GST சிக்கலில் பட்டாசு தொழில் ! 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் என்ன?
500க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு கோடி ரூபாய் வரி நோட்டீஸ் – 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் கவலை.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பட்டாசுகளில் சுமார் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இந்தத் துறையை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 கோடி வர்த்தகம் நடைபெறும் இத்துறையிலிருந்து 18 சதவீத ஜிஎஸ்டி மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், பட்டாசு உற்பத்தி ஆலைகளுக்கு ஜிஎஸ்டி வசூலில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பட்டாசு தயாரிப்பிற்கு வாங்கப்படும் வேதிப்பொருட்களின் அளவை அடிப்படையாக கொண்டு விற்பனை மதிப்பை கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேதிப்பொருள் அடிப்படையில் வரி கணக்கீடு அலுமினியம் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், சல்பர், சார்கோல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் எவ்வளவு வாங்கப்பட்டுள்ளன என்பது கணக்கில் எடுத்து, அதற்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்க வேண்டிய பட்டாசு அளவை மதிப்பிட்டு, அதன் விற்பனை மதிப்பின் அடிப்படையில் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பேரில், சில ஆலைகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வரி கட்ட வேண்டுமென விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆலைகள் இந்த நோட்டீஸைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
“சட்டப்படி விற்பனை மதிப்பே அடிப்படை” – உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் படி உண்மையான விற்பனை மதிப்பின் அடிப்படையில்தான் வரி விதிக்கப்பட வேண்டும். முன்கணிப்பு அடிப்படையில் வரி கணக்கிடுவது சரியான நடைமுறை அல்ல என உற்பத்தியாளர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், உற்பத்தி இழப்புகள், சேமிப்பு சேதம், வெடி விபத்து காரணமான இழப்புகள், தரம் குறைந்த தயாரிப்புகள் போன்றவை கணக்கில் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வருமானவரி சோதனை பின்னணி இதற்கு முன்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சிவகாசி பகுதியில் செயல்படும் சில முக்கிய பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியிருந்தனர். வருமானவரி தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், கடந்த ஆண்டுகளில் சில பட்டாசு நிறுவனங்கள் ஜிஎஸ்டி மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளிலும் சிக்கியிருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் பட்டாசு தொழில் தற்போது வரித்துறை கண்காணிப்பில் அதிக கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஏற்கனவே பாதுகாப்பு விதிமுறைகள், வங்கி கடன் சுமை, PF, ESI, உரிமம் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் வரிச்சுமை சிறு மற்றும் நடுத்தர ஆலைகளை பாதிக்கும் அபாயம் இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
“இந்த நடைமுறை தொடர்ந்தால் பல சிறு ஆலைகள் மூடப்படும் சூழல் ஏற்படலாம். இது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்” என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அவசர ஆலோசனை கூட்டம்
இந்த விவகாரம் தொடர்பாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமா, மேல் முறையீடு செய்ய வேண்டுமா, அரசை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
முடிவு எது?
வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கில் புதிய கணக்கீட்டு நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரே மாதிரியான கணக்கீடு அனைத்து ஆலைகளுக்கும் பொருந்துமா என்பது கேள்வியாக உள்ளது.
சிவகாசி பட்டாசு தொழில் விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் நிலையில், ஜிஎஸ்டி மற்றும் வருமானவரி நடவடிக்கைகள் தொடரும் சூழலில் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் எந்த திசை நோக்கி செல்கிறது என்பது தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.