பணப்பிரச்சனையில் மகனை கொலை செய்து நாடகமாடிய தந்தை ! சிக்கியது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடலையூர் சாலையில் சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு ஆண் பெண் என இரண்டு பிள்ளைகள். பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. மகன் தர்மதுரை (23). கூலி வேலை செய்து வந்துள்ளார்.
தர்மதுரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மது அருந்திவிட்டு அடிக்கடி பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, பெற்றோரை தாக்குவது என இருந்துள்ளார். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் அவரது தந்தை மருது பாண்டியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்து உள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2024ம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்து நாலாட்டின்புதூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தர்மதுரை கைது செய்தனர். இதில் ஜாமினில் வெளியே வந்த பிறகு திருப்பூருக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 17ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான வாய்தாவிற்காக கோவில்பட்டி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். பின்னர் திருப்பூருக்கு செல்லாமல் லிங்கமபட்டியில் இருந்துள்ளார். மேலும் வழக்கம்போல மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சாப்பிட்டு விட்டு பெற்றோருடன் சண்டை போட்டுள்ளார்.
இதற்கிடையில் கடந்த 21ந்தேதி மாலையில் அதிக போதையினால் தர்மதுரை மயக்கம் அடைந்து கிடப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் தந்தை மருதுபாண்டி 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது தர்மதுரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நாலாட்டின்புதூர் போலீசார் தர்மதுரை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உடற்கூறாய்வு முடிவில் தர்மதுரை கொலை செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.
தர்மதுரை உடலை ஆய்வு செய்ததில் அவர் மூச்சு விட முடியாமல் அமுக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மருது பாண்டியிடம் விசாரணை நடத்தியதில் தனது மகனை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார் . இதையடுத்து போலீசார் மருது பாண்டியை கைது செய்தனர்.

இதுகுறித்து மருதுபாண்டி போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில்
கடந்த 21ந்தேதி மாலை 6மணியில் வீட்டில் இருந்து மருதுபாண்டியிடம், மது போதையில் இருந்த அவரது மகன் தர்மதுரை குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்தது மட்டுமின்றி தாக்க முயன்றுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி , தர்மதுரை கீழே தள்ளிவிட்டது மட்டுமின்றி , அருகில் கிடந்த தலையணையை எடுத்து அமுக்கி உள்ளார். இதில் மகன் இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்த மருதுபாண்டி செய்வதறியாமல் திகைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்பதால் , தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை மயங்கி கிடப்பதாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தது தெரியவந்துள்ளது.
மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்து விட்டு அதிக மது போதையில் உடல்நிலை சரியில்லாமல் மகன் இறந்ததாக தந்தை நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி