திட்டிப் பாடினர். இப்பாடல்களை இப்போதும் கேட்கலாம்.
இப்பாடல்களுக்கு கேரளத்தில் பூரப்பாட்டு என்று பெயர். கேரளத்தில் இதற்கான தனி விழாவே நடக்கிறது. இதற்கு தாலப்பொலி என்று பெயர். பொலி கொடுத்திருவேன் என்பது இதுதான். பொலி போட்டிருவேன் என்று இங்கு சொல்வார்கள்.
காவு தீண்டுதல் என்பதும் பௌத்த விஹார் மற்றும் சமணப்பள்ளிகளைக் கைப்பற்றிய பார்ப்பனர்களின் நினைவுகள் தான். தமிழில் ஏசல் பாடல்கள் என்ற வடிவத்தில் இருக்கிறது.
தாம்பூலத்தில் ரத்தக்கலர் போல வரவைத்து ஆரத்தி எடுப்பதும், அதில் பணம் போடுவதும், பௌத்த பிக்குகளின் தலையை வெட்டி ரத்தத்தோடு வைத்து, பார்ப்பனர்களையும், மன்னர்களையும் வரவேற்று பரிசு பெற்றதிலிருந்து உருவானது தான்.
பௌத்த தலை வெட்டப்பட்டால் வைணவக் குறியீடும், சமணர்கள் தலை வெட்டப்பட்டால் சைவக்குறியீடும் இடப்பட்டது. அக்கொடூரமே கண்திருஷ்டி என்று கதை அளக்கப்பட்டது. பௌத்தம் என்பதை பூதமாக காட்டினர்.
பெரியார் பெயரிலான அறிவியல் மையத்தில் எவர் வைத்திருந்தாலும் இது சரியல்ல. பெரியார் மையத்தில் மட்டுமல்ல, உங்கள் வீட்டிலும் கூட இதை வைக்காதீர்கள். ஏனெனில் அவை வர்ண மற்றும் வர்க்க ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட, இம்மண்ணில் அறம் உரைத்த நம் முன்னோர்களின் தலைகளே.
— சூர்யா சேவியர்