போலி வழக்கறிஞர்கள் ! சாதியின் பிடியில் சங்கம் ! அலசும் அட்வகேட் அலெக்ஸ் !
போலி வழக்கறிஞர்கள் ! சாதியின் பிடியில் சங்கம் ! அலசும் அட்வகேட் அலெக்ஸ் !
”தமிழகம் முழுவதிலும் போலி வழக்குரைகள் மலிந்துவிட்டார்கள். சாதியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். வழக்கறிஞர் சங்கங்கள் சாதியின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன.” என்பதாக சரவெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார், திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் இரா.அலெக்ஸ். இந்த விவகாரம் குறித்து அங்குசத்திடம் காரசாரமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
திருச்சியில் பாரம்பரியமான வழக்கறிஞர் சங்கமாக கருதப்படும், திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷனுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல்-08 அன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த தேர்தலையொட்டிய, வாதப்பிரதிவாதங்களுள் ஒன்றாகவே போலி வழக்குரைஞர்கள் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், இரா.அலெக்ஸ்.

” அரசு சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து முறையாக வகுப்புக்கு சென்று, பாடத்தில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞராக பதிவு செய்து தினமும் நீதிமன்றத்தில் வழக்கை நடத்திவரும் உண்மையான வழக்கறிஞர்கள் ஒருபக்கம் இருந்து வருகிறார்கள். அதேசமயம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் செயல்பட்டுவரும் சில தனியார் சட்டக்கல்லூரிகளில் வகுப்புகளுக்கு செல்லாமலேயே, போலியான படிப்புச் சான்றுகளை பெற்று வழக்கறிஞர்கள் ஆகிவிடுகிறார்கள்” என்பதாக குற்றஞ்சாட்டுகிறார்.
”இவர்கள் அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. பெரும்பாலும் போலீசு ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்துதான் செய்கிறார்கள். பெருமையாக, பி.எல். என போட்டுக்கொள்கிறார்கள். ஹெல்மெட் போடாமல் போலீசிடம் வீண் சண்டை செய்கிறார்கள். இவர்களும் பார் அசோசியேஷனில் உறுப்பினர்களாக இருப்பதால், இவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.” என்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். நாட்டின் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்தும் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.” என்பதாக வழக்கறிஞர் சட்டம் 1961 – 24(1) அனுமதிக்கும்போது, அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த ஒரு நபரை எவ்வாறு போலி வழக்கறிஞர் என்று கூறுவீர்கள்?” என்ற கேள்விக்கு, ”இது நாடு தழுவிய பிரச்சினை. தமிழ்நாடு – புதுச்சேரி பார்கவுன்சிலிலும் சிக்கல் இருக்கிறது. சாதி இருக்கிறது. சில நீதிபதிகளும் சாதியபதிகளாக இருக்கிறார்கள்” என்பதாக குற்றஞ்சாட்டுகிறார், வழக்கறிஞர் அலெக்ஸ்.
“ஒன் பார் ஒன் ஓட்” என்ற உச்சநீதிமன்றத்தின் விதியை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரே நபர் பல்வேறு சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்” என்கிறார்.
மிக முக்கியமாக, ”இன்னும் சிலர் போலியான படிப்புச் சான்றிதழ்களை கொடுத்தும் வழக்கறிஞர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். இதனையெல்லாம் சுட்டிக்காட்டி, அவர்கள் போலி வழக்கறிஞர்கள் என்று சொன்னால், அந்த சாதியில் போலி வழக்கறிஞர்கள் இல்லையா? என் சாதியில் மட்டும்தான் போலி வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். எல்லா சாதியிலும்தான் போலி வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சாதியின் பின் ஒளிந்து கொள்கிறார்கள்” என்கிறார், வழக்கறிஞர் இரா. அலெக்ஸ்.
தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் மத்தியில் ஆதரவு – எதிர்ப்பு என்பதாக போலி வழக்கறிஞர்கள் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறது, இந்த நேர்காணல். ஆரோக்கமான விவாதமாக, வழக்கறிஞர்களின் மாண்பை மேம்படுத்தும் நோக்கில் மாற்றங்களை காண வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
— வே.தினகரன்.