”காந்திஸ்தான்” என்ற பெயர் வைக்க வலியுறுத்திய தந்தை பெரியார் !
காந்தி தேசமே…
“மதத்தை வைத்துக் கொண்டு எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது” என்று காந்தியிடம் நேருக்கு நேர் சொன்னவர் பெரியார். 1927ல் பெங்களூருவில் நடந்த சந்திப்பின்போது பெரியார் இதனைச் சொல்ல, காந்தியோ வர்ணாசிரமம் உள்ளிட்ட கொள்கைகளை கடைபிடித்தபடியே தீண்டாமையை ஒழித்து விட முடியும் என்று நம்பினார். “அப்படி நீங்கள் நினைத்தால், மேல் சாதிக்காரர்களின் கோபம் உங்கள் உயிரையே பறித்து விடும்” என்று காந்தியிடம் கவலையும் எச்சரிக்கையும் கலந்த குரலில் சொன்னவர் பெரியார்.
கடைசியில் 1948 ஜனவரி 30 அன்று அதுதான் நடந்தது. இந்து மத வெறியாளன் கோட்சே, காந்தியை சுட்டுக் கொன்றான்.
காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், பெரியார் விடுத்த முதல் அறிக்கை : “காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டு கோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ-உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (குடிஅரசு, 31-1-1948).
காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரியார் அனுப்பிய பரிந்துரையில் இந்த நாட்டிற்கு காந்தி தேசம் (காந்திஸ்தான்) என்ற பெயர் வைக்க வலியுறுத்தினார்.
– கோ.வி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.