3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்! மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?
கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முற்றத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவரது கையில் அணிந்திருந்த 1.5 சவரன் எடையுள்ள தங்க வளையலை அருகில் கழற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தத் தங்க வளையலை காகம் ஒன்று தூக்கிச் சென்றிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், குடும்பத்தினரிடம் தெரிவித்து அருகிலிருந்த காகம் கூடு கட்டும் இடத்திற்கெல்லாம் சென்ற தேடி இருக்கிறார். இருப்பினும் அந்த வளையல் அவருக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் அவருக்கு ஒரு ஆச்சரியச் சம்பவம் தற்போது நடந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வளையல் மீண்டும் ருக்மணியின் கைக்கு வந்துள்ளது. ஒரு முறை திரிக்கலங்கோடு பொது நூலகத்தில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில், ”தொலைந்து போன தங்க வளையல் ஒன்று மீட்டப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த ருக்மணி, குடும்பத்தினருடன் சென்று தனது தங்க வளையலை அடையாளம் கண்டு இருக்கிறார்.
தங்க வளையல் எப்படி நூலகத்திற்குச் சென்றது?
மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு மாமரத்தின் கீழ் தங்கம் இருப்பது போன்று தென்பட்டதாக அன்வர் என்ற குடியிருப்பாளர் உணர்ந்திருக்கிறார். அன்வரின் மகள், தனது தந்தைக்கு மாம்பழங்களைச் சேகரிக்க உதவும் போது இதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. மாமரத்தின் கீழே விழுந்த காக்கைக்கூட்டின் எச்சங்களைப் பார்த்தபோது தங்கம் போன்ற உலோகப் பொருள் மின்னுவதைக் கண்ட அவர்கள் அதனை அடையாளம் காண முயன்றுள்ளனர்.
அதன் பின்னர் அது ஒரு தங்க வளையல் என்பதை உணர்ந்து அதனைப் பொதுவான இடத்தில் ஒப்படைக்க முடிவு செய்து, நூலகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதற்காக ஒரு விளம்பரத்தையும் செய்துள்ளனர். இதன்படி ருக்மணி அந்தத் தங்க வளையலை நூலகத்திடமிருந்து பெற்றிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தக் குடும்பத்தினர்களிடையே பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
— மு.குபேரன்