ஸ்வீட்ஸ் – பேக்கரி கடைகளில் அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் !
தீபாவளியை முன்னிட்டு, உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் லேபிள் விபரங்கள் இல்லாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் மொத்தம் 65 கிலோவும், 2 லிட்டர் ரோஸ் மில்க் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., உணவு பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் / ஆணையர் ஆர்.லால்வேணா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாஸூ ஆகியோர் அடங்கிய குழுவினர் 14.10.2025 மாலை 7 மணி முதல் 9 மணி வரை விருதுநகர் நகராட்சியில் உள்ள மதுரை சாலை, சார்பதிவாளர் அலுவலகம் முதல் கே.வி.எஸ் பள்ளி வரையிலான பகுதிகளில் உள்ள ஸ்வீட்ஸ் ஸ்டால்கள், பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, ஒரு ஸ்வீட்ஸ் கடையில் காலாவதியான பிறந்தநாள் கேக் 8.5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. லேபிள் விபரங்கள் இல்லாத பிஸ்கட், மசாலா கடலை, தூள் கேக் உள்ளிட்டவை 10.8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு பேக்கரியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மிக்ஸர், சேவு, சீவல் வகைகள் 18.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. அதே கடையில் லேபிள் விபரமின்றி இருந்த 2 லிட்டர் ரோஸ்மில்க் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கே.வி.எஸ் பள்ளி அருகிலுள்ள பேக்கரியில், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத ப்ளம் கேக், ரஸ்க் வகைகள் 25.3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி தேநீர் விற்பனை மேற்கொண்டிருந்தது கண்டறியப்பட்டதால், உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பலமுறை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுக்கூட்டம் நடத்தப்பட்டும், இன்னும் சில வணிகர்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமை மிகுந்த வருத்தத்திற்குரியது. இனி விதிமீறல் கண்டறியப்பட்டால், எவ்வித சமரசமுமின்றி வழக்கு பதிவு மற்றும் நிறுவனம் மூடுதல் போன்ற கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
– மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.