கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !
நான் பல கடற்கரைகளில் சென்றிருக்கிறேன்… ஆனால் கன்னியாகுமரி கடல் என்னிடம் ஏற்படுத்திய உணர்ச்சி வேறே! அலை மோதும் ஒவ்வொரு நொடியிலும் அந்த இடம் தெய்வீகமாகப் பேசுவது போலிருந்தது. கடலின் ஒலி கூட “அம்மா…” என்று மெல்லிசையாகச் சொல்லும் தாலாட்டுப் பாடலாய் என் மனதை வருடியது.
அந்த கடலோரத்தில் மினுமினுக்கும் தங்கக் கோபுரத்துடன் நிற்கும் பகவதி தேவியுடைய கன்னியாகுமரி அம்மன் கோவில், நம்பிக்கையும் சக்தியும் கலந்த தலமாகும். இதன் வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகவும் அதிகரித்தது… கோவிலுக்கு அருகில் வயதான 2 பெண்மைகள் பூஜை பொருட்கள் விற்று கொண்டு இருந்தனர்… அவர்களிடம் என் ஆர்வத்தை சொன்னதும் இக்கோவில் பற்றி சொல்லும் விதமும் ஈடுபாடும் இந்த தலம் எவ்வளவு பழமையானது மற்றும் அங்கு வாழும் மக்களின் மனதில் அம்மன் எவ்வாறு குடிகொண்டுள்ளாள் என்று தெரிகிறது.. அவர்கள் சொன்ன கதை நீங்களும் கேளுங்கள்….
முன் காலங்களில் கன்னியாகுமரி இருந்த இடம் ஒரு தானியங்கள் விளையும் பசுமை நிலம். பின்னர் ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் ஆட்சிக் காலத்தில், இந்த கோவில் நிறுவப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது தாராசூரன் என்ற அரக்கன், தன் அகம்பாவத்தில், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் சிவபெருமானிடம் கடும் தவம் செய்து, “எனக்கு ஆண்களாலும், மனிதர்களாலும், விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது” என வரம் கேட்டான். ஈசன் வரம் அளித்ததும், அவன் கொடுமைகள் மேலும் அதிகரித்தது. அவன் அன்னை உமாதேவியை வணங்காமலேயே அவமதித்தான்.
இதைக் கண்ட பார்வதி தேவி, தன் சக்தியில் இருந்து ஏழு தெய்வ கன்னியர்களை உருவாக்கி, அவர்களை பூலோகத்திற்கு அனுப்பினாள். அந்த ஏழு பேரும் பல இடங்களில் போர் புரிந்தனர்; ஆனால் தாராசூரனின் படைகளைக் களைந்தும் அவன் மீண்டும் உயிர் பெற்றான். அப்பொழுது அந்த ஏழு கன்னியர்களும் தங்கள் தலங்களை உருவாக்கினர் . சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு… ஆனால் ஒருத்தி மட்டும் தங்கினாள், கடலோரத்தில், சீவிலிப் பாறையில்.
அவளே பகவதி கன்னியாகுமரி தேவி. அவள் கடுமையான தவத்தில் ஈடுபட்டு, வாணாசூரன் உள்ளிட்ட அசுரர்களை அழிக்கத் தக்க தருணத்தை எதிர்நோக்கினாள். ஒரு நாள், வாவத்துறையைச் சேர்ந்த மீனவ தாயார் சீவிலிப் பாறைக்கு வந்தபோது, ஒரு சிறுமியாக தேவி காட்சி கொடுத்து, “என்னை உன் கூடையில் வைத்து கரைக்கு எடுத்துச் செல்” என்றாள். அந்த தாயார் கூடையை எடுத்துச் சென்ற இடமே இப்போது அம்மன் கோவில் இருக்கும் பருத்தி விளைந்த நிலம். அங்கே குழந்தை வடிவில் இருந்த தேவி மறைந்ததும், அந்த இடம் புனிதமென மக்கள் உணர்ந்தனர். சான்றோர் வழிபாட்டினால் அந்த இடத்தில் பகவதி அம்மன் கோவில் நிறுவப்பட்டது.
பின்னர் வாணாசூரனின் கொடுமைகள் அதிகரித்தபோது, தேவி அம்பு, வில், ஆயுதங்களுடன் போர்க்களம் சென்றாள். குதிரை மீது ஏறி மகாதானபுரம் நோக்கிப் புறப்பட்டாள். நாதஸ்வர இசை முழங்க, மக்கள் வணங்கியபடி அந்த சக்தி அவனை எதிர்த்து போரிட்டாள். சில நொடிகளில் அவனையும் அவனது படைகளையும் அழித்து, கடலில் நீராடி, வெற்றியுடன் திரும்பினாள். அன்றிலிருந்து அவள் இத்தலத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் என்ற பெயரில் தவக்கோலத்தில் தங்கியிருக்கிறாள்.

அந்த பாறையில் இன்னும் அவள் பாதச்சுவடு காணப்படுகிறது. இன்று அந்தப் பாறை ஸ்ரீபாத மண்டபம் என அழைக்கப்படுகிறது. அருகே உள்ள விவேகானந்த மண்டபம் அவரின் தியான நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் சேர்ந்து கடலின் நடுவே ஆன்மீக சங்கமமாக திகழ்கின்றன. அம்மன் முகத்தில் மினுமினுக்கும் வைர மூக்குத்தி பற்றி மக்கள் பல கதைகள் சொல்வார்கள். அதன் ஒளி கடலில் தொலைவிலிருந்தே தெரிந்ததால் கப்பல்கள் வழி தவறியதாகவும்.
இக்கதையை அவர்கள் சொல்லி முடித்ததும் எனது உடல் மெய்சிலிர்த்தது…
அங்கே நின்று கடலைப் பார்த்தபோது எனக்கு தோன்றியது :
அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக மாறுகிறது.
ஒவ்வொரு அலையும் வந்து என் கால்களைத் தொட்டது, அது கடலின் அலை அல்ல… அம்மன் “நான் இருக்கிறேன்…” என்று மெல்லச் சொன்னது போல. அந்த சொற்கள் அலை ஓசையோடு கலந்தது, என் மனம் அமைதியில் கரைந்தது. அம்மன் அருள் அலை போல வந்து நம்மைத் தழுவி, அமைதியாய் நம்முள் நிற்கிறது.கன்னியாகுமரி… அது ஒரு கடல் தளம் அல்ல, அம்மன் உயிராய் அலைபாயும் ஆன்மீக புனிதம். அவளின் அருள், அந்த கடலின் அலைபோல் நம் உள்ளத்தில் ஓயாமல் பாய்கிறது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.